காக்கும் கார்த்திகைச் செல்வன் - 10

கந்தனின் திருத்தலங்கள்; 2- இலஞ்சி குமாரர் சுவாமி கோயில்
இலஞ்சி குமாரர் சுவாமி
இலஞ்சி குமாரர் சுவாமிவள்ளி - தெய்வானையுடன் கந்தப் பெருமான்

திருநெல்வேலி மாவட்டம், இலஞ்சியில் அமைந்துள்ள குமாரர் சுவாமி கோயில் முருகப் பெருமான் கோயில் கொண்ட இடங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தென்காசி - செங்கோட்டை நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவிலும், குற்றாலம் - செங்கோட்டை நெடுஞ்சாலையில் 2 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

தல வரலாறு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காசிப முனிவர், கபில முனிவர், துர்வாச முனிவர் ஆகியோர் திரிகூட மலையின் வட கீழ் திசையில் ஒன்று கூடினர். மூவரும் தனித்தன்மை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மபுத்திரர் என்று காசிப முனிவர் அழைக்கப்படுகிறார். திருமாலின் அம்சம் பொருந்தியவராக கபில முனிவர் போற்றப்படுகிறார். பரமசிவனிடம் இருந்து தோன்றியவர் துர்வாச முனிவர்.

மூவரும் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப் பொருள், அதன் நுணுக்கம் குறித்து விரிவாகப் பேசி ஆராய்ந்தனர். மேலும், “இவ்வுலகம் உள்பொருளா அல்லது இல்பொருளா?” என்பது குறித்து வினா எழுந்தபோது, “உலகம் இல்பொருள்” என்று கபிலர் வலியுறுத்தினார். ஆனால், காசிபரும், துர்வாசரும் “முப்பெரும் தேவர்கள் இல்லாது இல்பொருள் தோன்றாது” என்று கூறி, “உலகம் உள்பொருளே” என்று வலியுறுத்தினர். இதற்கு கபிலரும் உடன்பட்டார்.

இதைத் தொடர்ந்து, உள்பொருள் உலகின் உண்மைப் பொருள் யாராக இருக்க முடியும் என்று மூவரும் ஆராய்ந்தனர். வழக்கம்போல் மூவருக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் வந்தன. உண்மையான உள்பொருள் திருமால் என்று கபிலரும், பிரம்மதேவர் என்று காசிபரும், சிவபெருமான் என்று துர்வாசரும் வாதிட்டனர். வாதம் தொடர்ந்ததே தவிர, ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதற்கு விடையளிக்க முருகப் பெருமானே சிறந்தவர் என்று துர்வாசர் கூறி, அவரை வணங்கினார்.

துர்வாசரின் வேண்டுகோளை ஏற்ற முருகப் பெருமான் இளமைத் தோற்றத்துடன் முனிவர்கள் முன்னர் தோன்றினார். முருகப் பெருமான் அவர்களை நோக்கி, “யாமே விதியாக (பிரம்மதேவர்) நின்று படைத்தல் தொழில் புரிவோம், ஹரியாக (திருமால்) இருந்து காப்போம். மற்றையோராக (சிவபெருமான்) இருந்து அழிப்போம்” என்றார். முருகப் பெருமான், மூவினை செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை வெளிப்படுத்தினார். முருகப் பெருமானை வணங்கிய முனிவர்கள் அவரை அதே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, அனைவருக்கும் ஞானமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அன்று முதல் குமாரர் இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

அகத்திய முனிவருக்கு அருள்

சிவபெருமான் - பார்வதி தேவி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் அனைவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்குப் பக்கம் உயர்ந்து, தெற்குப் பக்கம் தாழ்ந்தது. இந்த ஏற்றத் தாழ்வை சமன்படுத்த அகத்திய முனிவர் தெற்குப் பகுதிக்கு வந்தார். சிவபெருமான் - பார்வதி தேவி திருமணக் காட்சியை அவர் அங்கிருந்தபடியே (திருக்குற்றாலம்) காணலாம் என்று சிவபெருமான் அருள்பாலித்தார். மேலும், தனது நடனத்தையும் காண அகத்தியருக்கு அருள்பாலித்தார்.

