காக்கும் கார்த்திகைச் செல்வன் - 1

தமிழ்க் கடவுள்
காக்கும் கார்த்திகைச் செல்வன் - 1

தமிழ்க் கடவுள் என்றழைக்கப்படும் முருகப் பெருமானைப் பற்றி வெள்ளி தோறும் பேசப்போகும் புதிய தொடர் இது. முருகனை சிவபெருமான் - பார்வதி தேவியின் இரண்டாவது மைந்தன் என்கிறது புராணம். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து நெருப்பு வெளிப்பட, அதைத் தாங்கிய வாயு பகவான், சரவணப் பொய்கையில் விட்டார். அந்த நெருப்பு ஆறு குழந்தைகளாக மாறி, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். பார்வதி தேவி, அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும்போது, ஆறுமுகனாக முருகப் பெருமான் காட்சியளித்தார்.

கணங்களின் அதிபதியான கணபதியின் இளைய சகோதரரான முருகப் பெருமான், குறிஞ்சி நிலக் கடவுளாக வணங்கப்படுகிறார். சேயோன் வழிபாட்டை பிற்காலத்தில் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் ‘கௌமாரம்’ என்ற பெயரில் முருகன் வழிபாடு இருந்து வந்தது.

‘முருகு’ என்ற சொல்லுக்கு அழகு, இளமை எனப் பொருள்கள் உண்டு. அந்த வகையில் முருகப் பெருமானும் ‘அழகன்’ என்றே அழைக்கப்படுகிறார். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன், ‘உ’ என்ற உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து ‘முருகு’ (ம்+உ, ர்+உ. க்+உ) என்ற சொல் உருவானதால், இது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

முருகப் பெருமான் அவதாரம்

பிரம்மதேவரின் மகன் தட்சன். இவரது மகளான பார்வதி தேவியை சிவபெருமான் மணந்தார். ஒரு சமயம் சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்யத் தொடங்கினார். இதைக் கண்டு கோபமடைந்த தாட்சாயணி, அக்னியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, சிவபெருமான் தன் அவதாரமான வீரபத்திரரை அனுப்பி, தட்சனையும் அவரது யாகசாலையையும் அழித்தார். தட்சனை அழித்த பின்பு தியானத்தில் அமர்ந்தார் சிவபெருமான்.

ஒருசமயம் தாரகன் என்ற அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். தாரகனின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர், அவன் வேண்டும் வரத்தை அளிப்பதாக உறுதியளிக்கிறார். அதன்படி சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு யாராலும் தாரகனுக்கு அழிவு ஏற்படாது என்று வரமளிக்கிறார்.

தாரகனுக்கு கிடைத்த வரம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்த விஷயத்தை சிவபெருமானிடம் கூறுவதற்காக அவரது தியானத்தைக் கலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிவபெருமானின் தவத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். தவம் கலைந்த நிலையில் இருந்த சிவபெருமான், கோபமடைந்து தனது நெற்றிக் கண்ணால் காமதேவனை தகனம் செய்தார். நெற்றிக் கண்ணில் இருந்து, வெளிப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்து, ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர், ஆறு குழந்தைகளை வளர்த்தனர். ஒரு கார்த்திகை நன்னாளில் பார்வதி தேவி, ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறுமுகங்களை பெற்றதால் ‘ஆறுமுகம்’ என்றும், கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் ‘கார்த்திகேயன்’ என்றும் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார். சிவபெருமானைப் போலவே முகத்துக்கு 3 கண்கள் வீதம், ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் 18 கண்களுடன் அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான்.

ஞானப்பழம்

நாரத முனிவர் கைலாயம் வந்தபோது ஞானப்பழத்தைக் கொண்டு வந்தார். அதை சிவபெருமான் மற்றும் பார்வதியிடம் அளித்தார். அதை விநாயகர், முருகப் பெருமானுக்கு எப்படி பிரித்துத் தருவது என்று யோசித்தபோது, ஒரு போட்டி வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தப் பழத்தை ஒருவரே முழுவதும் பெறுவதற்கு, அவர் உலகை 3 முறை வலம் வர வேண்டும் என்று போட்டி அறிவிக்கப்பட்டது.

