கார்த்திகை ஸ்பெஷல் : விளக்கு வைப்போம்... விளக்கு வைப்போம்!

கார்த்திகை ஸ்பெஷல் : விளக்கு வைப்போம்... விளக்கு வைப்போம்!

அகிலத்தையே ஆளும் தெய்வங்கள் நம் வீட்டுக்கும் வந்து நமக்கு அருள்பாலிப்பார்கள். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் துக்க இருளைப் போக்கி, விடியல் வெளிச்சத்தை வழங்கி வாழச் செய்வார்கள்.

தீபத்தின் பெருமையை இப்படி விளக்கிச் சொல்லும் சரிதம், மகாபாரதத்தில் உண்டு.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தர்மர் மற்றும் துரியோதனன் இரண்டு பேரின் இல்லங்களுக்கும் வருவதற்கு ஒப்புக்கொண்டார் அல்லவா! அப்போது கூடவே ஒரு நிபந்தனையும் வைத்தார். ‘உங்கள் வீடு முழுவதையும் ஏதேனும் ஒரு பொருளால் நிறைத்து வைக்கவேண்டும்’ என்றார்.

அதையடுத்து, துரியோதனன் வைக்கோலைக் கொண்டு வீட்டை நிறைத்து வைத்தானாம். கிருஷ்ணர் வந்தபோது, வீட்டுக் குள்ளேயே செல்லமுடியவில்லை. அப்படியே திரும்பிவிட்டார். பிறகு தருமரின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் நடுப்பகுதியில் அழகிய விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு, அது சுடர் விட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சுடரில் இருந்து புறப்பட்ட ஒளியானது, வீடு முழுவதும் நிறைந்து ஒளிமயமாகக் காட்சி தந்தது. மகிழ்ந்து போனார் பகவான்!

ஞானம் எனும் ஒளியைக் கொண்டு, அஞ்ஞானம் எனும் இருளை அகற்றலாம் என வலியுறுத்துகின்றனர் ஞானிகளும் முனிவர்களும்!

தெரிந்தோ தெரியாமலோ, ஒரு எலியானது விளக்கின் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓட, அப்படி ஓடியதால் திரி தூண்டப்பட, அணையும் நிலையில் இருந்த விளக்கு, சுடர் விட்டுப் பிரகாசித்தது. இதனால் அந்த எலிக்கு அடித்தது பேரதிர்ஷ்டம். சிவனருள் பெற்ற அந்த எலி, அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த சரிததத்தையும் நாம் அறிவோம்!

இது மட்டுமா?

‘சிவனுக்கு விளக்கேற்ற வேண்டும். கொஞ்சம் எண்ணெய் கொடுங்கள்’ என்று பார்வையற்ற நமிநந்தி அடிகள் வருவோர் போவோரையெல்லாம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார். சமணர்கள், நமிநந்தி அடிகள் எனும் சிவபக்தரைக் கேலி செய்தார்கள். “உலகையே கட்டியாளும் சிவனுக்கு விளக்கெரிக்க, எண்ணெயைப் பிச்சை கேட்கிறாயே. அகிலத்து மக்களுக்கே அருள் வழங்குபவன், எண்ணெய் இல்லாமல், விளக்கு எரிக்க முடியாமல் இருளில் இருக்கிறானா? இதோ... இந்தக் குளத்து நீரை எடுத்து, விளக்கில் ஊற்று. விளக்கை எரியச் செய்கிறானா சிவன் என்று பார்ப்போம்” எனக் கிண்டலடித்தார்கள். அதுவரை அழுதுகொண்டிருந்த நமிநந்தி அடிகள் ஆவேசமானார். கோபமானார். அழுதார். “என் சிவனே... என் சிவனே... என் சிவனே...” என்று கரம் குவித்து, பூமியில் விழுந்து வணங்கினார்.

“பக்தனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் ஈசன். உண்மையான பக்தி இருந்தால், இருளை ஒளியாக்குவார். ஒளியை இருளாக்குவார்” என்று சொல்லியபடியே, புகழ்பெற்ற அந்த கமலாலயக் குளத்தில் இறங்கினார். இரண்டு கைகளாலும் தண்ணீரை எடுத்துக் கொண்டு, சிவ சந்நிதி நோக்கி ஓடினார். அங்கே இருந்த விளக்கில், தட்டுத் தடுமாறியபடி தண்ணீரை ஊற்றினார். மீண்டும் தண்ணீர் எடுக்க குளத்துக்கு ஓடினார். தண்ணீர் எடுத்தார். வந்து விளக்கில் ஊற்றினார்.

