கஞ்சனூர் வந்தால் ஐஸ்வர்ய வளம் நிச்சயம்!

- சுக்கிர ஸ்தல பெருமை
சுக்கிர ஸ்தலம் கஞ்சனூர்
சுக்கிர ஸ்தலம் கஞ்சனூர்

கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சனூர் திருத்தலம். இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீஅக்னீஸ்வரர். இங்கே சுக்கிர பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. நவக்கிரக திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இது சுக்கிர பகவான் திருத்தலம் என்று போற்றப்படுகிறது. அம்பாளின் திருநாமம் ஸ்ரீகற்பகாம்பாள்.

புராதனப் பெருமை மிக்க திருத்தலம் இது. சுக்கிரன் வழிபட்டு வரம் பெற்ற தலம் இது. சுக்கிர யோகமும் சுக்கிர பலமும் தந்தருளும் இது என்றெல்லாம் போற்றுகின்றனர் பக்தர்கள்.

முன்னொரு காலத்தில், இந்தத் தலத்தில் வாசுதேவர் எனும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுதர்சனன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார். தீவிர வைஷ்ணவரான அப்பாவுக்கு மாறாக தீவிர சைவ பக்தனாகவே வாழ்ந்து வந்தான் சுதர்சனன். திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை,திருவாலங்காடு என்று சிவ க்ஷேத்திரங்களுக்குச் சென்று இரவு பள்ளியறை பூஜையின் போது கஞ்சனூர் தலத்துக்கு வந்து சிவனாரைத் தரிசித்துவிட்டு, வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் சுதர்சனன்.

வைணவக் குடும்பத்தில் பிறந்த சுதர்சனனின் செயல்பாடுகள், ஊரிலுள்ள வைணவர்களுக்குப் பிடிக்கவில்லை. திட்டித் தீர்த்தார்கள். பழுக்கக் காய்ச்சிய முக்காலியில் அமரச் சொல்லி தண்டனை கொடுத்தார்கள். அது குறித்தெல்லாம் கவலைப்படாத சுதர்சனன், பழுக்கக் காய்ச்சிய முக்காலியில் அமர்ந்தான். ’என் சிவமே என் சிவமே என் சிவமே...’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அவனை அந்தச் சூடு ஒன்றும் செய்யவில்லை. அப்போது சிவனார், தட்சிணாமூர்த்தியின் வடிவத்தில் வந்து சுதர்சனத்தை ஆட்கொண்டார். அப்போதிருந்து சுதர்சனத்துக்கு ஹரதத்தர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

அந்த ஊரில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். மிகுந்த சிவபக்தரான அவர், தினமும் சிவனாருக்கு உணவுகளைப் படைத்து வந்தார். அன்றைய இரவில் கனவில் வரும் சிவபெருமான், சிவபக்தருக்கு தான் சாப்பிடுவது போலான திருக்காட்சியைக் காட்டி அருளிக்கொண்டிருந்தார். ஒருநாள், செல்வந்தர் வழக்கம் போல் நைவேத்தியங்களைப் படைத்தார். அன்றிரவும் வந்தது. ஆனால், எப்போதும் வருகிற சிவபெருமான் வரவில்லை. துக்கித்துப் போனார் செல்வந்தர்.

கஞ்சனூர் திருத்தலம்
கஞ்சனூர் திருத்தலம்

சிவனாரிடம் முறையிட்டு அழுதார். “உன்னைப் போலவே சிறந்த பக்தரான ஹரதத்தன் ஏனும் ஏழையானவன், எனக்கு கஞ்சி வழங்கினான். அதை முழுவதுமாகச் சாப்பிட்டதால் உன்னுடைய உணவை எடுத்துக்கொள்ளவில்லை” என தெரிவித்தார். பக்தியே உயர்வு. உணவில் உயர்வுமில்லை, தாழ்வுமில்லை என உணர்ந்த செல்வந்தர், விடிந்ததும் ஹரதத்தரைச் சென்று சந்தித்து நமஸ்கரித்தார். பின்னர், ஹரதத்தரின் புகழ் ஊரெங்கும் பரவியது. இன்றைக்கும் கோயிலில் ஹரதத்தரின் சந்நிதி அமைந்திருக்கிறது.

அற்புதமான ஆலயம். கஞ்சமார நாயனார் அவதரித்த திருத்தலம் என்பதால், கஞ்சனூர் என ஊருக்குப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்பர் பெருமான் தேவாரம் பாடிய திருத்தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரை திருத்தலங்களில், இந்தத் தலத்தை 36-வது தலம் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம். மனக்கிலேசம் முதலான மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் சரியாகும். சகல ஐஸ்வர்யங்களும் நம்மை வந்தடையும் என்கிறார்கள் பக்தர்கள். திங்கட்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து தரிசிப்பது விசேஷம் என்கிறார்கள்.

சுக்கிர பகவான் சந்நிதி
சுக்கிர பகவான் சந்நிதி

செல்வ வளம் தரும் கஞ்சனூர் தலத்துக்கு சுக்கிரனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரரையும் சுக்கிரனையும் பிரார்த்திப்போம். ஐஸ்வர்ய கடாட்சம் பெறுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in