இந்த ஜென்மத்து பாவம் போக்கும் திருப்பூந்துருத்தி!

திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்

அமாவாசை நாளில், திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிவனாரையும் உமையவளையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது கண்டியூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. பயணித்தால் திருப்பூந்துருத்தி எனும் அற்புதமான தலத்தை அடையலாம். மிக அழகான ஆலயத்தில் அற்புதாமாக சந்நிதி கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

இந்தத் தலத்து இறைவனின் திருநாமம் புஷ்பவனேஸ்வரர். அம்பாளின் திருநாமம் அழகார்ந்த நாயகி. அதாவது செளந்தர்ய நாயகி. பேருக்கேற்றாற் போல், அழகுடனும் கனிவுடனும் கருணைப்பார்வையுமாக ஜொலிக்கிறாள் அம்பிகை. பிரம்மாண்டமான ஆலயத்தில், ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.

நாவுக்கரசர் தேவாரம் பாடிய திருத்தலம் இது. இரண்டு ஆறுகளுக்கு நடுவே துருத்திக் கொண்டிருக்கிற ஊர் என்பதால் ‘துருத்தி’ எனப் பெயர் அமைந்ததாகவும் இறைவனின் திருநாமம் புஷ்பவனேஸ்வரர் என்பதால் திருப்பூந்துருத்தி என்றானதாகவும் ஸ்தல புராணம் சொல்கிறது.

திருவையாறு தலத்தை சப்த ஸ்தான தலங்களின் மூலக்கோயில் என்பார்கள். திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருநெய்த்தானம், திருப்பூந்துருத்தி என சப்த ஸ்தான ஸ்தலங்களில் இந்தத் தலமும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில், சித்ரா பெளர்ணமியின் போது, சப்த ஸ்தானத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதை ஏழூர்த்திருவிழா என்றும் சொல்லுவார்கள்.

திருநாவுக்கரசர் பெருமான் இந்தத் தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டு வந்தார். இதையறிந்த ஞானசம்பந்தர், மதுரையில் இருந்து நேரடியாக சோழ தேசத்துக்கு வந்தார். பல்லக்கில் திருப்பூந்துருத்தி கோயிலுக்கு வந்தவர், “நான் நாவுக்கரசப் பெருமானை தரிசிக்க வந்தேன். அவர் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். “இதோ... நான் இங்குதான் இருக்கிறேன்” என்றார் நாவுக்கரசர். பார்த்தால், ஞானசம்பந்தரின் பல்லக்கைத் தூக்கியபடி நின்றவர்களில் ஒருவராக நின்றிருந்தாராம். அதிர்ந்து போய் பல்லக்கில் இருந்து இறங்கினார் ஞானசம்பந்தர். அப்பர் பெருமான் மடமொன்று தொடங்கி, இங்கே தொண்டுகள் பலவும் செய்தார். அந்த மடம் இன்றைக்கும் இருக்கிறது.

அதேபோல், சம்பந்தர் பெருமான் கோயிலுக்குள் வரும்போது உள்ளே நுழையும்போதே சிவ தரிசனம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, நந்திதேவர் சற்றே விலகி நின்றுகொண்டாராம். இன்றைக்கும் சந்நிதிக்கு எதிரே சற்று தள்ளியே இருக்கின்ற நந்தியைத் தரிசிக்கலாம்.

இந்தத் தலத்து முருகப்பெருமானும் விசேஷமானவர். அருணகிரிநாதர், இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானின் பேரழகையும் பேரருளையும் திருப்புகழில் பாடியுள்ளார்.

அதேபோல், இந்தத் தலத்தில் திருக்கரத்தில் வீணையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார் வீணாதர தட்சிணாமூர்த்தி. கலைத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் எனும் ஆர்வமும் லட்சியமும் கொண்டிருப்பவர்கள், திருவையாறு தலத்துக்கு வரும் போது அப்படியே திருப்பூந்துருத்தி தலத்துக்கும் வந்து தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேவேந்திரனும் காசிப முனிவரும் இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்து வரம் பெற்றனர் என விவரிக்கிறது ஸ்தல புராணம்.

திருப்பூந்துருத்தி திருத்தலத்துக்கு, மாத சிவராத்திரியில் அல்லது மகா சிவராத்திரியில், பிரதோஷ நன்னாளில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வந்து தரிசிக்க வேண்டும் என்கிறார்கள் சிவனடியார்கள். வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரரை கண்ணாரத் தரிசித்துவிட்டால், இந்த ஜென்மத்தின் எல்லாப் பாவங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். அதேபோல், அமாவாசை நாளில், திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிவனாரையும் உமையவளையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், பித்ருக்களின் ஆசி நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in