காக்கும் கார்த்திகைச் செல்வன் : 4

கந்தனின் அறுபடைவீடுகள் - 2 திருச்செந்தூர்
காக்கும் கார்த்திகைச் செல்வன் : 4

தூத்துக்குடி மாவட்டம், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகப் போற்றப்படுகிறது. தேவார வைப்புத் தலமாக கருதப்படும் இது ‘சேயோன்’ என்று பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

தல வரலாறு

சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல இன்னல்கள் அளித்து வந்ததால், அவனை அழிக்கும்படி அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளை உண்டாக்கி, அவற்றில் இருந்து முருகப் பெருமானை அவதரிக்கச் செய்தார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று, முருகப் பெருமான், சூரபத்மனை அழிக்கும்பொருட்டு, திருச்செந்தூர் வந்தார்.

அதேசமயம், முருகப் பெருமானின் தரிசனத்துக்காக, தேவர்களின் குரு, வியாழ பகவான், இத்தலத்தில் தவம் மேற்கொண்டார். அவருக்கு காட்சி அளித்த முருகப் பெருமான், இத்தலத்தில் தங்கினார். வியாழ பகவான் மூலம் அசுரர்களைப் பற்றி அறிந்த முருகப் பெருமான், தனது படைத்தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார்.

ஆனால், யாருடைய பேச்சுக்கும் அடங்காமல் சூரபத்மன் இருந்ததால், முருகப் பெருமான் தனது படைகளுடன் சென்று அவனை வதம் செய்தார். தனக்கு காட்சியளித்த அதே இடத்தில் எழுந்தருளுமாறு, முருகப் பெருமானை, வியாழ பகவான் கேட்டுக்கொள்ள, முருகப் பெருமானும் இத்தலத்தில் தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார். மகிழ்ச்சி அடைந்த வியாழ பகவான், விஸ்வகர்மாவை அழைத்து, இத்தலத்தில் முருகப் பெருமானுக்காக கோயில் எழுப்பினார்.

சூரபத்மனை வீழ்த்தி, ஆட்கொண்டதால், முருகப் பெருமான் ‘ஜெயந்திநாதர்’ என்று அழைக்கப்பட்டார். அப்பெயரே மருவி ‘செந்தில்நாதர்’ ஆனது. தலமும் ‘ஜெயந்திபுரம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘திருச்செந்தூர்’ ஆனது.

கந்தசஷ்டி விழா

ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி தினத்தில் சூரபத்மனை முருகப் பெருமான் ஆட்கொண்டார். இந்த நாளே கந்தசஷ்டி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தலத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றதால், இந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. மகாபாரதம், கந்த புராணம் ஆகிய நூல்கள், கந்தசஷ்டி விழாவின் சிறப்புகள் குறித்து மேலும் விவரிக்கின்றன.

முனிவர்கள் சிலர் உலக நன்மைக்காக ஒருவர் அவதரிக்க வேண்டும் என்று யாகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் யாகத்தைத் தொடங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, தினமும் ஒரு வித்து சேகரிக்கப்பட்டது. அவை அனைத்தையும் ஆறாம் நாளில் ஒன்றிணைத்தபோது, முருகப் பெருமான் அவதரித்தார் என்று மகாபாரதம் கூறுகிறது.

கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் தேவர்கள், தாங்கள் அசுரர்களை எதிர்க்கும் வல்லமையைப் பெற வேண்டும் என்று கருதி, ஐப்பசி மாத வளர்பிறையில் இருந்து 6 நாட்கள் கும்பத்தில் முருகப் பெருமானை எழுந்தருளச் செய்து நோன்பு இருந்தனர். முருகப் பெருமானும் அவர்களுக்கு அருள்புரிந்தார். இதை நினைவுபடுத்தும் விதமாக ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதாக கந்த புராணம் தெரிவிக்கிறது.

கந்தசஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில் ஹோம குண்டத்துக்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் எழுந்தருள்வார். முருகனின் வெற்றிக்காக அமைக்கப்பட்ட அறுகோண ஹோம குண்டத்தைச் சுற்றிலும் சிவபெருமான், பார்வதிதேவி, நான்மறைகள், முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை, திருமால், விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரிய பகவான், அஷ்ட திக்பாலகர்கள், துவார பாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வது வழக்கம்.

உச்சிக்காலம் வரை நடைபெறும் யாகசாலை பூஜை நிறைவடைந்ததும் ஜெயந்திநாதர் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருள்வார். 6-ம் நாளில் முருகப் பெருமான் மட்டும் கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். பின்னர் வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

சாயா அபிஷேகம்

மகாதேவர் சந்நிதிக்கு முருகப் பெருமான் (ஜெயந்திநாதர்) திரும்பியதும், முருகப் பெருமான் முன்னர் ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு, அதில் தெரியும் அவரது பிம்பத்துக்கு அபிஷேகம் செய்யப்படும். இதற்கு ‘சாயா அபிஷேகம்’ என்று பெயர். ‘சாயா’ என்றால் ‘நிழல்’. போரில் வெற்றி பெற்ற முருகப் பெருமானை குளிர்விக்கும் விதமாக நடைபெறும் இந்த அபிஷேகத்தை அவரே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்த நிகழ்வுக்குப் பிறகு முருகப் பெருமான் தனது சந்நிதிக்குத் திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவு பெறுகிறது.

