மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகைப்பூ!

- பர்ஸ், கைப்பை, கல்லா, பீரோவில் பூ வைத்தால் ஐஸ்வர்ய பாக்கியம்!
மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகைப்பூ!

கவலை இல்லாத மனிதர்கள் என்று எவருமில்லை. அதேசமயம் பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கிற பிரச்சினை பணம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது.

கடனை வாங்கிவிட்டு அடைக்கமுடியவில்லையே... என்று பலரும் வருந்துகிறார்கள். வீடு கட்டி பாதியிலேயே நிற்கிறதே... என்று சிலர் புலம்புவார்கள். ‘வாங்கற சம்பளம் சரியாத்தான் இருக்கு. என்ன... ஸ்கூல் ஃபீஸ்னு வரும்போது கடன் வாங்கற நிலைமை வந்துருது’ என்று வருந்துபவர்களும் இருக்கிறார்கள். ‘எவ்வளவு சம்பாதிச்சாலும் பற்றாக்குறைலயே குடும்பம் ஓடிட்டிருக்கு’ என்று சிலர் அலுத்துக் கொள்வார்கள். பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள் ‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என நாடுவார்கள். அதிலும் குறிப்பாக, லக்ஷ்மியையும் குபேரரையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால், கஷ்டங்களில் இருந்தும் தொழிலில் ஏற்பட்டு வந்த நஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பெருமாளுக்கு சார்த்தப்படுகிற துளசியை மகாலட்சுமியாகச் சொல்கிறது விஷ்ணு புராணம். அதேபோல் சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை என்பார்கள். இந்த வில்வத்திலும் மகாலட்சுமியே வாசம் செய்கிறாள் என்கிறது சிவபுராணம்.

ஆகவே, தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையில், சுவாமி படத்துக்கு முன்னே நின்று கொண்டு அல்லது அமர்ந்தபடி, திருமூலர் அருளிய ‘ஓம் ஐஸ்வேஸ்வராய நம’ எனும் மந்திரத்தை நம்மால் முடிந்த அளவுக்குச் சொல்லிவரலாம். இந்த மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தாலே நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

அதேபோல், மகாலட்சுமிக்கு உகந்த நிறம் வெண்மை. தேவிக்கு உரிய பூவாக மல்லிகையைச் சொல்கிறது சாஸ்திரம். எனவே, பூஜையறையில் உள்ள மகாலட்சுமி படத்துக்கு மல்லிகைச் சரத்தை மாலை போல் அணிவிக்கலாம். அதேபோல், பீரோவில் ஓரிடத்தில் ஒரேயொரு மல்லிகைப்பூவை வைக்கலாம். கடை வைத்திருப்பவர்கள் கல்லாப் பெட்டியில் மல்லிகைப்பூக்கள் கொஞ்சம் வைப்பது ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் என்கிறார் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்.

அதேபோல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பர்ஸ், பெண்கள் பயன்படுத்தும் கைப்பை முதலானவற்றில் நான்கைந்து மல்லிகைப்பூக்கள் எப்போதும் இருக்கும்படி பத்திரமாக வைத்துக் கொள்ளவும். பூ வாடிவிட்டால், அந்தப் பூக்களை எடுத்துவிட்டு, மறுநாள் இந்த மந்திரத்தைச் சொல்லிவிட்டு, புதிதாக மல்லிகைப் பூக்களை பீரோவிலும் கைப்பையிலும், பர்ஸிலும் வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.

நாள் தவறாமல், மகாலட்சுமி வழிபாடு செய்வது மிக மிக அவசியம். அதேபோல் வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமையோ அல்லது அஷ்டமி திதியிலோ மகாலட்சுமியை வணங்கி பால்பாயசம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதைத் தொடர்ந்து செய்து வந்தால், மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறுவது உறுதி என்கிறார் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்.

அதேபோல், அஷ்டமியில் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு பிரார்த்தனைகளைச் சொல்லி மனதார வேண்டிக்கொள்வதும் நற்பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள். பைரவ மூர்த்தங்களில் பல மூர்த்தங்கள் உண்டு. அவர்களில் சொர்ணாகர்ஷண பைரவர், ஐஸ்வர்ய தோஷங்களைப் போக்குபவர், சகல பாக்கியங்களையும் தந்து அருளுபவர் என்றெல்லாம் ஆச்சார்யர்கள் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in