பிறருக்கென வாழ்பவரே அறிவுடையார்!

தம்மத்தின் பதம் - 7
பிறருக்கென வாழ்பவரே அறிவுடையார்!

நீர்நிறை ஏரி

சலனமற்றது

போதனைகள் நிறையும்போது

அளவற்ற அன்புடையவராகிறார் அறிவர்

எதையும் கொடுப்பர் நல்லவர்

சிற்றின்பத்தை விட்டவர் துறவியவர்

இன்பம்

துன்பம்

இரண்டிலும் மாறாதிருப்பவரே அறிவர் ( தம்மபதம் 82)

எண் மார்க்கம் என்னும் ஒரு வாழ்வுமுறையை நமக்கு உரைக்கிறது பௌத்தம். மனித வாழ்விலான துன்பங்களைப் போக்கும் வழிகளாக அவை உதிக்கின்றன. இந்த எண் வழியில் ஒரு வாழ்க்கை நடத்தப்படும் என்றால், அவ்வாழ்வு துன்பம் இல்லாததாக மாறிவிடும். இத்தகைய வாழ்வே அறிவுடையோர் வாழ்வு. தனக்கும் துன்பம் இல்லாமல், பிறருக்கும் துன்பம் செய்யாமல் இருப்பர் அறிவுடையோர். ஆகச்சிறந்த அறிவுடையோர் சமூகத்துக்குத் தங்களால் துன்பம் வராமல் பார்த்துக்கொள்வர்.

ஒரு பொருளின் நிறையையும் அதன் திசைவேகத்தையும் ஆற்றலாக மாற்றும் சூத்திரத்தை நமக்குத் தந்தார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவரின் அந்தக் கண்டுபிடிப்பு பிற்காலங்களில் ‘அணுகுண்டு’ தயாரிக்கப் பயன்பட்டபோதுதான் ஒரு அறிவியல் அறிஞராக இருப்பதற்கு வருத்தப்பட்டார் என்று அவரின் வாழ்வு நமக்குச் சொல்கிறது.

அமைதியான மனதுடன் வாழ!

நற்காட்சி, நல்லெண்ணம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்மனவிழிப்பு, நற்சமாதி ஆகிய இவைதாம் எண் மார்க்கங்கள் என்று சொல்லப்படுகின்றன.

இவற்றுள் நற்காட்சி, நல்லெண்ணம் ஆகிய இரண்டும் மெய்ஞானம் என்னும் வகைமையில் உள்ளடக்கலாம். இதைத்தான் ‘பிரக்ஞா’ என்கிறது பௌத்தம். நற்காட்சிகளின் மூலம்தான் நாம் நல்லறிவைப் பெற முடியும். காட்சி என்பது நாம் வெளியில் காண்பது அல்ல. அது தொலைநோக்கு. அந்த நோக்குதான் அறிவைப் பெறுவதற்கு நம்மை உந்துகிறது. அந்தக் காட்சி நல்லெண்ணம் கொண்ட மனதை உருவாக்குகிறது. எண்ணம் நற்சொல்லாகி, நற்செயலாகி அதுவே வாழ்வாகிவிடுகிறது.

அறிவினைப் பெற்றவர் வாழ்க்கை என்பது போற்றுதலுக்குரியது.

பிறரின் குற்றங்களைச் சுட்டுகிறார்

அறிவர்

அறிவுறுத்தித் தவறிழைப்பதிலிருந்து

பிறரைத் தடுக்கிறார்

அவரை விரும்பும் எப்போதும் நன்மை

வெறுத்தல் தீமை (தம்மபதம் 77)

அறிவுடையவர் அமைதியான மனதுடன் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் நற்சிந்தனையுடையவர்களாக மகிழ்வாக இருப்பார்கள். நீர்ப்பாசனம் செய்யும் உழவர்தான் நீரின் திசைவழியை மடைமாற்றம் செய்வார். கொல்லர் அம்பைச் செய்து தருவார். தச்சன், தான் செய்யும் பொருளுக்கேற்ற வகையில் மரத்தை வளைப்பார். அதுவே, ஓர் அறிவரோ தன்னையே ஆள்கிறார். அதனால், அவரின் உள்ளும் புறமும் அவருக்குத் தெரிகிறது. எது நன்மை எது தீமை என்னும் பிரித்தறியும் தன்மையால் நன்மையை உரைக்கிறார், செய்கிறார் எப்போதும் நன்மையாகவே வாழ்கிறார்.

