இறந்த சுமங்கலிகளுக்காக, கன்னியருக்காக ஆடிச் செவ்வாய் வழிபாடு!

இறந்த சுமங்கலிகளுக்காக, கன்னியருக்காக ஆடிச் செவ்வாய் வழிபாடு!

நம் வீட்டில் கன்னியாக இறந்தவர்களுக்காகவும் சுமங்கலியாக இறந்தவர்களுக்காகவும் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில், பூஜைகள் செய்வதும் பிரார்த்தனை செய்வதும் மிகப்பெரிய புண்ணியங்களைத் தரும், ஆசீர்வாதத்தைத் தரும் என்பது ஐதீகம்.

சக்தி மிக்க மாதம் ஆடி. சக்தி என்று சொல்லப்படும் அம்பிகைக்கு உரிய மாதம் இது. இந்த மாதம் முழுவதும் அம்பாளை, அம்மனை, கிராம தெய்வப் பிரார்த்தனைகளைச் செய்வது கூடுதல் பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் என்பது, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம். அதாவது ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையிலான காலம் என்பது தட்சிணாயன காலம் என்கிறது வேதம். பொதுவாகவே இந்த தட்சிணாயன காலம் என்பது வழிபாடு, பிரார்த்தனை, பூஜைகள், ஜபம், கலைப்பயிற்சிகள், யோகா முதலானவற்றைக் கற்றுக் கொள்வதற்கான மாதங்கள் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆடி மாத தட்சிணாயனத் தொடக்க புண்ய மாதத்தில், புனித நீராடுதல் ரொம்பவே உன்னதமானது என்பது ஐதீகம். கங்கை, காவிரி முதலான நீர் நிலைகளுக்குச் சென்று நீராட இயலாதவர்கள், வீட்டில் குளிக்கும்போது, கங்கையை நினைத்து வணங்கிவிட்டு குளித்தால், காவிரியை வணங்கிவிட்டு குளித்தால், புனித நதிகளின் பெயர்களை மூன்று முறை சொல்லி, சிரசில் நீர் விட்டுக் குளித்தால், புனித நதிகளில் நீராடிய பலன்கள் உண்டு என்றும் முந்தைய தலைமுறையிலான பாவங்கள் உட்பட சகல பாவங்களும் நீங்கும் என்றும் ஞானநூல்கள் அறிவுறுத்துகின்றன.

ஆடி மாதம் எல்லாவற்றுக்குமான உன்னதமான மாதம். இந்த மாதத்தைக் கொண்டுதான், பண்டிகைகள் தொடங்குகின்றன. இந்த மாதத்தைக் கணக்கிட்டே பண்டிகைகளும் வழிபாடுகளும் பூஜைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன.

ஆடி மாதம் குலதெய்வங்களுக்கான மாதம். கிராம தெய்வங்களுக்கான மாதம். எல்லை தெய்வங்களை வழிபடுவதற்கு உரிய மாதம். புற்று கொண்டுள்ள தலங்களை வழிபடுவதற்கு உரிய மாதம். மாரியம்மன், காளியம்மன், செல்லியம்மன், மதுரைவீரன், காத்தவராயன், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி, அய்யனார் முதலான தெய்வங்களை வழிபடுவது மும்மடங்குப் பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தின் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் அம்பாளைக் கொண்டாடுவதற்கும் வணங்குவதற்குமான அற்புதமான நாட்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அதேபோல், குடும்பத்தில் சுமங்கலியாகவோ கன்னிப்பெண்ணாகவோ இறந்தவர்களின் ஆத்மாக்களைக் குளிர்விப்பதற்காகவும் அவர்களின் ஆசியைப் பெறுவதற்காகவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் படையலிடலாம். எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களை நைவேத்தியம் செய்யலாம்.

அப்போது, புடவை, ஜாக்கெட் வைத்து வேண்டிக்கொள்ளலாம். சுமங்கலிக்கோ கன்னிப்பெண்ணுக்கோ வஸ்திரம் தானமாக வழங்கலாம். கூடவே, வளையல், மஞ்சள், குங்குமம், கண்ணாடி முதலான மங்கலப் பொருட்களையும் வழங்கலாம். வயது முதிர்ந்த சுமங்கலிக்கு வழங்கி நமஸ்கரிப்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாக நம் குடும்பத்துக்குக் கிடைக்கும் என்றும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் அருளும் கிடைக்கப் பெறலாம் என்றும் விளக்குகிறார்கள் ஆச்சார்யர்கள்.

முக்கியமாக, ஆடிப்பெருக்கு நன்னாளில் புனித நீராடுவது விசேஷம். காவிரி, தாமிரபரணி, வைகை, பவானி முதலான நதிகளில், ஏரி குளங்களில் நீராடுவது மகா புண்ணியம். காவிரித்தாயை வணங்கிச் செய்யும் செயல் அனைத்தும் வீரியம் மிக்கதாக அமையும். குடும்பத்தின் தரித்திரம் விலகும். சுபிட்சமும் ஐஸ்வர்யமும் குடிகொள்ளும். திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும். கடன் முதலான தொல்லைகளில் இருந்து மீளலாம். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in