காக்கும் கார்த்திகைச் செல்வன் - 9

கந்தனின் திருத்தலங்கள்: 1. திருமலை முத்துக்குமார சுவாமி கோயில்
முத்துக்குமார சுவாமி
முத்துக்குமார சுவாமி

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலை முத்துக்குமார சுவாமி கோயில் ஒரு தேவார வைப்புத் தலமாகும். மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களில் ‘ஓம்’ என்ற வடிவில் உள்ள ஒரு சிறிய குன்றில் இக்கோயில் அமைந்துள்ளது. செங்கோட்டை நகரில் இருந்து வடதிசையில் 5 கி.மீ தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சுரண்டையில் இருந்து 26 கி.மீ தூரம்.

இங்கே மூக்கன் என்று அழைக்கப்படும் மூலவரை தரிசிக்க மலைமீது பல படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். மலைமீது திருமலைக் காளியும் அருள்பாலிக்கிறார். விநாயகர் சந்நிதிக்குச் செல்ல 16 படிகள் உள்ளன. இவை 16 செல்வங்களை உணர்த்துவதாக ஐதீகம்.

தல வரலாறு

ஒரு காலத்தில் திருமலைக் கோயிலில் வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வந்து வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பூவன் பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தார். ஒரு நாள் நண்பகல் பூஜைக்குப் பின், பூவன் பட்டர் புளியமரத்தடியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முருகப் பெருமான் அவரது கனவில் எழுந்தருளி, “இம்மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவில் கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவத்தில் எழுந்தருளியுள்ளேன். நீர் உடனே அங்கு சென்று, எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் ஒரு குழியைத் தோண்டிப் பார்க்கவும். அதற்குள் இருக்கும் விக்கிரகத்தை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த வேண்டும்” என்றார்.

அதன்படி அரசருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, பூவன் பட்டர் முருகப் பெருமானின் விக்கிரகத்தை எடுத்து வந்து திருமலையில் பிரதிஷ்டை செய்தார். இத்தல முருகப் பெருமானை வணங்கினால், அனைத்து இன்னல்களும் தீர்ந்து, நற்பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

கோயில் அமைப்பும் சிறப்பும்

சபரிமலை ஐயப்பன் கோயில் அமைத்த பந்தள மன்னர், பூவன் பட்டரின் வேண்டுகோளை ஏற்று இக்கோயிலை எழுப்பியுள்ளார். இக்கோயிலைச் சுற்றி ஆரியங்காவு, அச்சன் கோயில், குளத்துப்புழை ஐயப்பன் தலங்கள் அமைந்துள்ளன.

சிவகாமி அம்மையார் என்பவருக்கு அற்புத சாதனை நிகழ்த்தும் சக்தியை முருகப் பெருமான் அருளியதாகக் கூறப்படுகிறது. திருமலைக் கோயில் அமைப்பதற்காக திருப்பணிகள் நடைபெறும் காலத்தில் கல் தூண்களையும், உத்தரங்களையும் மலை மீது இழுத்துச் செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. பெரிய கயிறுகள் கிடைக்காத சமயத்தில் பனைநார் கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. சமயத்தில் இழுத்துச் செல்லப்படும் தூண்களின் பாரம் தாங்காமல் கயிறுகள் அறுந்து, தூண்கள் கீழே உருண்டு ஓடும். அவ்வாறு கீழே ஓடி வரும் தூண்கள், உத்தரங்களை சிவகாமி அம்மையார் தன் உயிரையும் பொருட்படுத்தாது தடுத்து நிறுத்துவார். மறுபடியும் அவை மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பார்.

பண்மொழி அருகே உள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். அவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை வரம் கிட்டவில்லை. இதைத் தொடர்ந்து சிவகாமி அம்மையார், முருகப் பெருமானை வணங்கி, கோயிலில் கல் மண்டபம் அமைக்க, கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி மேலே இழுத்துச் செல்வார்.

தான் கட்டிய கல் மண்டபத்தில் தங்கிய வரதர் மஸ்தான் என்ற ஆன்மிக குருநாதரிடம் தன் இல்லத்தில் தவழ்ந்து விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தத்தைத் தெரிவித்தார் சிவகாமி அம்மையார். அவர் திருமலை முருகனையே குழந்தையாக ஏற்றுக் கொள்ளும்படி பணித்தார். குருநாதரின் வார்த்தைகளைக் கேட்ட சிவகாமி அம்மையார், திருமலை முருகனையே தன் குழந்தையாக ஏற்று, தன் அனைத்து சொத்துகளையும் முருகனுக்கே எழுதி வைத்தார். மேலும், ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்டு, முருகனுக்கே எழுதி வைத்தார். தன் வாழ்க்கையின் நிறைவில் முருகனுக்கே தொண்டு செய்து துறவறம் பூண்டதால், ‘சிவகாமி பரதேசி அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். இவருக்கு கோயிலில் சிலை இருப்பது நினைவுகூரத்தக்கது.

