ஜெயம் தரும் ஷீர்டி பாபாவின் மந்திரம்!

சாயிபாபா
சாயிபாபா

கண்கண்ட மகானாகவும் தெய்வமாகவும் ஞானகுருவாகவும் போற்றப்படுகிற சாயிபாபாவை, அவருக்கு உரிய ஸ்லோகம் சொல்லி ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். நம் அல்லல்களை எல்லாம் தீர்த்தருளுவார் சாயிபாபா.

பகவான் ஷீர்டி சாயிபாபாவுக்கு எண்ணற்ற பக்தர்கள் இருக்கிறார்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, இன்றைக்கு தமிழகத்தில் பல ஊர்களில் சாயிபாபாவுக்கு ஆலயங்கள் எழுப்பி, வணங்கி வருகிறார்கள். வியாழக்கிழமை தோறும் பாபாவுக்கு சிறப்பு பஜன்கள், விசேஷ ஆரத்தி வழிபாடுகள் என ஷீர்டியைப் போலவே இங்கேயும் அமர்க்களமாக பூஜைகள் நடைபெறுகின்றன.

பகவான் சாயிபாபாவை, கண்கண்ட மகான் என்றும் கண்கண்ட தெய்வம் என்றும் பூஜித்து வணங்குகிற பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வார்த்தைக்கு வார்த்தை ‘சாய்ராம்’, ‘சாய்ராம்’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பகவான் ஷீர்டி சாயிபாபாவின் அருள் அளப்பரியது. இவரின் பேரருள் உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ’சாயி சத்சரிதம்’ நூலில் ’என்னை எங்கிருந்து, எப்போது, யார் அழைத்தாலும் அவர்களுக்கு ஓடி வந்து உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்’ என பாபா அருளியுள்ளார்.

‘’சாயிநாதனின் ஸ்லோகத்தை நாங்கள் தினமும் சொல்லி வருகிறோம். எங்களையும் எங்கள் குடும்பத்தையும் வழிநடத்தி அழைத்துச் செல்கிறார் பாபா. வியாழக்கிழமைகளில் குடும்பமாக அமர்ந்து, எல்லோரும் கண்மூடி பாபாவின் ஸ்லோகத்தை உள்ளுக்குள்ளேயே சொல்லிவருகிறோம். அவருக்குப் பிடித்தமான கொய்யாப்பழத்தை நைவேத்தியம் செய்து வணங்கி வருகிறோம்’’ என்று பயபக்தியுடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

பாபாவின் தியான ஸ்லோகம் :

ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே

ஸர்வ தேவாய தீமஹி

தந்நோ சர்வ ப்ரசோதயாத்

ஓம் ஷீரடி வாசாயா வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தந்நோ சாய் ப்ரசோதயாத்

- என்று தினமும் 11 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை பாபாவை ஜபித்து வரலாம். தினமும் சொல்ல இயலாதவர்கள், வியாழக்கிழமைகளில் காலையும் மாலையும் இதனை முடிந்த அளவுக்குச் சொல்லி வந்தால், நம் பிறவித் துயரில் இருந்தும், மீள முடியாத பிரச்சினைகளில் இருந்தும் நம்மை விடுவித்துக் காத்தருளுவார் பாபா என்பது அவருடைய பக்தர்களின் நம்பிக்கை!

பாபாவின் மூலமந்திரம் :

’ஓம் ஸாயி ஸ்ரீஸாயி ஜெயஜெய ஸாயி’ எனும் மூலமந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். காலையில் எழுந்து, குளித்துவிட்டு, ஒரு பத்து நிமிடம் இந்த மூலமந்திரத்தைச் சொல்லிவிட்டு உங்கள் வேலைகளில் ஈடுபடலாம்.

ஏதேனும் ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக இந்த மூலமந்திரத்தை ஜபித்துவிட்டு, ‘பாபா, நீயே துணை’ என்று மனதாரச் சொல்லிவிட்டு, அந்த வேலையைத் தொடங்கினால், அந்தக் காரியத்தை ஜெயமாக்கித் தந்தருளுவார் சாயிபாபா என விவரிக்கிறது ‘சாயி சத்சரிதம்’.

குரு வாரம் என்று போற்றப்படுகிற வியாழக்கிழமைகளில், குருநாதரான ஷீர்டி சாயிபாபாவை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டால், நம் கஷ்டங்களைக் கோரிக்கையாக வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், சகல பிரச்சினைகளையும் களைந்து, நமக்கு சந்தோஷமான, நிம்மதியும் நிறைவுமான வாழ்வைத் தந்து அருளுவார் அந்த ஷீர்டிநாதன் சாயிபாபா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in