காக்கும் கார்த்திகைச் செல்வன் - 7

கந்தனின் அறுபடைவீடுகள்; 5 - திருத்தணிகை
காக்கும் கார்த்திகைச் செல்வன் - 7

கந்தப் பெருமானின் அறுபடைவீடுகள் வரிசையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயில் 5-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளியை மணந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் வருடத்தின் 365 நாட்களைக் குறிப்பிடும்படியாக 365 படிகளைக் கொண்டது தனிச்சிறப்பு.

அருணகிரிநாதராலும், முத்துசுவாமி தீட்சிதராலும் போற்றிப் பாடப்பட்ட இத்தலம் தணிகை முருகன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. விஜய நகர மன்னர்களாலும் உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்ட இத்தலம் குறித்து சங்க காலப் புலவர் நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் குறிப்புகள் காணப்படுகின்றன.

தல வரலாறு

திருத்தணிகை மலைப்பகுதியில் குறவர் இனத்தவர்கள் வசித்து வந்தனர். அவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினார். ஒருசமயம் காட்டுப்பகுதியில் உலவிக் கொண்டிருந்தபோது, வள்ளிக்கொடியின் கீழே பெண் குழந்தையைக் காண்கிறார். அக்குழந்தைக்கு வள்ளி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். காலப்போக்கில் வள்ளி வளர்ந்ததும், தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியில் அமர்த்தப்பட்டாள்.

தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் குறிக்கும். இது உலகப்பற்று அல்லது ஆசை என்று அறியப்படுகிறது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் (தானியங்கள்) நமக்கு உரியது அல்ல என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக பறவைகள் அவற்றை உண்பதற்கு பறந்து வருகின்றன. இப்பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கின்றன. உலக உயிர்கள் (ஜீவாத்மா) இறைவன் என்று அறியாமல், பறவைகளை கற்கலால் அடித்து துன்புறுத்துகின்றன. இந்த உலகமே நிரந்தரம் என்று நினைக்கும் உயிர்களுக்கு தவம், ஞானம், தியானம் பற்றியெல்லாம் அறிய வாய்ப்பில்லை.

யோகிகள், முனிவர்கள் அவனை அடைவதற்கு உரிய வழியை தேர்ந்தெடுத்து அவன் திருவடி நிழலில் இளைப்பாறுகின்றனர். ஆனால், உலக வாழ்வில் பற்றுள்ளவர்கள், இவ்வுலகில் நீண்ட நாட்கள் இருக்கப் போவதாக நினைத்து, நிறைய பொன்னையும், பொருளையும் சேர்க்கின்றனர். இத்தகைய உயிர்களையும் ஆட்கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்புவான்.

அப்படி வள்ளியை ஆட்கொள்ள எண்ணிய முருகப் பெருமான், முதியவர் வேடத்தில் வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத வள்ளி, அவரைக் கண்டதும் பயந்து ஓடினாள். யானை மூலம் வள்ளிக்கு பயத்தை உண்டாக்கினார் முருகன். அவள் அருகில் சென்றார். முதியவரின் ஸ்பரிசம் பட்டதும் ஏதோ ஞானோதயம் வந்ததைப் போன்று உணர்ந்த வள்ளி, அவருடன் ஐக்கியமானாள்.

முருகப் பெருமானுடன் வள்ளி ஐக்கியமானதை திருமணமாகக் கருதி வள்ளித் திருமணம் நடத்தப்படுகிறது. வள்ளியின் திருமணம் நடைபெற்ற தலமாக திருத்தணி திருத்தலம் கருதப்படுகிறது. மேலும், முருகப் பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால், இத்தலம் ‘தணிகை மலை’ என்றும், ’திருத்தணி’ என்றும் அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

தேவர்களின் பயம் நீங்கிய இடம், முனிவர்களின் தவம் சிறப்பிக்கப்பட்ட இடம், அடியார்களின் கவலை, துன்பம் முதலியவற்றை தணிக்கும் இடம் ஆகிய சிறப்புகளைப் பெற்றதால் திருத்தணி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.

இம்மலையின் வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலை என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகின்றன. சரவணப் பொய்கை என்ற குமாரத் தீர்த்தம், மலையடிவாரத்தில் உள்ளது. மேலும், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், மடசெட்டிக் குளம், நல்லாங்குளம் ஆகிய தீர்த்தங்களும் அமைந்துள்ளன.

தணிகை மலையில் அமைந்துள்ள இக்கோயில் 5 அடுக்கு கோபுரம் மற்றும் 4 வளாகங்களைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது, குன்றுதோறாடல் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் விஷ்ணு துர்க்கை கோயில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் காணப்படும் ஆபத்சகாய விநாயகரை, முருக வழிபாடு நிறைவு பெற்றதும்தான் வணங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக முருகப் பெருமான் வேலுடன் காணப்படுவார். ஆனால் இங்கே, வலக்கையில் சக்தி ஹஸ்தம் என்று அழைக்கப்படும் வஜ்ரவேலுடன், இடக்கையில் தொடையில் வைத்து ஞான சக்திதரராக அருள்பாலிக்கிறார். (வஜ்ரவேல் என்பது இடிபோன்ற ஓசை எழுப்பும் சூலம் போன்ற கருவி). அலங்காரத்தின்போது மட்டுமே வேல், சேவல் கொடி வைக்கப்படுகிறது. முருகப் பெருமான் சந்நிதிக்குப் பின்புறம் வள்ளி, தெய்வானை சந்நிதிகள் உள்ளன. முருகப் பெருமானுக்கு செய்யப்படும் பூஜை ‘குமார சந்திர’ முறைப்படி நடைபெறுகிறது.