தெய்வானை திருமணம்

சூரசம்ஹார வைபவத்துக்கு மறுநாள் (கந்தசஷ்டி உற்சவம் 7-ம் நாள்) முருகப் பெருமானுக்கும் இந்திரன் மகள் தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறும். சூரபத்மனை சம்ஹாரம் செய்த முருகப் பெருமானுக்கு, இந்திரன் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து தந்ததுடன், தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். முருகப் பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால், திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் இத்திருமணம் நடைபெறுகிறது.

காலையில் தெய்வானை, தபசு மண்டபத்துக்குச் சென்று, முருகப் பெருமானை மணந்து கொள்ள வேண்டி தவம் மேற்கொள்வாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் உற்சவர் வடிவம்) மயில் வாகனத்தில் தபசு மண்டபத்துக்கு எழுந்தருளி தெய்வானையுடன் நிச்சயம் செய்து கொள்வார். அன்றைய தினம் நள்ளிரவில் முருகப் பெருமானும் தெய்வானையும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளியதும், திருமணம் நடைபெறும். மறுநாள் தெய்வானையுடன் முருகப் பெருமான் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களுக்கு அங்கு, முருகப் பெருமானுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.

கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளில் முருகப் பெருமான், தெய்வானையுடன் வீதியுலா காண்பார். அப்போது, தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகப் பெருமானை வரவேற்கும் விதமாக பக்தர்கள் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

முருகப் பெருமான் சிவபெருமானின் மைந்தனாக அவதரித்தவர். பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாத பிரம்மதேவரை சிறையில் அடைத்தவர். மேலும், திருமாலின் மருமகனாவார். இதன் காரணமாக, மும்மூர்த்திகளுடன் தொடர்புடையவராக முருகப் பெருமான் போற்றப்படுகிறார். இதை உணர்த்தும் விதமாக ஆவணி, மாசித் திருவிழாக்களின்போது, 7-ம் நாள் உற்சவத்தில் சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து சிவபெருமான் அம்சமாகவும், 8-ம் நாள் உற்சவ தினத்தில் அதிகாலை வெண்ணிற ஆடை அணிந்து பிரம்மதேவர் அம்சமாகவும், அன்று மதியம் பச்சை நிற வஸ்திரம் அணிந்து திருமால் அம்சமாகவும் அருள்பாலிக்கிறார்.

திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் உள்ளது. கந்தசஷ்டி விழாவில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தின்போது ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அந்த சமயத்தில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. மூலஸ்தானத்தின் பீடத்தைவிட கோபுர வாசல் உயரமாக இருப்பதால் எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கும்.

கோயில் சிறப்புகள்

157 அடி உயரம் கொண்ட இக்கோயில் கோபுரம், 9 தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இக்கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். இவர்களில் குமரவிடங்கர் ‘மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார்.

சூரசம்ஹாரத்துக்குப் பிறகு, முருகப் பெருமான் சுப்பிரமணியராக 4 கரங்களுடன் காட்சி அருளினார். வலது கையில் மலர் வைத்து சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பதால் இவருக்கு பிரகாரம் கிடையாது. இவரது உற்சவரான ‘சண்முகர்’ தெற்கு நோக்கி தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது என்றும், மற்ற 5 கோயில்களும் மலைக் கோயில்கள் என்றும் கூறப்பட்டாலும், திருச்செந்தூரும் மலைக்கோயில்தான். இக்கோயில் கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் உள்ளது. இதன் காரணமாக, இத்தலம் ‘கந்தமாதன பர்வதம்’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இக்குன்று மறைந்துவிட்டது. தற்போது 2-ம் பிரகாரத்தில் வள்ளி குகை அருகில் சந்தனமலை சிறிய குன்றுபோல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் ‘ஞானகுரு’வாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்ட யானைகள், மேதா மலை என்று 4 இருக்கைகள் மீது முருகப் பெருமான் அமர்ந்துள்ளார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும் கிளிகள் வடிவில் உள்ளன. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் முருகப் பெருமான் ‘ஞானஸ்கந்த மூர்த்தி’யாக வணங்கப்படுகிறார்.

தீபாவளி தினத்தில் திருச்செந்தூர் கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின்பு புத்தாடைகள் வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் அணிவிக்கப்படுகின்றன. தெய்வானையை முருகப் பெருமான் மணமுடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு, இந்திரன் புத்தாடை எடுத்துத் தருவதாகக் கூறப்படுகிறது.

தினமும் உச்சிக்கால பூஜை நிறைவு பெற்றதும், ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் ஆகியன, மங்கல வாத்தியங்களுடன் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இதற்கு ‘கங்கை பூஜை’ என்று பெயர். இத்தலத்தில் உள்ள சரவணப் பொய்கையில் 6 தாமரை மலர்களில் முருகப் பெருமான் 6 குழந்தைகளாகத் தவழ, நடுவே கார்த்திகைப் பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

தினமும் முருகப் பெருமானுக்கு 9 கால பூஜை நடைபெறுகிறது. அப்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்த பொரி, அதிரசம், தேங்குழல், வெல்லம் கலந்த உருண்டை என்று விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக மற்ற முருகப் பெருமான் தலங்களில் 6 நாட்கள் மட்டுமே கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா, இத்தலத்தில் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in