காக்கும் கார்த்திகைச் செல்வன் - 5

கந்தனின் அறுபடைவீடுகள் - 3 ; பழநி
காக்கும் கார்த்திகைச் செல்வன் - 5

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், கந்தப் பெருமானின் அறுபடைவீடுகளில், 3-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது. மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழநியில் குன்றின் உச்சியில் இக்கோயில் அமைந்துள்ளது.

மலைக்கோயில் மூலவர் தண்டாயுதபாணி சில நவபாஷாணம் எனும் மூலிகைக் கலவையால் ஆனது. இச்சிலை உயிர்ப்புடன் உள்ளது என்பதும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் ஐதீகம். சிலையின் வெப்பத்தைத் தணிக்க, கொடுமுடித் தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறும். சுவாமிக்கு பூசப்படும் ராக்கால சந்தனம், கவுபீக தீர்த்தம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. மூலவரின் கையில் உள்ள தண்டம் சக்தி வாய்ந்தது.

தல வரலாறு

ஒருசமயம், தனக்குக் கிடைத்த ஞானப்பழத்தை, சிவபெருமானுக்கு அளிக்க வேண்டும் என்று விரும்பிய நாரத மகரிஷி கயிலை மலைக்கு வந்தார். அப்போது சிவபெருமான் அருகில் இருந்த பார்வதி தேவி, அப்பழத்தை தனது குமாரர்கள் விநாயகருக்கும், கந்தனுக்கும் பகிர்ந்து அளிக்க விரும்பினார். ஆனால், பரமசிவனுக்கு இதில் உடன்பாடு இல்லை. பழத்தை பகிர்ந்து அளித்தால் அதன் தனித்தன்மை போய்விடும் என்று கூறி, இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். உலகை யார் முதலில் வலம் வருகிறார்களோ, அவர்களுக்கு அப்பழம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சிவபெருமான் இந்த அறிவிப்பை வெளியிட்டதும், உடனே கந்தப் பெருமான் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை வலம் வரக் கிளம்பினார். விநாயகப் பெருமான், தனது பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார். கந்தப் பெருமான் உலகை வலம் வந்து பார்த்தபோது ஏமாற்றம் அடைந்தார். இதனால் கோபம் கொண்டு அனைத்தையும் துறந்து பழநி மலையில் குடியேறினார் கந்தப் பெருமான். அன்று முதல் அவர் நின்ற இடம் ‘பழம் நீ’ (பழநி) என்று அழைக்கப்படுகிறது. முருகப் பெருமானை சமாதானம் செய்ய பார்வதி தேவியும், சிவபெருமானும் அவர் பின்னால் வந்தனர். ஆனால் முருகப் பெருமான் விடாப்பிடியாக, இங்கேயே தங்குவதாகக் கூறிவிட்டார்.

பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. முருகப் பெருமான் குழந்தை வடிவமாக இருந்ததால், ‘குழந்தை வேலன்’ என்று அழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் கோபம்கொண்டு பழநி மலைக்கு வந்தபோது அங்கு வந்த ஔவையார், “பழம் நீ! நீயே ஞானவடிவனானவன்” என்று ஆறுதல் கூறினார். இப்பெயரே பிற்காலத்தில் ‘பழநி’ என்று மருவியதாகவும் கூறப்படுகிறது.

‘பழனம்’ என்ற சொல்லின் அடிப்படையில் ஆராய்ந்தால், நல்ல விளைச்சலைத் தரும் நிலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதுவே ‘பழநி’ என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தண்டாயுதபாணி

இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவின்பேரில், சக்திகிரி, சிவகிரி ஆகிய மலைகளை பொதிகை மலைக்கு கொண்டு சென்றான். வரும் வழியில் பாரம் தாங்காமல், இத்தலத்தில் மலைகளை கீழே வைத்துவிட்டான். அப்படி வைக்கப்பட்ட சக்திகிரி பார்வதி தேவியின் அம்சமாகவும், சிவகிரி சிவபெருமானின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

விநாயகர் பார்வதி தேவியிடம் இருந்து தோன்றியவர். முருகப் பெருமான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்தவர். தன் தாயிடத்தில் அதிக அன்பு கொண்டிருந்ததால், திருஆவினன்குடி (பழநி) பகுதியில் இருந்த முருகப் பெருமான், சக்திகிரி மீது ஏறி நின்றுகொண்டார். அங்கிருந்து அவரை இறங்கும்படி இடும்பன் கேட்டுக் கொண்டார். ஆனால், முருகப் பெருமான் அவனது சொல்லுக்கு செவிமடுக்க வில்லை.

தன்னை எதிர்க்கத் துணிந்த இடும்பனை, தன் அருட்பார்வையை செலுத்தி தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகப் பெருமான். மலை மீது நின்ற அவர், கையில் தண்டம் வைத்திருந்ததால் ‘தண்டாயுதபாணி’ என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இத்தலத்துக்கு வந்த போகர் சித்தர், முருகப் பெருமானுக்கு நவபாஷாணத்தில் ஒரு சிலை வடித்தார். இவரே தற்போதைய மூலவராக அருள்பாலிக்கிறார்.