குற்றாலம் வந்த அகத்திய முனிவர், அங்கு சங்கு வடிவிலான பெருமாள் கோயிலைக் காண்கிறார். சிவனடியாராக இருப்பதால், அகத்திய முனிவருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இலஞ்சி பகுதிக்கு வந்தார் அகத்திய முனிவர். முருகப் பெருமானை வணங்கி, தனக்கு சிவபெருமானை தரிசிக்கும் பேற்றை அளிக்குமாறு வேண்டினார். குமரப் பெருமானும் அருள்பாலிக்க, அகத்திய முனிவர் சிற்றாற்றின் கரையில் (இலஞ்சி குமாரருக்கு அருகில்) வெண்மணலை குவித்து பூஜைகள் செய்தார். அவ்வாறு அமைக்கப்பட்ட லிங்க மூர்த்தி, இருவாலுக நாயகர் என்ற பெயரால் போற்றப்படுகிறார். அதன் பின்னர் அகத்திய முனிவர் திருக்குற்றாலம் சென்று வைணவ வேடம் தரித்து, திருமாலை, சிவபெருமானாக (ஹரியை ஹரனாக) மாற்றி வணங்கினார். சிவபெருமானை வழிபடுவதற்கு அகத்திய முனிவருக்கு உதவி புரிந்தவராக முருகப் பெருமான் விளங்குகிறார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

நீரும் தாமரையும் நிறைந்த இடமாக இலஞ்சி அமைந்துள்ளது. இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழ மரம் என பல பொருள் உண்டு. இத்தலத்தில் தலவிருட்சமாக மகிழமரம் உள்ளது. இத்தலம் இயற்கை வளங்கள் நிறைந்த இலஞ்சி, மா, பலா, வாழை, கமுகு, நாகலிங்கம், வில்வம், தென்னை போன்ற மரங்கள் மற்றும் நெல் வயல்கள் சூழ்ந்த சோலையாகத் திகழ்கிறது.

இலஞ்சி என்ற சொல்லை பல கவிஞர்கள் தங்கள் கவிப்பாக்களில் பயன்படுத்தியுள்ளனர். மதுரைக் காஞ்சியில் ‘ஒளிறு இலஞ்சி’ என்றும், மலைபடுகடாமில் ‘சுடர்ப்பூ இலஞ்சி’ என்று இவ்வூர் சிறப்பிக்கப்படுகிறது. முருகப் பெருமானை, அருணகிரியார் தனது திருப்புகழில் ‘வரதராஜப் பெருமாள்’ என்று போற்றுகிறார். வரம் தரும் வள்ளலாக முருகப் பெருமான் உள்ளதாகப் புகழப்படுகிறார். வரதராஜ குமரன் என்று சிறப்பிக்கப்படும் இலஞ்சி குமரன் 4 கரங்கள் கொண்டும் வேலைத் தாங்கியும், மயிலை வாகனமாக கொண்டபடியும் வள்ளி தெய்வயானை சமேதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சித்ரா நதியும் ஐந்தருவியாறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குள் செல்ல கிழக்கு மற்றும் மேற்கு திசையில் 2 வாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழியே நுழைந்தால் நந்தவனத்தைக் காணலாம். நந்தவனத்தைக் கடந்து சென்றால் சரவண மண்டபத்தை அடையலாம். தல விநாயகர், நந்தி தேவர், கொடி மரம், பலி பீடம் ஆகியவற்றைக் கடந்து இருவலுக நாயகர் சந்நிதியை அடையலாம்.

