ஐஸ்வர்ய கடாட்சம், தீர்க்கசுமங்கலி பாக்கியம் தரும் வரலட்சுமி விரதம்!

வரலட்சுமி பூஜை
வரலட்சுமி பூஜை

பண்டிகைகள், பூஜைகள், சடங்கு சாங்கியங்கள் அனைத்துமே நம் வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காகவும் நம் மனதை செம்மைப்படுத்திக் கொள்வதற்காகவும் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. விரதங்கள், வழிபாடுகள் என்பவையெல்லாம் நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்காகவும் அப்படி ஒருமுகப்பட்ட மனத்துடன் நாம் செயலில் இறங்கும்போது காரியம் யாவும் வீரியம் பெறும் என்பதற்காகவும் கட்டமைத்து தரப்பட்டிருக்கின்றன. இப்படியான பண்டிகைகளில், விரதங்களில் முக்கியமானது வரலட்சுமி பூஜை.

பொதுவாகவே, பெண்கள் செய்யும் பூஜைகளுக்கும் விரதங்களுக்கும் சக்தியும் சாந்நித்தியமும் அதிகம். ஒரு குடும்பத்தின் தலைவியானவள், பூஜையில் ஆழ்ந்து ஈடுபட, அந்தக் குடும்பம் சிறக்கும், செழிக்கும், சந்ததியானது வாழையடிவாழையென வளரும் என்கிறது சாஸ்திரம். வரலட்சுமி பூஜையைச் செய்ய, சகல செல்வங்களுடனும் தாலிபாக்கியத்துடனும் வாழலாம் என்பது உறுதி.

மிக எளிமையான பூஜை இது. ஆடம்பரமில்லாத, ஆர்ப்பாட்டங்கள் இல்லாத, மிகுந்த பொருட்செலவு இல்லாத, அதேசமயம் வீரியம் மிக்க பூஜை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை ஆகஸ்ட் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை. இந்த பூஜையை முதல் நாள் மாலையிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது நியதி. அதாவது, நம் வீட்டில் அம்பாள் விக்கிரகத்தை வைத்துக்கொண்டோ அல்லது கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்தோ, முதல்நாளான வியாழக்கிழமையில், அம்பாளை நம் வீட்டுக்கு அழைக்கவேண்டும்.

கலச பூஜை
கலச பூஜை

அப்படி அம்பாள் அழைப்புக்கு முன்னதாக, பூஜையறையைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜை செய்யுமிடத்தில், அம்பாளைக் கொண்டு வந்து வைக்குமிடத்தில், கலசம் வைக்குமிடத்தில், மாக்கோலமிடலாம். காவிக்கோலமிடலாம். மாலையில், சூரிய அஸ்தமனாகிற வேளையில், கலசத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து அழைத்து வந்து, பூஜையறையில் கோலமிட்ட இடத்தில் வைக்கவேண்டும்.

முதல் நாள் மாலையில், கலசத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, பூக்களிட்டு, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் என நைவேத்தியம் செய்து ஆராதிக்கவேண்டும். மறுநாள், வெள்ளிக்கிழமை, வரலட்சுமி பூஜை.

அன்றைய தினம், நமக்குத் தெரிந்த அம்பாள் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம். 108 போற்றி சொல்லி, ஒவ்வொரு போற்றி சொல்லும்போதும் பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கலாம். இந்த பூஜையில், அக்கம்பக்கத்துப் பெண்களை அழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், ஜாக்கெட் பிட், முடிந்தால் புடவை, வளையல் என மங்கலப் பொருட்களை வழங்கலாம். நம்மை விட பெரியவர்களிடத்தில் நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெறுவதும் நம்மை விட சிறியவர்களெனில் அவர்களுக்கு ஆசி வழங்குவதுமாகச் செய்யலாம்.

‘எங்கள் குடும்பத்தில் வரலட்சுமி பூஜை செய்ததே இல்லை. அந்த வழக்கம் எங்கள் புகுந்த வீட்டில் இல்லை. ஆனால், நான் செய்யவிரும்புகிறேன். அப்படிச் செய்யலாமா?’ என்று பலருக்கும் குழப்பங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் உண்டு. குலதெய்வ வழிபாட்டை சீரும் சிறப்புமாகச் சிலர் செய்வார்கள் சிலர். இன்னும் சிலர், தங்களின் குடும்பத்தில் இறந்த கன்னிப்பெண்கள் முதலானவர்களை, கடவுளாகவே பாவித்து, படையல் போடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இப்படி, குலதெய்வ வழிபாட்டையும் பித்ருக்கள் வழிபாட்டையும் குறைவறச் செய்தாலே போதுமானது. அந்த வீட்டில், எந்த துர்தேவதைகளும் நுழையமுடியாது. அமைதியும் ஆனந்தமுமாக அந்த வீடு திகழும்.

அதேபோல், இதுவரை வரலட்சுமி பூஜையைச் செய்யாத குடும்பமாக இருந்தாலும், அந்த பூஜையை முறையே அறிந்து கொண்டு, வயது முதிர்ந்த பெண்களின் ஆலோசனைகளின் படியும் ஆச்சார்யர்களின் வழிகாட்டுதல்படியும் வரலட்சுமி பூஜையை தாராளமாகச் செய்யலாம்.

விரத சூடாமணி எனும் நூல், லட்சுமி வழிபாடு நம் வாழ்விலும் குடும்பத்திலும் மிக மிக முக்கியம் என விவரிக்கிறது. அதேபோல், வரலட்சுமி பூஜை என்பதும் மாங்கல்ய பலம் தந்து, தீர்க்கசுமங்கலியாக பெண்களை வாழச் செய்யும் பூஜை. இந்த வரலட்சுமி பூஜையை, முழு ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் எவர் செய்தாலும் அவர்கள் இல்லம் தேடி மகாலட்சுமி வருவாள்; அவர்களின் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சத்தை நிரந்தரமாக இருக்கும்படி அருளுவாள் என அறிவுறுத்துகிறது.

நாளை ஆகஸ்ட் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை. இந்த பூஜையை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். உங்கள் இல்லத்திலும் ஐஸ்வர்ய கடாட்சம் நிலைக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in