காக்கும் கார்த்திகைச் செல்வன் - 2

கந்தனின் பேரும் புகழும்
காக்கும் கார்த்திகைச் செல்வன் - 2

இந்திரன் மகள் தெய்வானையையும், குறவர் குலப் பெண்ணாண வள்ளியையும் மணந்த முருகப் பெருமான் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சேயோன், அயிலவன், ஆறுமுகன், குமரன், குகன், காங்கேயன், வேலூரவன், சரவணன், சேனாதிபதி, வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, தஞ்சபாணி, கதிர்காமன், முத்துவேலன், வடிவேலன், சுப்பிரமணியன், மயில்வாகனன்., ஆறுபடை வீடுடையோன், வள்ளல்பெருமான், சோமாஸ்கந்தன், முத்தையன், சேந்தன், விசாகன், சுரேசன், செவ்வேல், கடம்பன், சிவகுமரன், வேலாயுதன், ஆண்டியப்பன், கந்தசுவாமி, செந்தில்நாதன், வேந்தன் உள்ளிட்ட பெயர்களால் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

குழந்தையாகக் காட்சி அளிப்பதால் ‘சேயோன்’, வேற்படை உடையதால் ‘அயிலவன்’, ஆறு முகங்களை உடையதால் ‘ஆறுமுகன்’, குமரப் பருவத்தில் இறைவனாக எழுந்தருளியதால் ‘குமரன்’, அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளிய்தால் ‘குகன்’, கங்கையின் மைந்தன் என்பதால் ‘காங்கேயன்’ என்று முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க வேலுடன் தோன்றியதாலும் ‘வேலூரான்’ என்ற பெயரும் அவருக்குக் கிட்டியது. வேலூர் அருகே உள்ள வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை கரம் பிடித்தார் முருகப்பெருமான். வேலூரைச் சுற்றிலும் குன்றுகளும் அவை அனைத்தும் முருகப் பெருமானின் கோயில்களாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சரவணப் பொய்கையில் தோன்றியதால் ‘சரவணன்’, சேனைகளின் தலைவர் என்பதால் ‘சேனாதிபதி’, வேலை ஏந்தியவர் என்பதால் ‘வேலன்’, குரு ஸ்தானத்தில் இருந்து தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்ததால் ‘சுவாமிநாதன்’, கார்த்திகைப் பெண்களால் பாலூட்டி, சீராட்டி வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

பார்வதி தேவி ஆறுமுகங்களை ஒன்றாக இணைத்து அழகு முகமாக ஆக்கியதால் ‘சண்முகம்’ அல்லது ‘திருமுகம்’, தண்டாயுதத்தை ஏந்தியிருப்பதால் ‘தண்டாயுதபாணி’, விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் ‘விசாகன்’ என்றும் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி, தாமரைத் தடாகத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தத்தில் பட்டது. அதில் இருந்து குழந்தையாக தோன்றியதால் ‘கந்தகமூலவன்’ என்றும் ‘கந்தன்’ என்றும் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

ஞானப்பழத்துக்காக உலகம் முழுவதும் சுற்றினாலும், அப்பழம் கிடைக்காமல் இருந்த வருத்தத்தால் சினம் கொண்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தார் முருகப் பெருமான். அதனால் ‘தஞ்சபாணி’ என்றும் ‘தண்டபாணி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

வேடுவர் போல் வேடமிட்டு வள்ளியை மணம் புரிவதற்காக காமதேவனாகத் தோன்றினார் முருகப் பெருமான். மேலும், அவர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீக்கதிராகத் தோன்றியதால் கதிரும் காமனும் சேர்ந்து அவருக்கு ‘கதிர்காமன்’ என்ற பெயர் வரக் காரணமாயிற்று. இதே பெயருடன் வள்ளியை மணம் புரிந்து கொண்டார் முருகப் பெருமான். இலங்கையில் உள்ள ‘கதிர்காமம்’ என்ற ஊரில் தான் வள்ளி கண்டெடுக்கப்பட்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டுக்குடியில் அஞ்சுகவல்லி (தெய்வானை), கோமளவல்லி (வள்ளி) ஆகியோருடன் அருள்பாலிக்கும் முருகன் ‘முத்துவேலர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் எட்டு திசையும் காப்பார் என்பது ஐதீகம்.

