கந்தசஷ்டி: ஆதிசங்கரரின் ’சுப்ரமண்ய புஜங்கம்’ படித்தால் சுபிட்சம் அருளுவார் கந்தகுமாரன்!

கந்தசஷ்டி: ஆதிசங்கரரின்  ’சுப்ரமண்ய புஜங்கம்’ படித்தால் சுபிட்சம் அருளுவார் கந்தகுமாரன்!

முருகனின் ஆறுபடை வீடுகளில் கடலோரத்தில் இருக்கும் திருத்தலம் திருச்செந்தூர். ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்து’ என்றொரு வார்த்தை ரொம்பவே பிரபலம். கந்தசஷ்டி விழாவும் இங்கே பிரசித்தம். சஷ்டியின் போது நிகழ்த்துகிற சூரசம்ஹார வைபவமும் பிரபலம்.

இந்த நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு, சூரசம்ஹார தரிசனத்தைக் கண்டு சிலிர்ப்பார்கள். தவிர, முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் பல தலங்களில், கந்தசஷ்டி விழாவானது அமர்க்களமாக நடைபெறும்.

ஆதி சங்கர பகவத் பாதாள் என்கிற ஆதிசங்கரர், தெய்வங்கள் மீது பல வகையான ஸ்தோத்திரங்களை இயற்றி நமக்கு அருளியிருக்கிறார். அப்படித்தான் திருச்செந்தூர் செந்திலாண்டவர் மீதும் ஸ்துதி ஒன்றை இயற்றியுள்ளார். இதனை ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் என்கிறார் ஆதிசங்கரர். முருகக் கடவுள் மீது அவர் இயற்றிய ஸ்துதி ஒன்றே ஒன்றுதான். அதுதான் திருச்செந்தூரில் இருக்கும் செந்திலாண்டவர் மீதான ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம்.

சம்ஸ்கிருதத்தில் புஜங்கம் என்றால் பாம்பு என்று அர்த்தம். இந்த ஸ்லோகத்தின் வார்த்தைகள் (சந்தஸ்) பாம்பு வளைந்து வளைந்து இழுத்துக்கொண்டு போவதுபோல் அமைந்திருப்பதால் புஜங்கம் என்று இந்த ஸ்துதிக்கு பெயர். சுப்ரமண்யருக்கும் சர்ப்பத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. கர்நாடகா, ஆந்திரா முதலான பல மாநிலங்களில் முருகப்பெருமானை பாம்பு வடிவிலேயே வைத்து வழிபடுகின்றனர். ஆதிசங்கரர் சுப்ரமண்ய ஸ்தோத்திரத்தை புஜங்க சந்தத்தில் அமைத்தது விசேஷம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

சுப்ரமண்ய புஜங்கத்தில் மொத்தம் 33 ஸ்லோகங்கள் உள்ளன. எல்லா ஸ்லோகங்களுமே அற்புதமானவை. அவற்றுள் மூன்று ஸ்துதிகளை மட்டுமேனும் தொடர்ந்து சொல்லி வருவது ரொம்பவே நற்பலன்களைத் தரும் என்பது ஐதீகம். மாத சஷ்டியிலும் கந்த சஷ்டி விழாவான ஐப்பசி சஷ்டியிலும் செவ்வாய்க்கிழமைகளிலும் சுப்ரமண்ய புஜங்கத்தை பாராயணம் செய்து வந்தால், எதிரிகள் தொல்லையில் இருந்தும் தீய சக்திகளின் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம்.

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்

மனோஹாரி தேஹம் மஹச் சித்த கேஹம்

மஹீ தேவ தேவம் மஹா வேத பாவம்

மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்.

