மயிலாடுதுறை காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்: பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறை காவிரியில் 
கடைமுக தீர்த்தவாரி உற்சவம்: பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான  கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று  வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் துலா கட்டத்தில் புனித நீராடி வருகின்றனர்.

மயிலாடுதுறை  காவிரி ஆற்றின் கரையில் உள்ள  துலாகட்டம் புராண புண்ணிய பெருமை வாய்ந்தது. பக்தர்கள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள புனிதநீராடியதால்  உண்டான பாவச்சுமைகளின் காரணமாக கங்கை நதி  கருமை நிறமாக மாறியது. அதனால் சிவபெருமானிடம் சென்று கங்கை நதி  பிரார்த்தித்ததாகவும், அப்போது, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் புனித நீராடி வந்தால்  பாவச்சுமைகள் நீங்கி, கருமை நிறம் அகலும் என சிவபெருமான் அருளினார்.  அதன்படி கங்கையும் இங்கு வந்து நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம்.

இந்த ஐதீகத் திருவிழா மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது, மயிலாடுதுறையை சுற்றியுள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில், ஐயாறப்பர் கோயில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரர் கோயில், துலாக்கட்டம் விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருளி, ரிஷப தீர்த்தக்காவிரியில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 

இதேபோல், காவிரி நான்குகால் மண்டபத்தில் பரிமள ரெங்கநாதர் கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறும். இந்த உற்சவத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடிச் செல்வர். அதன்படு இந்த ஆண்டு  ஐப்பசி 1-ம் தேதி மாதப்பிறப்பு தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி  ஐப்பசி 30-ம் தேதியையொட்டி இன்று  நடைபெறுகிறது. 

அனைத்து கோயில்களில் இருந்தும் சுவாமி புறப்பாடு நடைபெற்று, மதியம் 1.30 மணிக்குப் பிறகு தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க அதிகாரி முதலில் பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் நீராடி வருகிறார்கள். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் காவிரி துலாக்கட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

துலா உற்சவத்திற்காக  இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரில் ஏற்படாமல் காவிரியில் புனித நீராடுவதற்கும், உடை மாற்றுவதற்கும் சிறப்பு  ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா  தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 250 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in