காக்கும் கார்த்திகைச் செல்வன் - 6

கந்தனின் அறுபடைவீடுகள்: 4 - சுவாமிமலை
காக்கும் கார்த்திகைச் செல்வன் - 6

கந்தப் பெருமானின் அறுபடைவீடுகள் வரிசையில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் 4-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் மீனாட்சி அம்பாளுடன் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளியுள்ளதால், மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

‘தகப்பன் சுவாமி’ என்று அழைக்கப்படும் முருகப் பெருமான், இக்கோயிலில் பிரம்மதேவர், பூமாதேவி, இந்திரன் ஆகியோருக்கு குருவாக இருந்து அருளியதால், இத்தலம், குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், சுவாமிநாதனாக அருள்பாலிப்பதால், சுவாமிமலை என்ற பெயர் நிலைத்துவிட்டது.

தல வரலாறு

படைப்புத் தொழிலில் தானே உயர்ந்தவர் என்ற ஆணவம் பிரம்மதேவரிடம் மேலோங்கி இருந்தது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என்று எண்ணிக் கொண்டார். ஒருசமயம், பிரம்மதேவர், சிவ பெருமானை தரிசிக்க கைலாய மலைக்குச் சென்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் முருகப் பெருமானைக் காண்கிறார். சிறு பாலகன் தானே என்று முருகப் பெருமானை அலட்சியமாகப் பார்க்கிறார் பிரம்மதேவர். இதுதான் தக்க சமயம் என்று கருதிய முருகப் பெருமான், பிரம்மதேவரிடம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் விளக்கும்படி கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மதேவரால் பதில் அளிக்க இயலவில்லை.

முருகப் பெருமான், பிரம்மதேவரின் நான்கு தலைகளிலும் குட்டினார். மேலும், தனது திருவடியால் உதைத்து பிரம்மதேவரை கிழே தள்ளி, சிறையில் அடைத்தார். அன்று முதல் படைப்புத் தொழிலை முருகப் பெருமானே செய்தார்.

தகவல் அறிந்த திருமால், பிரம்மதேவரை விடுவிக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று சிவபெருமானிடம் கூறுகிறார். பிரம்மதேவரை விடுவிக்க வேண்டும் என்று முருகப் பெருமானிடம் சிவபெருமான் கூறியதும், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப, பிரம்மதேவரை விடுதலை செய்தார் முருகப் பெருமான். மகிழ்ந்த சிவபெருமான், முருகப் பெருமானை தனது மடியில் தூக்கி வைத்து கொண்டு, பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கு சொல்லும்படி அவரை வேண்டுகிறார்.

முருகப் பெருமானும், வேறு யாரும் கேட்காதபடி, சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற தலமே சுவாமிமலை என்று அறியப்படுகிறது.

அறிந்தும் அறியாததுபோல்...

ஒருசமயம் பிருகு முனிவர் தான் ஜீவன் முக்தன் ஆவதற்காக சிவபெருமானை நோக்கித் தவம் புரிய எண்ணினார். தனது தவத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்று நினைத்த அவர், தன் தவத்தைத் தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்கக் கடவது என்று சாபமிட்டு தவம் செய்யத் தொடங்கினார். முனிவரின் தவாக்னி (தவ வெப்பம்) தேவர்களைப் பீடிக்க, அவர்கள் திருமாலுடன் சிவபெருமானை அணுகி இதற்கு ஒரு தீர்வு காணுமாறு வேண்டினர். உடனே சிவபெருமான் தனது திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார்.

முனிவரும் தவம் கலைந்து சுயநினைவு வந்து கண்விழிக்கிறார். தனக்கு முன்னால் சிவபெருமான் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். இருப்பினும் தன் தவத்தைக் கலைத்த சிவபெருமான் தன் சாபத்துக்கு ஆளானால் என்ன செய்வது என்று வருத்தம் கொண்டு, தன்னை மன்னித்தருள வேண்டுகிறார். முனிவரின் தவத்துக்கும், வாக்குக்கும் எவ்வித பழுதும் வராது என்று உறுதியளித்த சிவபெருமான், தக்க சமயத்தில் முனிவரின் வாக்கு பலிக்கும் என்கிறார். அதன்படி தன் மகனான சுவாமிநாதனிடம் முனிவரின் வாக்கை உண்மையாக்க சிவபெருமான் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார். பிரணவத்தின் பொருள் மறந்ததுபோல், மகனிடம் அதன் பொருளை அறிந்து கொள்கிறார்.

சுவாமிநாதனின் தோற்றம்

அப்படி, தந்தைக்கே பாடம் சொல்லிக் கொடுத்த சுப்பையா அருளும் தலம் என்பதால், இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மூலவர் 6 அடி உயரத்துடன், தலையில் உச்சிக் குடுமி, மார்பில் பூணூல் ஆகிவற்றைக் கொண்டு அருள்பாலிக்கிறார். வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடதுகையை தொடையில் வைத்தபடியும் யோக நிலையில் உள்ள குருநாதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் கந்தப் பெருமான்.

