காக்கும் கார்த்திகைச் செல்வன் - 8

கந்தனின் அறுபடைவீடுகள்; 6- பழமுதிர்ச்சோலை
காக்கும் கார்த்திகைச் செல்வன் - 8

மதுரையில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பழமுதிர்ச்சோலை வெற்றிவேல் முருகன் கோயில், கந்தனின் அறுபடைவீடுகள் வரிசையில் 6-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது. ‘பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை’ என்று பழமுதிர்ச்சோலைக்கு பொருள் கொள்ளலாம்.

தல வரலாறு

அறுபடைவீடுகள் ஒவ்வொன்றிலும் முருகப் பெருமானின் திருவிளையாடல்கள் நடைபெற்றுள்ளன. அந்தவகையில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஔவையாருக்கும் முருகப் பெருமானுக்கும் இடையே நடைபெற்ற சம்பவம் பழமுதிர்ச்சோலை தல வரலாறாகக் கூறப்படுகிறது.

சிறந்த தமிழ் புலமை கொண்ட ஔவையார், புகழின் உச்சியில் இருந்த சமயம், காட்டு வழியாக மதுரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வப்போது அவருக்கு ‘தான்’ என்ற ஆணவம் மேலோங்கியதை உணர்ந்த முருகப் பெருமான், அவருக்குச் சரியான பாடம் புகட்ட எண்ணினார். இதுதான் தக்க தருணம் என்று நினைத்த முருகப் பெருமான், ஔவையார் நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாகத் தோன்றி, நாவல் மரக்கிளையின் மீது அமர்ந்து கொண்டார்.

நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பால், ஔவையார், அந்த நாவல் மரத்தின் அடியில் அமர்ந்தார். ஏதாவது உண்ணக் கிடைத்தால் பசியாறலாம் என்று நினைத்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது மரக்கிளையில் ஆடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதைப் பார்த்ததும், தனக்கு பழங்களைப் பறித்துத் தருமாறு ஔவையார், சிறுவனைக் கேட்டார்.

உடனே அச்சிறுவன், “பழங்களைப் பறித்துத் தருகிறேன். ஆனால், உங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? அல்லது சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்கிறான். சிறுவனின் கேள்வி புரியாத நிலையில் இருந்த ஔவையார், சிறுவன் ஏதோ விளையாடுகிறான் என்று நினைத்து, தனக்கு சுடாத பழங்களையே தருமாறு கூறுகிறார்.

சிறுவனும், “மரத்தை உலுக்குகிறேன். சுடாத பழங்களை எடுத்துக் கொள்ளவும்” என்கிறான். ஔவையாரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, சிறுவனும் நாவல் மரக்கிளை ஒன்றை உலுக்குகிறான். நிறைய நாவல் பழங்கள் கீழே விழுந்தன. அந்தப் பழங்களைப் பொறுக்கிய ஔவையார், அதில் மண் ஒட்டியிருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு, வாயால் ஊதினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், “என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?” என்று கேட்டான்.

சிறுவனின் கேள்வி ஔவையாரின் அகங்காரத்தை அழித்தது. தன்னையே சிந்திக்க வைத்த சிறுவன், நிச்சயமாக ஒரு மானிடப் பிறவியாக இருக்க முடியாது என்று நினைத்தார். சிறுவனை நோக்கி, “குழந்தாய்... நீ யாரப்பா?” என்று கேட்கிறார். மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன், தனது சுய உருவத்தைக் காட்டினான். வந்திருப்பது முருகப் பெருமான் என்பதை உணர்ந்த ஔவையார், மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.

இந்நிகழ்ச்சி நடைபெற்ற நாவல் மரம் இன்றும் சோலை மலை உச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருவிளையாடல் தத்துவம்

உயிர்களின் மீது ‘உலகப் பற்று’ என்ற மணல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதைப் போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறிய, உணர மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம் என்பதே முருகப் பெருமானின் திருவிளையாடல் தத்துவம் ஆகும்.

கோயில் அமைப்பும் சிறப்பும்...

தொடக்க காலத்தில் முருகப் பெருமானுக்கு இங்கு கோயில் கிடையாது என்றும், பிற்காலத்தில் பக்தர்களால் மலைக்கு இடையே கோயில் எழுப்பப்பட்டது என்றும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. பின்னர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.

முருகப் பெருமானுக்கு வலப்புறத்தில் வித்தக விநாயகர் அருள்பாலிக்கிறார். அறுபடைவீடுகளில் முருகப் பெருமான் கருவறையில் தம்பதியாக காட்சி தருவது இத்தலத்தில் மட்டுமே. மிகவும் அமைதியான சூழலில் குளிர்ச்சியான காற்றுடன் பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக நாவல் மரத்தில் ஆடி, ஆவணி மாதங்களில் மட்டுமே பழங்கள் பழுக்கும். ஆனால் இத்தலத்தில், ஐப்பசி (சஷ்டி) மாதத்தில் நாவல் பழங்கள் பழுப்பதைக் காணலாம்.

சைவ – வைணவ ஒற்றுமை

பழமுதிர்ச்சோலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காணப்படுகிறது. பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இருப்பதால் சோலை மலை ஆயிற்று.