தண்டம் என்றால் கோல், அபராதம் என்று பொருள் கொள்ளலாம். இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது என்ற ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசானாக இத்தலத்தில் அருள்கிறார் முருகப் பெருமான். ஆசிரியர் கையில் கோல் இருப்பது போல முருகப் பெருமானின் கையிலும் கோல் என்று அழைக்கப்படும் தண்டம் இருக்கிறது. அதைக் கொண்டு உலக இன்பங்களான மண், பெண், பொன் மீதான மாயையில் இருந்து மக்களை மீட்டெடுக்க விருப்பம் கொள்கிறார். அதன்படி நடக்க மக்களை அழைக்கிறார். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கிறார். இந்தச் சோதனைகளைத் தாங்க முடியாதவர்கள், முருகப் பெருமானை சரண் புகுகின்றனர்.

போகர் சித்தர், தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் இத்தலத்தில் தங்கியுள்ளார். தம்மை நாடி வந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் புரிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆன்மிக உணர்வையும் ஊட்டினார் போகர். அவரது சமாதி இக்கோயிலுக்குள் அமைந்துள்ளது.

முருகப் பெருமான் கையில் கிளி

பழநிமலை முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி உள்ளது. முருகப் பெருமானின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்ற புலவர் அவரை பழிவாங்க நினைத்தார். அதன்படி திட்டம் ஒன்றைத் தீட்டினார். பிரபுட தேவராயன் என்ற மன்னர் மூலமாக பாரிஜாத மலரைப் பறித்து வருமாறு அருணகிரியாரை அனுப்புகிறார். அருணகிரியாரும் தனது உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்துகிறார். உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு, தேவலோகத்துக்குப் பறந்து சென்று பாரிஜாத மலரோடு திரும்புகிறார் அருணகிரியார்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சம்பந்தாண்டான், அருணகிரியாரின் உடலை தகனம் செய்கிறார். கிளி வடிவில் இருந்த அருணகிரியார், தன் உடலைக் காணாது தவித்தார், முருகப் பெருமான் அருள்பாலித்து, கிளியை தனது தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். அந்த வகையில் முருகப் பெருமான் தண்டத்தில் இருப்பது கிளி வடிவில் இருக்கும் அருணகிரியார்தான்.

சர்ப்ப விநாயகர்

முருகப் பெருமானுடன் இடும்பன் சண்டையிட முயன்றபோது, தம்பியைக் காக்க விநாயகப் பெருமான் வந்தார். தனக்கு கிடைக்க வேண்டிய பழத்தை அண்ணன் பெற்றுக் கொண்டதை நினைத்து, விநாயகர் மீது முருகப் பெருமானுக்கு கோபம் இருக்கலாம். இதை யோசித்த விநாயகர், நாக வடிவம் கொண்டு இடும்பனுடன் சண்டையிட்டார். மலைக்கோயில் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதி அருகே இந்த விநாயகரை இன்றும் தரிசிக்கலாம்.

தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ள இந்த விநாயகர் ‘சர்ப்ப விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள விநாயகர் ‘பாத விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். மலையேறும் பக்தர்கள் முதலில் இந்த விநாயகரை வணங்கிச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவருக்குப் பின்புறத்தில் முருகப் பெருமானின் பாதம் உள்ளது. இவ்விரு விநாயகர்களின் தரிசனம் மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது.

திருஆவினன்குடி

பழநி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலம் மூன்றாம் படை வீடாக போற்றப்படுகிறது. மயில் மீது குழந்தை முருகனாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பதால், இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. முருகப் பெருமான் சிவபெருமானின் அம்சம் என்பதால் கருவறை சுற்றுச் சுவரில் தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் உள்ளனர். பழநியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பழநி மலையடிவாரத்தில் இருக்கும் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதரை தரிசித்த பின்பே, மலைக்கோயிலில் உள்ள தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு) கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), டி (அக்னி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம் ‘திருஆவினன்குடி’ என்று அழைக்கப்படுகிறது. அருணகிரியார் முருகப் பெருமானை வழிபட்டு திருப்புகழ் பாடியுள்ளார். முருகப் பெருமான் அருணகிரியாருக்கு ஜெபமாலை கொடுத்த நிகழ்வு திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னாபிஷேகம்

முருகப் பெருமான் பழநியில் மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். பெரிய நாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல், வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்த குழந்தை வடிவிலும், மலைக்கோயில் கையில் தண்டம் ஏந்திய தண்டாயுதபாணியாகவும் அருள்பாலிக்கிறார்.

முருகப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது தனிச்சிறப்பு. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில், மலைக்கோயில் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் திருஆவினன்குடி வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இடும்பனுக்கு மரியாதை

தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகப் பெருமானுக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். காவடி தூக்கிச் செல்லும் பக்தர்கள் இவர் சந்நிதியில் பூஜை செய்த பிறகே செல்கின்றனர். இடும்பன் சந்நிதியில் கடம்பன், இடும்பன், அவரது குரு அகத்தியர் ஆகியோர் உள்ளனர். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து தரப்படும் தீர்த்தம் மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதைப் பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திர விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்நாட்கள் மட்டுமல்லாமல், எப்போதும் பக்தர்கள் இங்கு குவிந்து காவடி எடுத்து, முருகப் பெருமானுக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்து, முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.

பழநிக்கு உகந்தது பஞ்சாமிர்தம் என்பதால், வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பஞ்சாமிர்தத்தால் முருகப் பெருமானுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்கின்றனர். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தி ஆக பக்தர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in