அறிவர்கள் போற்றப்படுவதாலும் தூற்றப்படுவதாலும் நிலை மாறுவதில்லை. இரண்டையும் ஒன்றாகவே அவர்களால் பாவிக்க முடியும். காற்றால் அசைக்கமுடியாத கல்மலையைப் போன்றவர்கள் என்கிறார் புத்தர். இன்னொரு இலக்கணத்தையும் அறிவர்களுக்காக புத்தர் கூறுகிறார். தனக்காகவோ, பிறருக்காகவோ, நீதியற்ற முறையில் கிடைக்கும் வெற்றியைத் தேடமாட்டார்கள் அறிவர்கள். அவர்கள் எப்போதும் நேர்மையானவர்களாகவே வாழ்வார்கள்.

பெண் கல்விக்கு புத்தரின் குரல்!

ஆசைகள் அடங்காத மனதைத் துறந்து, உயர்வை அடையத் துடிக்கும் அறிவாளிகள், இருள் என்னும் அழுக்கைத் துறந்து தூய்மை ஒளியை அடைகின்றனர். அதனால், தீயொழுக்கம் அற்றவர்களாக மாறுகின்றனர். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் தன்மை உடையவர்களாக மாறிவிடுகிறார். ‘தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இன்றளவும் இருக்கிறது’ என்று புறநானூறில் ஒரு பாடலில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதியிருப்பார். இவர்களையே அறிவுடையவராக தம்மம் கூறுகிறது.

இத்தகைய அறிவைப் பெறுவது அனைவரின் தேவையும் கடமையும் ஆகிறது. அதற்குக் கல்வி மிகவும் அவசியமாகிறது. பெண்களுக்கும் மனிதர்களில் சில பிரிவினருக்கும் கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். புத்தர் ஒருமுறை சாலவதிகா என்ற இடத்தில் தங்கியிருக்கும்போது, லோகிக்கர் என்னும் அறிவுடையவரைச் சந்திக்கிறார். லோகிக்கரோ, பெண்களும் மனிதர்களில் ஒரு பகுதியினரும் கல்விப்பெறக்கூடாது என்னும் எண்ணம் உடையவர். அவரிடம் புத்தர் உரையாடுகிறார்.

“லோகிக்கரே சாலவதிகாவில் விளைவதெல்லாம் உங்களுக்கு மட்டுந்தான் சொந்தம், மற்றவருக்கு இல்லை என்று சொன்னால் அது சரியா?”

“இல்லை” என்கிறார் லோகிக்கர்.

“அப்படிச் சொல்பவர் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் பகைமை மனம் கொண்டவர் தானே?” என்று புத்தர் கேட்கிறார்.

”ஆம்” என்கிறார் லோகிக்கர்.

அப்படியானால், கல்வியும் கூட அனைவருக்கும் சொந்தம் தானே என்கிறார் புத்தர். பிறருக்குத் தரக்கூடாது என்று சொல்பவர்களும் பிறருக்குத் தீங்கிழைக்கக் கூடியவர்கள்தானே என்று சொல்கிறார் புத்தர். லோகிக்கருக்குப் புரிகிறது. கல்வி அனைவருக்கும் பொதுவானது என்பது சத்தம்மம் என்பது புத்தரின் கோட்பாடு.

மனிதரில் ஒருசிலரே

வாழ்வுநதியின் அக்கரையை அடைவர்

பலரோ

இக்கரையிலேயே வாழ்ந்து முடிகின்றனர். ( தம்மபதம் 85)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
பிறருக்கென வாழ்பவரே அறிவுடையார்!
அறிவற்றோருடன் இருப்பதைவிட தனிமையே மேல்!

Related Stories

No stories found.