முருகப் பெருமான் உடனே தன் மயில் வாகனத்தில் ஏறி, உலகைச் சுற்றி வரப் புறப்பட்டார். தன் தாய், தந்தையரே தனக்கு உலகம் என்று கூறிய விநாயகப் பெருமான், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் 3 முறை வலம் வந்து அப்பழத்தைப் பெற்றார். இதனால் கோபித்துக்கொண்டு புறப்பட்ட முருகன், பழநி மலைக் குன்றில் தங்கிவிட்டதாகச் சொல்கிறது புராணம். தென்னிந்திய பகுதியில் அதிகமாக முருகன் வழிபாடு காணப்படுவதால், இதில் மகிழ்ந்த முருகப் பெருமான் இப்பகுதியிலேயே தங்கிவிட்டார். தென்னிந்தியப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் முருகன் கோயில்கள் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். ‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்’ என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் போற்றுகிறார்.

முருகப் பெருமான் தோற்றம்

’ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறிய முருகப் பெருமான், பக்தர்களுக்கு வேண்டியதை அருளும் வேலாயுதமாக உள்ளார். முருகப் பெருமான் 6 தலைகள் (6 முகங்கள்), 12 கரங்கள் கொண்டு பக்தர்களைக் காத்தருள்கிறார். முதல் இரண்டு கைகள் தேவர், முனிவர்கள், பக்தர்களை காத்தருள்கின்றன. மூன்றாவது கை உலகத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. நான்காவது கை அங்குசத்தை செலுத்தி தேவையற்ற விருப்பங்களை நிராகரிக்கிறது. ஐந்தாவது கை பக்தர்களுக்கு நிறைந்த அருளை வழங்குகிறது. ஆறாவது கை, பார்வதி தேவி கொடுத்த வேலை வைத்துக் கொண்டு, பக்தர்களைக் காக்கிறது.

ஏழாவது கை ‘சரவண பவ’ என்னும் சொல்லுக்கு உரிய பொருளை முனிவர்கள், தவப் புதல்வர்களுக்கு மட்டும் வெளிப்படும் விதமாக (அரும்பொருள் உணர்த்துதல்) மார்பின் அருகே உள்ளது. எட்டாவது கை மார்பில் இருந்து தொங்கும் மாலையை தாங்குகிறது. 9, 10-வது கைகள், வளையல், மணியைத் தாங்கி யாகத்தால் கிடைக்கக் கூடிய பலனை ஏற்கின்றன. 11-வது கை மழையை கொடுத்து, உலகைக் காக்கிறது. 12-வது கை வள்ளி தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.

தெய்வானை திருமணம்

அசுரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களையும் காப்பதற்காகவே முருகப் பெருமான் அவதாரம் எடுத்துள்ளார். சூரபத்மனை அழித்ததும், அவனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும் சேவலை கொடியாகவும் ஏற்றுக்கொண்டார். இதனால் ‘மயில் வாகனன்’ என்ற பெயர் பெற்றார் முருகப் பெருமான்.

ஒருசமயம் நாரத முனிவர் யாகம் செய்தார். அப்போது யாகத்தில் இருந்து பிரம்மாண்ட ஆட்டுக்கடா தோன்றியது. அந்த ஆட்டுக்கடாவை வீழ்த்தி வீரச் செயல் புரிந்த முருகப் பெருமானுக்கு அதுவே வாகனமாக அமைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘வையப்பமலை’ என்ற தலத்தில் இவ்வாகனம் அமைந்துள்ளது.

தோவாளை முருகன் கோயில்...
தோவாளை முருகன் கோயில்...

சூரபத்மனை வீழ்த்தியதால் முருகப் பெருமானுக்கு தேவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், இந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகப் பெருமானுக்கு மணம் முடிக்க விரும்பினார். அதன்படி முருகப் பெருமானுக்கும் தெய்வயானைக்கும் திருப்பரங்குன்றத்தில் திருமணம் நடைபெற்றது.