வேலை ஏந்தியிருப்பதால் ‘வடிவேலன்’ என்றும், பிரம்மத்தின் பொருளாக இருப்பதால் ‘சுப்பிரமணியன்’ (இனியவன்) என்றும், மயிலை வாகனமாகக் கொண்டதால் ‘மயில் வாகனன்’ என்றும், சாதனை புரிந்த இடங்களாக 6 கோயில்கள் குறிப்பிடப்படுவதால் ‘ஆறுபடையப்பன்’ என்றும் அழைக்கப்படுகிறார் முருகப் பெருமான்.

வள்ளியை மணந்ததாலும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் வள்ளலாக இருப்பதாலும் ‘வள்ளல்பெருமான்’ என்று முருகர் அழைக்கப்படுகிறார். மதுரையம்பதி சோம சுந்தரக் கடவுளின் மகனாக இருப்பதால் ‘சோமாஸ்கந்தன்’ என்று அழைக்கப்படுகிறார். (சோமா என்றால் நிலா, சிவபெருமான்)

முத்துக்குமார சுவாமி, முத்துவேலர் சுவாமி ஆகிய பெயர்கள் ‘முத்தையன்’ ஆனது. தன்னை வணங்கும் பக்தர்களை எவ்வித இன பாகுபாடும் இன்றி ஒருங்கிணைந்து சேர்த்து வைத்ததால் ‘சேந்தன்’ என்றும், விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் ‘விசாகன்’ என்றும், அழகன் என்பதால் வடமொழியில் ‘சுரேசன்’ என்றும், சேவல்வேல் கொண்டவன் என்பதால் ‘செவ்வேலன்’ என்றும் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

சிவகணங்களில் ஒருவனான கடம்பனை தனது உதவியாளராக சேர்த்துக் கொண்டதால் ‘கடம்பன்’ என்றும், சிவபெருமானின் மகன் என்பதால் ‘சிவகுமரன்’ என்றும், கையில் இருக்கும் வேலையே ஆயுதமாகக் கொண்டதால் ‘வேலாயுதம்’ என்றும், ஞானப்பழம் வேண்டி உலகம் சுற்றி ஏமாற்றம் அடைந்து ஆண்டியாக நின்றதால் ‘ஆண்டியப்பன்’ என்றும், தாமரை மலரின் கந்தகத்தில் தோன்றியதால் ‘கந்தன், கந்தக் கடவுள், கந்தசுவாமி’ என்றும், சிந்தனைச் சிற்பி, சிந்தனை நாதன் என்று அழைக்கப்பட்டு பின்னர் ‘செந்தில்நாதனாகவும், மலை அரசன், மலை வேந்தன்’ என்றும் முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

அக்னி புத்திரன், காங்கேயன், சரவண பவன், சரவண மூர்த்தி, ஆறுமுகன், சண்முகம், திருமுகம், கார்த்திகேயன் என்று முருகப் பெருமானுக்கு பல காரணப் பெயர்கள் உண்டு.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம் ஏற்றி கந்தன் அருளைப் பெற அனைவரும் வேண்டிக் கொள்வதுண்டு. கந்தனுக்கு உரிய முக்கிய விரதம் கார்த்திகை விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தில் பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம். கார்த்திகை விரதம் இருந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில் பக்தர்கள் விரதம் இருந்து, அவன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வர்.

ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திரமே சிறப்பு என்று கருதும்போது கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. கந்தப் பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் இந்த நாளில் தீபம் ஏற்றி வழிபட கார்த்திகைச் செல்வனின் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை விரதத்தை ஏற்பவர்கள் மேலான பதவிகளை அடைவர் என்று கூறப்படுவதுண்டு. நாரத முனிவர் இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைபிடித்ததால், அனைத்து ரிஷிகளையும் விட மேலான சிறப்புகளைப் பெற்றார், மூன்று உலகமும் சுற்றி வரும் பாக்கியத்தைப் பெற்றார். இந்த விரத நாளில் கந்த சஷ்டி கவசம் முதலானவற்றை பாராயணம் செய்து கந்தனை வழிபட வேண்டும். ‘கந்த வேலை எந்த வேளையும் நினை’ என்பது ஆன்றோர் வாக்கு.