“தென்னாடுடைய சிவனே. இந்த தண்ணீரானது எண்ணெயாகட்டும். இங்கே திருவிளக்கு சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும்” என்று சொல்லியபடி விளக்கேற்றினார். தண்ணீரைக் கொண்டு விளக்கு எரிந்தது. சுடர் விட்டு ஒளிர்ந்தது. அங்கே ஒளி கிடைத்தது, விளக்குக்கு மட்டுமல்ல... நமிநந்தி அடிகளின் கண்களுக்கும்தான்! எதிரில் சிவனார் திருக்காட்சி தந்தார். ரிஷபாரூடராக வந்து அருளினார். ஒரு விளக்கின் மூலம், தீபத்தின் மூலம் உண்மையான பக்தியை ஏற்றுக் கொண்டதைச் சொல்லுகிற சைவநெறிக் கதைகள் ஏராளம்.

வள்ளலார் சுவாமிகளின் ‘அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை’ எனும் உயரிய வாசகமே போதும்... தீப மகிமையை எடுத்துச் சொல்லும்! அருணகிரிநாதர் மட்டும் என்னவாம்... ‘தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார். மாணிக்கவாசகப் பெருமானும், “ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியானவனே” என்று நெகிழ்ந்து உருகியிருக்கிறார்.

மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருமானின் அடிமுடி தேடிக் கலைத்துப் போக... அங்கே ஒளி வடிவில், அக்னி ரூபத்தில், பிரம்மாண்டமாகக் காட்சி தந்த மலையை, திருவண்ணாமலையை எத்தனை முறை தரிசித்தாலும் சிலிர்த்துப் போவோம். மலையே சிவமென இருக்கும் திருத்தலத்தின் முக்கியமான விழாவே, திருக்கார்த்திகை தீபத் திருவிழாதான்!

அதனால்தான், அண்ணாமலை ஜோதி தரிசனம் திரிஜென்ம பாப விமோசனம் என்பார்கள். அதாவது வாழ்வில் ஒருமுறையேனும் திருவண்ணாமலை திருத்தலத்துக்கு வந்து, திருக்கார்த்திகை தீபஜோதியைக் கண்ணாரத் தரிசித்துவிடவேண்டும். அப்படித் தரிசித்தால், நம் மூன்று ஜென்மத்துப் பாவங்களும் விலகிவிடும் எனச் சொல்கிறது அருணாசலப் புராணம்!

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று போற்றப்படும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு தை மாதப் பிறப்பில் நடைபெறும் மகரஜோதியையும் அதன் தரிசனத்திலும் நெக்குருகிப் போவார்கள் லட்சக்கணக்கான பக்தர்கள். அப்போது அவர்களின் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ எனும் கோஷம் விண்ணையே தொட்டுவிடும்.

அதுமட்டுமா? தீபம் குறித்து இன்னொரு தாத்பரியமும் சொல்கிறது சாஸ்திரம். அதாவது தீபத்தின் சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளிப்படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். ஆகவே, நம் வீட்டில் ஏற்றி வைக்கப்படும் ஒவ்வொரு விளக்கிலும் விளக்கிலான தீபத்திலும் முப்பெருந்தேவியரும் எழுந்தருளி, நம்மையும் நம் குடும்பத்தையும் நம் சந்ததியினரையும் காத்தருள்கின்றனர் என்பது ஐதீகம்!

நாளை செவ்வாய்க்கிழமை டிசம்பர் 6-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருநாள். இந்த நன்னாளில், ஆத்மார்த்தமாக வீடு முழுக்க அகல்விளக்குகளை ஏற்றிவைப்போம். அகிலத்தையே ஆளும் தெய்வங்கள் நம் வீட்டுக்கும் வந்து நமக்கு அருள்பாலிப்பார்கள். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் துக்க இருளைப் போக்கி, விடியல் வெளிச்சத்தை வழங்கி வாழச் செய்வார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in