இலஞ்சி குமார சுவாமி
இலஞ்சி குமார சுவாமிவள்ளி - தெய்வானையுடன் கந்தப் பெருமான்

சிவபெருமான், அம்பாள், இலஞ்சி குமாரர் சந்நிதிகளை ஒருங்கிணைத்து விளங்கும் பிரகாரங்களில் பரிவார மூர்த்திகளாக அதிகார நந்தி, சூரியன், சுரதேவர், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், கன்னி மூல கணபதி, உற்சவர் இலஞ்சி குமாரர், வேணு கோபாலர், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, திருக்குற்றாலநாதர் - குழல்வாய்மொழி அம்பாள், அய்யனார், அகத்தியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், ஷண்முகப் பெருமான், நடராஜர், பைரவர், சந்திர பகவான் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் இருவாலுக ஈசர்க்கினியாளுடன் இருவாலுக ஈசர் அருள்பாலித்து வந்தாலும், இலஞ்சி குமாரர் கோயில் என்றே இக்கோயில் அழைக்கப்படுகிறது. அம்மையுடன் அப்பன் எழுந்தருளியுள்ளதால் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் இங்கு நடைபெறுகின்றன. மணல் லிங்கம் என்பதால் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது. கருவறையில் இருவாலுக ஈசர்க்கினியாள் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை தொங்கவிட்டபடியும், சிரித்த முகத்தோடு, இடை நெளித்து நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

தினமும் முருகப் பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்துக்கு தேவையான பால், இலஞ்சியில் வசிக்கும் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்படுகிறது. முருகப் பெருமானின் வாகனமான மயில் அவருக்கு இடது புறத்தில் வடக்கு நோக்கியபடி உள்ளது. இத்தல விநாயகர் செண்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கி.பி 14-ம் நூற்றாண்டில் மாற வர்மன் குலசேகர பாண்டியன் இத்தலத்தை புதுப்பித்து கட்டியுள்ளார். இக்கோயில் சுற்று மதில் சுவரை, 15-ம் நூற்றாண்டில் சொக்கம்பட்டி ஜமீன்தார் காளத்திய பாண்டியன் கட்டியுள்ளார்.

நேர்த்திக் கடன்

திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் செல்வம் பெருக இத்தலத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. பொதுவாக வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் சுவாமிக்கு, முடி காணிக்கை, பால் அபிஷேகம், விசேஷ அர்ச்சனை, ஆராதனைகள், காவடி எடுத்தல் ஆகியவற்றை செய்வது வழக்கம். மேலும், மாதுளை முத்துகளால் செய்யப்படட வேல் மற்றும் சேவற்கொடியை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு செய்வதும் உண்டு. பக்தர்கள் அப்பம், வடை, தோசை ஆகியவற்றை படைத்தும் முருகனை வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்

சித்திரை 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, ஆவணி பவித்ர உற்சவம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை மார்கழி தனுர் பூஜை, தைப்பூசம், மகா சிவராத்திரி, மாசி மக உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அன்றைய தினங்களில் முருகப் பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காண்பார். பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வர்.

சித்திரை பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளில் தேரோட்டமும், நிறைவு நாளில் தீர்த்தவாரியும் நடைபெறும். கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள் பிரம்மதேவராகவும், 2-ம் நாள் திருமாலாகவும், 3-ம் நாள் சிவபெருமானாகவும், 4-ம் நாள் மகேஸ்வரனாகவும், 5-ம் நாள் சதாசிவனாகவும் அருள்பாலிக்கும் முருகப் பெருமான், 6-ம் நாளில் வெள்ளி மயிலேறிச் சென்று சூரனை சம்ஹாரம் செய்து அருள்பாலிக்கிறார்.

தை மாதத்தில் இலஞ்சிக் குமரன் திருக்குற்றாலம் எழுந்தருள, குற்றாலநாதருடன் சித்ர சபை எதிரில் உள்ள திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். மாசி மாதம் மேலகரத்தில் நடைபெறும் கதிர் கொள்ளும் திருவிழாவுக்கு தென்காசி மற்றும் திருக்குற்றாலம் கோயில் அஸ்திரதேவருடன், இலஞ்சி அஸ்திரதேவரும் எழுந்தருள்வார்.

திருக்குற்றாலத்தில் நடைபெறும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப் பிறப்பு திருவிழாவுக்கு, இலஞ்சி குமரன் எழுந்தருளி விழாவின் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை 10 நாட்களும் குற்றாலத்தில் தங்கி இருந்து சிறப்பு செய்வது வழக்கம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in