சிவபெருமான் தன் ஐந்து முகங்களோடு (சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம்) ஆறாவது முகமான அதோமுகத்தையும் சேர்த்து தன் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியைத் தோற்றுவித்தார். அப்பொறிகளை வாயு பகவானும் அக்னி பகவானும் கங்கையில் சேர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து 6 குழந்தைகள் உருவாகி, அவர்களை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பின்னர் பார்வதி தேவி அவர்களை ஒன்றிணைத்து ஒரே குழந்தையாக மாற்றி ஆறுமுகன், கந்தன் என்று பெயரிட்டார். கந்தன் என்றால் ஒன்று சேர்ந்தவன் என்று பொருள்.

சிவபெருமான் கார்த்திகைப் பெண்களை வானில் நட்சத்திரங்களாக நிலைத்து வாழ அருள்புரிந்தார். மேலும், அவர்களின் பெயரால் கந்தன், இனி கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவான் என்றும், கார்த்திகை நாளில் கந்தப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால், பக்தர்கள் அனைத்து செல்வங்களையும் பெறுவர் என்றும் அருள்புரிந்தார்.

விளக்கேற்றும் முறை

விளக்கேற்றும் முறைகளை நமது முன்னோர் வழிவகுத்து கூறியுள்ளனர். இல்லத்தின் முன் கதவைத் திறந்து, பின்புறக் கதவை மூடிய பிறகே விளக்கேற்ற வேண்டும். பிரம்மமுகூர்த்த வேளையில் விளக்கேற்றுவது சிறப்பு. அதிகாலை 4-30 முதல் 6 மணி வரையும், மாலை 6-30 மணிக்குள் விளக்கேற்றுவதால் நிறைவான வளமும் பலனும் கிட்டும்.

ஒருமுகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடைபெறும். இருமுகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் மழலைப் பேறு கிட்டும். 4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் அனைத்து நன்மைகளும் உண்டாகும். கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றினால் துன்பம் நீங்கி, குடும்பம் வளமாகும். மேற்கு நோக்கி ஏற்றினால் கடன்கள், தோஷங்கள் நீங்கும். வடக்கு நோக்கி விளக்கேற்றினால் திருமணத் தடை நீங்கும். தெற்கு நோக்கி விளக்கேற்றக் கூடாது.

நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி விளக்கேற்றுவது சிறப்பு. கடலை எண்ணெய்யைப் பயன்படுத்தி விளக்கேற்றுதல் கூடாது. தூய்மையான நெய், எண்ணெய்யைப் பயன்படுத்தி மட்டுமே விளக்கேற்ற வேண்டும்.

பருத்தி பஞ்சு திரி பயன்படுத்தி விளக்கேற்றினால் நல்லவை நடக்கும். தாமரைத் தண்டு திரி பயன்படுத்தி விளக்கேற்றினால் முன்வினை பாவம் தீரும். செல்வம் நிலைக்கும். நல்ல வரன் அமையும்.

வாழைத் தண்டு திரி பயன்படுத்தி விளக்கேற்றினால் மக்கட் செல்வம் கிடைக்கும். வெண் எருக்கம் இலை திரி - வாயுத் தொல்லை நீங்கும். புது மஞ்சள் துண்டு திரி - நோய்கள் குணமாகும். அம்பாள் அருள் கிட்டும். சிவப்பு துண்டு திரி - திருமணத் தடை விலகும். செய்வினை தோஷம் நீங்கும். பன்னீரால் காயவைத்த வெள்ளைத் துண்டு திரி - மேன்மையான பலன் தரும். வெள்ளை நிற பருத்தி பஞ்சு திரி, நூல் திரி ஆகியன நன்மை பயக்கும். பழுப்பு நிற திரிகளைத் தவிர்க்கலாம். பூ, தூண்டும் குச்சியைப் பயன்படுத்தி விளக்கை குளிர்விக்கலாம்.

கார்த்திகையில் தீபம் ஏற்றி கந்தன் அருள் பெறுவோம்!

முருகா சரணம்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in