திருமலை 500 அடி உயரமுடையது, 544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும். இரண்டு மலைகள் இந்த மலையைத் தொட்டுக் கொண்டு இருப்பதால் இம்மலைக்கு ‘திரிகூட மலை’ என்று பெயர். மலைப் பாதையின் தொடக்கத்தில் வல்லப விநாயகர் சந்நிதி உள்ளது. அவரை வணங்கிச் சென்றதும் மலையடிவாரத்தில் பாத மண்டபத்தை தரிசித்து படிகளில் ஏற வேண்டும். பாத மண்டபத்தில் இரண்டு பாதங்கள் உள்ளன.. அவற்றை வணங்கிச் சென்றால் இடும்பன் சந்நிதியைக் காணலாம்.

முத்துக்குமார சுவாமி தோற்றம்

திருமலை முத்துக்குமார சுவாமி 4 கரங்களுடன் மேல் நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதம், மேல் நோக்கிய இடது கையில் வச்சிராயுதம், கீழ் நோக்கிய வலது கையில் அபயக் கரம், கீழ் நோக்கிய இடது கையில் சிம்ம கர்ண முத்திரை கொண்டு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல முருகனுக்கு பார்வதி தேவி தன் வாயால் அருளிச் செய்த ‘தேவி பிரசன்ன குமார விதி’ப்படி 8 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் பள்ளியறையில் சுவாமியை பாதுகை செய்யாமல், மூலவருக்கு பால், பழம், ஊஞ்சலுடன் சயன பூஜை செய்வது தனிச்சிறப்பு.

சிவகாமி அம்மை
சிவகாமி அம்மை

திருமலையில் காவல் தெய்வமாக போற்றப்படும் திருமலைக் காளி, திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் வடதிசை நோக்கி தனிகோயிலில் அருள்பாலிக்கிறார். உட்பிரகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி ஐந்தரை அடி உயர கால பைரவர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

மூலவர் ‘மூக்கன்’

முருகப் பெருமான் சுட்டிக் காட்டிய இடத்துக்குச் சென்று பூவன் பட்டர் தோண்டியபோது, முருகப் பெருமானின் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த உடைசல் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால், கிராமத்து மக்கள் முருகன் என்பதற்கு பதிலாக ‘மூக்கன்’ என்று செல்லமாக அழைத்தனர். இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்குக்குத்தி மூக்கன், மூக்கம்மாள், மூக்காயி என்று பெயர் வைப்பது நடைபெறுகிறது.

அஷ்ட பத்ம குளம்

மலை உச்சியில் உள்ள தீர்த்தக் குளம் ‘அஷ்ட பத்ம குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் தினமும் ஒரு குவளை மலர் மட்டுமே இக்குளத்தில் பூத்தது என்று கூறப்படுகிறது. அதை கரையில் இருந்த சப்த கன்னியர் பறித்து முருகப் பெருமானை பூஜித்தனர். பொதுவாக சிவபெருமான் கோயில்கொண்ட திருத்தலங்களில் மட்டுமே காணப்படும் சப்த கன்னியர் திருமலை முருகன் தலத்திலும் காணப்படுவது தனிச்சிறப்பு. தற்போது இக்குளம் ‘பூஞ்சுனை’ என்று அழைக்கப்படுகிறது.

விசாக நட்சத்திரக் கோயில்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்வது சிறப்பைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாக கூறப்படுகின்றன. அந்நாட்களில் சிறந்த மூலிகைச் செடிகளாகக் கருதப்படும் ஓடவள்ளி, நளமூலிகை, திருமலைச் செடிகள் இம்மலையில் நன்கு செழித்து வளர்ந்ததாக அறியப்படுகிறது. மேலும், செல்வச் செழிப்புக்காக திருமலைச் செடியின் வேரையும் தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து பூஜைகள் நடைபெற்றதாக வரலாற்றுச் செய்திகள் உரைக்கின்றன.

‘வி’ என்றால் மேலான என்றும், ‘சாகம்’ என்றால் ஜோதி என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. விசாக நட்சத்திரம், விமல சாகம், விபவ சாகம், விபுல சாகம் என்ற மூன்று வகை ஒளிக்கிரணங்களைக் கொண்டதாகவும், இந்த மூன்று வகை கிரணங்களும் இம்மலை மீது படுவதாலும் விசாக நட்சத்திர கோயில் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.

நேர்த்திக் கடன்

ஒவ்வொரு மாதப்பிறப்பு தினத்திலும், பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இங்கு அன்னதானம் செய்வது வழக்கமாக உள்ளது. இக்கோயிலுக்கு வரும் அனைவருமே சுந்தரர் பாடலைப் பாடி தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

‘ஈழநாட்டு மாதோட்டந் தென்னாடு ராமேஸ்வரம்

சோழநாட்டுத் துருத்தி நெய்த்தானந் திருமலை

ஆழியூரன நாட்டுக் கெல்லாம் அணியாகிய

கீழையில்லாரனார்க்கிடம் கிள்ளிகுடியதே’

- என்று பாடி கோயில் பிரகாரங்களில் தீபம் ஏற்றுகின்றனர்.

வேண்டியதை எல்லாம் கொடுக்கும் அருட்கடவுளாக முருகப் பெருமான் விளங்குவதால், இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. திருப்பதி திருமலை சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்று கூறுவதைப் போல, இந்த திருமலைக்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டாலும் திருப்பம் ஏற்படும் என்பது ஐதீகம். மேலும், இத்தலத்துக்கு வந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதும் வழக்கமாக உள்ளது.

திருவிழாக்கள்

சித்திரை முதல் தேதியில் படித் திருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகை மாத தெப்பம், தைப்பூச தினங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in