வள்ளி திருமணம்

காஞ்சிபுரம் மேல்பாடி அருகே உள்ள வள்ளிமலையில் வேடுவர் தலைவராக இருந்தவர் நம்பிராஜன். இவருக்கு ஆண் குழந்தைகள் மட்டுமே இருந்ததால், பெண் குழந்தை வேண்டி இறைவனிடம் வரம் கேட்டார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள ‘கதிர்காமம்’ என்ற பகுதியில் ‘சிலமுகி’ என்ற முனிவரின் மாய சக்தியால் அரபி என்ற மான் வயிற்றில் இருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. வேட்டைக்குச் சென்ற நம்பிராஜன் அங்கு வள்ளிக்கிழங்குகள் இருக்கும் இடத்தில் குழந்தையைக் காண்கிறார். குழந்தைக்கு வள்ளி என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

வேடர் வழக்கப்படி வள்ளிக்கு 12 வயது ஆனதும், விலங்குகள், பறவைகளிடம் இருந்து நெற்பயிர்களை காவல்காக்கும் பணியில் அமர்த்தப்பட்டாள். வேடர் குலத்தவர், முருகப் பெருமானை வழிபட்டு வந்ததால், வள்ளிக்கு முருகப் பெருமான் மீது பக்தி இருந்தது. ஒருசமயம் நாரத மகரிஷி வள்ளியைக் கண்டதும், அவளது பக்தி குறித்து முருகப் பெருமானிடம் தெரிவித்தார்.

நாரதர் சொன்னதைக் கேட்டதும் முருகப் பெருமான் வேடர் போல் வேடமிட்டு வள்ளியை நேரில் கண்டு பேசினார். பிறகு, சகோதரர் விநாயகப் பெருமானின் உதவியுடன் திருவிளையாடல் புரிந்து வள்ளியை மணந்தார் முருகப் பெருமான்.

முருக வழிபாடுகள்

முருகன் கோயில்களில் பக்தர்கள் பலவித நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபாடு செய்கின்றனர். காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், மொட்டை போடுதல் (முடி இறக்குதல்), பாத யாத்திரை ஆகியவை முருகனுக்கான குறிப்பிடத்தக்க வழிபாட்டு முறைகள் ஆகும்.

அடியவர்கள்

அகத்திய முனிவர், நக்கீரர், ஔவையார், அருணகிரியார், பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆகியோர் முருகப் பெருமானை எந்நேரமும் வழிபட்டு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

குன்றத்தூர் முருகன் கோயில்...
குன்றத்தூர் முருகன் கோயில்...

முருகன் கோயில்கள்

தமிழகம் முழுவதும் முருகன் வழிபாடு இருப்பதால், ஆங்காங்கே முருகன் கோயில்கள் காணப்படுகின்றன. அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை குறிப்பிடத்தக்கன. மேலும், சென்னையில் வடபழனி முருகன் கோயில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி கோயில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோயில், குமரன் குன்றம், கந்தக் கோட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில், குன்றத்தூர் கோயில்கள் முருகப் பெருமானை சிறப்பிக்கின்றன. மலேசியாவிலும் சுப்பிரமணியர் கோயில் கட்டப்பட்டு, தைப்பூசம் முதலான விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ‘குன்றுதோறும் இருப்பான் முருகன்’ என்பது ஆன்றோர் வாக்கு.

நூல்கள்

கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட ‘கந்த புராணம்’ முருகப் பெருமானின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. ‘திருமுருகாற்றுப்படை’ என்ற சங்க இலக்கியம் முருகப் பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவரது அறுபடை வீடுகளையும் பாடி சிறப்பிக்கிறது. ஷண்முக கவசம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி ஆகியன முருகப் பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன.

தைப்பூசத் தேரோட்டம்...
தைப்பூசத் தேரோட்டம்...

திருவிழாக்கள்

கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூச தினங்கள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாக கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமாகவும், கந்தசஷ்டி சூரபத்மனை வீழ்த்திய தினமாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in