பெருமாள் அழகிய தோற்றம் கொண்டவர். முருகன் என்றாலும் அழகுடையவன் என்று பொருள் தருகிறது. அழகுடைய சுந்தரராஜப் பெருமாள் கோயில் (நின்ற கோலம்) கொண்டிருக்கும் மலை அழகர் மலை என்று அழைக்கப்படுகிறது. மூலவருக்கு ‘கள்ளழகர்’, ‘மலையலங்காரன்’ ஆகிய பெயர்களும் உண்டு. திருமலையைப் போன்ற தோற்றத்துடன் இருப்பதால் திருமலை திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையில் வழிபாடு செய்வது வழக்கம்.

Aanmeegam

பெருமாளுக்கு சனிக்கிழமையும், முருகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமையும் சிறந்த நாட்களாக கருதப்படுகின்றன. உற்சவ காலங்களில் இரண்டு கோயில்களிலும் தேர்த் திருவிழா நடைபெறும். வைணவத் தலமும், குமாரத் தலமும் அருகருகே அமைந்து சைவ – வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளன.

நூபுர கங்கை

பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் அமைந்துள்ள தீர்த்தத்துக்கு நூபுர கங்கை என்று பெயர். சிலம்பாறு என்றும் அழைக்கப்படும் இத்தீர்த்தத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இடப கிரியில் முருகனின் பாதத்தில் இருந்து நூபுர கங்கை தோன்றியதாக கூறப்படுகிறது. இத்தீர்த்தத்தில் இரும்புச் சத்தும், தாமிரச் சத்தும் மிகுந்து காணப்படுவதால் இது பல நோய்களையும் குணப்படுத்த வல்லது.

இதன் அருகே ராக்காயி அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனை தரிசிக்கச் செல்பவர்கள் நூபுர கங்கையில் நீராடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தீர்த்த நீரைப் பயன்படுத்தி, அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது.

நூல்கள் போற்றும் சோலைமலை

திருமுருகாற்றுப்படை போற்றும் பழமுதிர்ச்சோலைக்கு ‘பழம் முற்றிய சோலை’ என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தபுராணத் துதிபாடலில் வள்ளியைத் திருமணம் முடிக்க, விநாயகரை யானையாக வந்து உதவிபுரியுமாறு, முருகப் பெருமான் இத்தலத்தில் அழைத்ததாகக் கூறுகிறார்.

அருணகிரியார், திருப்புகழில் வள்ளி மலை, பழமுதிர்ச்சோலை ஆகியவை குறித்து தனித்தனி பாடல்களைப் புனைந்துள்ளார். சிலம்பாறு, நூபுர கங்கை குறித்து திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

அந்த நாவல் மரம்...
அந்த நாவல் மரம்...

அருணகிரி நாதர் திருப்புகழ்...

அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி- அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர் மேலாய்

இகரமுமாகி எவைகளு மாகி இனிமையுமாகி வருவோனே

இருநீல மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வர வேணும்

மகபதியாகி மருவும்வலாரி மகிழ்களி கூரும்வடிவோனே

வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காம முடையோனே

செக கண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருப்புகழ் விளக்கம் ...

எழுத்துகளுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி, எல்லாவற்றுக்கும் தலைவனாகி, எல்லோருக்கும் மேம்பட்டவனாகி, யாவர்க்கும் உள்ள யான் என்னும் பொருளாகி, பிரமன் என்னும் படைப்பவன் ஆகி, திருமால் என்னும் காப்பவன் ஆகி, சிவன் என்னும் அழிப்பவனாகி, அம்மூவருக்கும் மேலான பொருளாகி, இங்குள்ள பொருட்கள் யாவுமாகி, எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி, இனிமை தரும் பொருளாகி, வருபவனே… முருகப் பெருமானே!

இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ, எனது முன் ஓடி வர வேண்டும். யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்), மகிழ்ச்சியும் களிப்பும் அடையச் செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே… முருகப் பெருமானே!

காட்டில் வசித்த வேடன் (அந்திமான்) செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே... ஜெக கண ஜேகு தகுதிமி தோதி திமி என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே. லட்சுமிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலை வீற்றிருக்கும் பெருமாளே!

(அந்திமான் - முருகப் பெருமானின் வேலுக்கு தன்னால்தான் பெருமை என்று அகந்தை கொண்ட பிரம்மதேவரை முருகப் பெருமான் சபித்தார். பிரம்மதேவர் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் அவதரித்தார். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்றார். பின்னர் கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி அருள்பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது)

திருவிழாக்கள்

கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகத் திருவிழா முதலானவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள். ஆராதனைகள், அபிஷேகங்கள் நடைபெறும். வெள்ளிக் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு பூவங்கி சாத்தப்பட்டு, தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

விசேஷ நாட்களில் முருகப் பெருமானுக்கு வீபூதியால் அபிஷேகம் செய்யப்பட்டு, அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருமணத் தடை நீங்க, குழந்தைப் பேறு கிட்ட, கல்வியில் சிறந்து விளங்க இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in