அதாவது, மிக அழகாக அமைந்த இந்த ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் முருகப்பெருமானின் பெருமைகளைக் கூறுகிறார். மயிலை வாகனமாக உடையவர், வேத தத்துவங்களின் சாராம்சமாகத் திகழ்பவர், அதீதமான சக்தியைப் பரப்பும் தேகம் கொண்டவர், யோகிகளின் இதயத்தில் வசிப்பவர், தேவர்களுக்கெல்லாம் தேவராகத் திகழ்பவர்,வேதப் பொருளாக விளங்குபவர், மஹா தேவனாகிய சிவபெருமானின் மைந்தர், இந்தப் பூவுலகைக் காக்கும் இறைவன் என்று துதிக்கிறார்.

ஸஹஸ்ராண்ட போக்தா

த்வயா சூர நாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரஸ்ய தைத்ய:

மமாந்தர்ஹ்ருதிஸ்தம்

மன: க்லேச மேகம்

ந ஹம்ஸி ப்ரபோ

கிம் கரோமி க்வ யாமி

அதாவது, ஆயிரம் உலகங்களை ஆட்சி செய்த சூர பத்மன் மற்றும் தாரகன், சிம்ம முகன் முதலான அசுரர்கள் உன்னால் கொல்லப்பட்டார்கள். என்னுடைய இருதயத்தில் இருக்கும் மனக் கவலைகளில் ஒன்றைக்கூட நீ அழிக்கவில்லை.

நான் என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? என்று நமக்காக, பக்தர்களுக்காக ஆதிசங்கரர் முருகக் கடவுளிடம் வினா எழுப்புகிறார். ஆதி சங்கரர் கேட்கும் கேள்விகள் அவருக்காக இல்லை. அவர் ஸர்வக்ஞன். சாதாரண பக்தன் நிலையிலிருந்து கேட்பதாக நாம் பாராயணம் செய்வதற்காக அருளியிருக்கிறார்.

அஹம் ஸர்வதா துக்கபாராவஸந்நோ

பவான் தீனபந்துஸ்த்வ

தன்யம் ந யாசே.

பவத் பக்திரோதம்

ஸதா க்லுப்த பாதம்

மமாதிம் த்ருதம் நாச

யோமா ஸுதத்வம்.

அதாவது, 'உமையின் மைந்தனே! நான் எப்போதும் துக்கத்தில் இருக்கிறேன். நீ ஆதரவற்றவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில் ஆர்வம் உடையவனாகத் திகழ்கிறாய். நான் உன்னைத் தவிர வேறு ஒருவரிடமும் பிரார்த்திக்க மாட்டேன். நிரந்தரமாக தொல்லைப்படுத்துவதும் உன்னிடம் பக்தி செய்வதற்கு தடையாகவும் உள்ள என்னுடைய மன உளைச்சலை வெகு சீக்கிரத்தில் போக்குவாயாக' என்கிறார் ஆதிசங்கரர்.

உலக மக்களின் லெளகீக சோகங்களில் இருந்து உய்வதற்காக ஆதிசங்கரர் திருவாய் மலர்ந்தருளிய புனிதமான சுப்ரமண்ய புஜங்கத்தை சிந்தனைகள் அகற்றி அனுதினமும் படித்து செந்தூர் செந்திலாண்டவரை மனமுருகிப் பிரார்த்தித்து வந்தாலே, நம் கஷ்டமெல்லாம் அகலும். துக்கமெல்லாம் தவிடுபொடியாகும் என்று விவரிக்கிறார் பாஸ்கர குருக்கள்.

கந்தசஷ்டி நன்னாளில், அவன் புகழ் பாடுவோம். கந்தனை மனமார வேண்டுவோம். இல்லத்தில் பூஜையறையில் அமர்ந்து சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் சொல்லுவோம். திருச்செந்தூரில் கடல் நீராடிய புண்ணியம் கிடைக்கப்பெறலாம். கந்தவேளின் அருளைப் பெற்று ஆனந்தமாகவும் சுபிட்சமாகவும் வாழலாம்!

சூரசம்ஹார நாயகனுக்கு அரோகரா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in