முருகப் பெருமான் கோபம் தணிந்து இக்கோயிலில் அருள்பாலிப்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்றைய தினம் அவரை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. இதற்காக 1,000 கிலோ மலர்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

அசுரனுடன் மோதியதால், இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) காணப்படுகிறது. மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை காணப்படுவது தனிச்சிறப்பாகும். தெய்வானையை முருகப் பெருமானுக்கு மணம் முடித்தபோது, இந்திரன் ஐராவதத்தை சீதனமாகக் கொடுத்தார். இதனால் தேவலோகத்தின் செல்வம் குறைந்ததால், ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கித் திருப்ப முருகப் பெருமான் சம்மதம் தெரிவித்தார். இதனால் ஐராவதம் தேவலோகத்தை (கிழக்கு) நோக்கி உள்ளது.

யானை வடிவில் விநாயகப் பெருமானே வந்து முருகப் பெருமான் - வள்ளி திருமணத்துக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது. திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகப் பெருமானை மணந்து கொள்ள விருப்பம் கொண்டனர். தங்கள் எண்ணம் ஈடேற முருகப் பெருமானை நோக்கி தவம் மேற்கொண்டனர். அமுதவல்லி இந்திரன் மகள் தெய்வயானையாகவும், சுந்தரவல்லி நம்பிராஜன் வளர்ப்பு மகள் வள்ளியாகவும் வளர்ந்து முருகப் பெருமானை மணம் புரிகின்றனர். சகோதரிகளான இருவரும் ஒரே அம்பிகையாக ‘கஜவள்ளி’ என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் வள்ளிக்கு உரிய தாமரையும், இடது கையில் தெய்வயானைக்கு உரிய நீலோத்பவ மலரை கொண்டுள்ளார். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தங்கத்தேரில் கஜவள்ளி எழுந்தருள்வது வழக்கம். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத நாட்களில் கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

இந்திரன் காணிக்கையாக அளித்த சந்தனக்கல்லில் அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே முருகப் பெருமானுக்கு சாத்தப்படுகிறது. திருவிழாக் காலங்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும் சந்தனத்தை, பக்தர்கள் தங்கள் நோய் தீரவேண்டி, நீரில் கரைத்துக் குடிப்பது உண்டு.

மகா சிவராத்திரி தினத்தில் இங்கே முருகப் பெருமானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெறும். பெருமாள் கோயில்களைப் போன்று முருகப் பெருமானின் திருப்பாத சின்னத்தை (சடாரி) பக்தர்கள் தலையில் வைத்து ஆசி வழங்குவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

மூலஸ்தானத்தின் பின்புறம் உள்ள சுவரில் குழந்தை வடிவில் கையில் அட்சர மாலை, கமண்டலத்துடன் ஆதி பாலசுப்பிரமணியர் உள்ளார். இவரே வள்ளி திருமணத்துக்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். குளிர்காலம் என்பதால் மார்கழித் திருவாதிரை தினத்தில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஆடிக் கிருத்திகை

ஆடிக் கிருத்திகை தினத்தில் இந்திரன் முருகப் பெருமானை வழிபட்டதால், இத்தலத்தில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின்போது சுவாமி, மலை அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கைக்கு எழுந்தருள்கிறார். இந்திரன், முருகப் பெருமானுக்கு ‘கல்ஹார புஷ்பம்’ என்ற மலரைச் சூட்டி வழிபட்டதால் இத்தலத்தில் பக்தர்கள் மலர்க் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

திருப்படி பூஜை

வருடத்தில் 365 நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் இக்கோயில் அமைந்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு தினத்துக்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பிறகு முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தமிழ் புத்தாண்டு தினத்தில் 1,008 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

நேர்த்திக் கடன்

திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்கவும் ஆயுள் வேண்டியும் பக்தர்கள் இங்குவந்து வழிபாடு செய்கின்றனர். கோபம், மனக்குழப்பம் ஆகியவற்றை முருகப் பெருமான் தீர்த்தருள்வார் என்பது ஐதீகம். முருகப் பெருமானை வேண்டி பக்தர்கள் மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்குதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களைச் செலுத்துகிறார்கள். பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனக் காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குதல், நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களையும் செலுத்துகிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் செய்வதுண்டு. வசதிபடைத்தவர்கள், கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு வழிபாடு செய்வர்.

திருவிழாக்கள்

மாசித் திருவிழா (வள்ளி திருமணம்), சித்திரைத் திருவிழா (தெய்வானை திருமணம்) இங்கே தலா 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திர தினத்தில் திருத்தணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தீபாவளி, பொங்கல், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வேடன் வடிவில் சென்று முருகப் பெருமான் வள்ளியை மணந்ததால் மாசி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருள்கிறார் கந்தப் பெருமான்.

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடித் தெப்பத் திருவிழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in