பீடம் சிவபீடமாகக் கருதப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளை ஒருங்கே கொண்ட வஜ்ர வேலுடன் சுவாமிநாதன் காணப்படுகிறார். இந்த வேல்தான் கோயிலின் கீழ் வீதியில் உள்ள நேத்ர தீர்த்தத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

கோயில் அமைப்பு

கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின் மீது இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது. முருகப் பெருமான் சந்நிதிக்குச் செல்ல 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். மகா மண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகர் என்று அழைக்கப்படும் நேத்ர விநாயகர் அருள்பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் தல விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி தேவி, நாரத முனிவர், வீரபாகு, அகத்திய முனிவர், அருணகிரி நாதர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன.

இத்தலத்தில் சுப்பிரமணியர் சந்நிதிக்கு எதிராக, மயிலுக்கு பதில் யானை வாகனம் உள்ளது. சுவாமிநாத பெருமானை வேண்டி, ஹரிகேசன் என்ற அரக்கனை வென்றதால், இந்திரன் தன் காணிக்கையாக ஐராவத யானையை முருகப் பெருமானுக்குத் தந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கோயில் சிறப்புகள்

பார்வதி தேவியின் சாபத்துக்கு ஆளான பூமாதேவி, இத்தலத்துக்கு வந்து சுவாமிநாதப் பெருமானை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். அதன்பின்னும் இத்தலத்தை விட்டுச் செல்ல விருப்பம் இல்லாததால், இங்கேயே தலவிருட்சமாக (நெல்லி மரம்) பூமாதேவி உள்ளார். இத்தலத்தில் வீபூதி அபிஷேகம் செய்யும்போது, பழுத்த ஞானியாக முருகப் பெருமான் காட்சி அளிக்கிறார். சந்தன அபிஷேகத்தின்போது பாலசுப்பிரமணியனாக கம்பீரமாக காட்சி அருள்கிறார்.

சுவாமிமலையின் பெருமைகள் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் பாடியுள்ளனர்.

கருவறையில் மூலவர் நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. இதன் மூலம் சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு அல்லர் என்பது புலனாகிறது.

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்றாக போற்றப்படுகிறது. குடந்தை ஆதி கும்பேஸ்வரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலச நாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாத சுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், சுவாமிமலை சுந்தரேஸ்வர சுவாமி கோயில் ஆகியன கும்பகோணம் சப்தஸ்தான தலங்களாக போற்றப்படுகின்றன. 2016-ம் ஆண்டு மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குப் பிறகு ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா நடைபெற்றது. அப்போது சப்தஸ்தான பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

இக்கோயில் அருகே மற்றொரு முருகப் பெருமான் தலமான ஏரகம் கந்தநாதசுவாமி கோயில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக் கோயிலில் இருந்து பிரியும் சாலையில் ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் ஏரகம் (திருவேரகம்) கோயில் அமைந்துள்ளது.

திருப்படி பூஜை

மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், குன்றின் மீது அமைந்துள்ள கோயிலாக சுமாமி மலை கோயில் உள்ளது. 60 படிகள் ஏறி இத்தலத்துக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தமிழ் வருடத்தைக் குறிக்கிறது. தமிழ் வருடங்களின் தேவதைகள் கந்தப் பெருமானை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக ஐதீகம். இதன் காரணமாக, புத்தாண்டு தினங்களில், இந்தப் படிகளுக்கு வஸ்திரம் அணிவித்து, தேங்காய், பழங்கள் படைத்து பாடல்கள் பாடி பூஜை செய்யப்படுகிறது. திருப்படி பூஜை என்று அழைக்கப்படும் இந்த பூஜை இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

நேர்த்திக் கடன்

திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் தீர்க்க ஆயுள், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர். சுவாமிநாதனை வழிபட்டால் அனைத்துவித இடையூறுகள், நோய்கள், செய்த பாவங்களால் ஏற்படும் தீமைகள் விலகும். விலங்குகள், பூதம், நெருப்பு, நீர், வெள்ளம் ஆகியவற்றால் ஏற்படும் இன்னல்கள் விலகும் என்பது ஐதீகம்.

மொட்டை போடுதல், சந்தனக் காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்றவற்றை செய்து பக்தர்கள் இங்கு முருகனை வழிபடுகின்றனர். எதிரிகளால் ஏற்படும் தீமைகள் விலகவும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வீடு வாங்க முயற்சி செய்யும் பக்தர்கள், நேர்த்திக் கடனாக இத்தலத்தில் தங்கத் தேர் இழுப்பது வழக்கம்.

திருவிழாக்கள்

சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி நவராத்திரி பெருவிழா, ஐப்பசி கந்தசஷ்டி பெருவிழா, மார்கழி திருவாதிரைத் திருவிழா ஆகியன இங்கே தலா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசப் பெருவிழா, பங்குனி வள்ளித் திருக்கல்யாண விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும், கிருத்திகை, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, கார்த்திகை, விசாக நட்சத்திரம், தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், செவ்வாய்க் கிழமை தினங்களில் இங்கே முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in