பிச்சாண்டார் கோயில்: ஏழு குருவையும் தரிசித்தால் தேர்வில் ஜெயிக்கலாம்!

பிச்சாண்டார் கோயில்: ஏழு குருவையும் தரிசித்தால் தேர்வில் ஜெயிக்கலாம்!

ஏழு குருவையும் ஒருசேர தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பது ஐதீகம்!

சிவன் கோயில்களில், குருவாகத் திகழும் தட்சிணாமூர்த்தியை கோஷ்டத்தில் வலம் வரும் போது தரிசிக்கலாம். அதேபோல், நவகிரகங்களில் ஒரு கிரகமாக குரு பகவான் தரிசனம் தருகிறார். அவரையும் தரிசித்து நவக்கிரகத்தை வலம் வந்து வழிபடலாம். சில ஆலயங்களில், நவக்கிரக குரு பகவான் தனிச்சந்நிதியில் காட்சி தந்தருள்வார். ஆனால் ஒரே கோயிலில், ஏழு குருவும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். இவர்களை சப்த குரு என்று அழைக்கிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று! சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் திருத்தலம் இது.

திருச்சியில் பழைய சமயபுரம் டோல்கேட் எனும் பகுதி உள்ளது. காவிரிக்கரையை அடுத்து கிளைபிரிந்து செல்லும் நாமக்கல் செல்லும் சாலையில், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாலத்தின் கீழ் அமைந்திருக்கிறது உத்தமர்கோயில் எனும் ஊர். இங்கே அழகுற அமைந்திருக்கிறது பிச்சாண்டார் கோயில். எந்தக் கோயிலிலும் இல்லாத வகையாக, ஏழு குருவின் சந்நிதி அமைந்திருப்பது இந்தத் தலத்தின் விசேஷம்.

உத்தமர் கோயிலின் முதல் சிறப்பம்சம்... சிவா, விஷ்ணு, பிரம்மா மூன்று தெய்வங்களும் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. மும்மூர்த்திகளும் மூர்த்தமாக இருந்து, கோயில் கொண்டு, அருளாட்சி செய்யும் தலம் அரிது என்கிறார்கள். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது உத்தமர்கோவில். இந்தத் திருத்தலத்தை உத்தமர் கோயில் என்றும் சப்த குரு ஸ்தலம் என்றும் போற்றுகிறது ஸ்தல புராணம்.

அதாவது, தேவகுரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்கிராச்சார்யர், ஞான குரு ஸ்ரீசுப்ரமணியர், படைப்புக் கடவுளான ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு குருவாக ஸ்ரீவரதராஜர், சிவ குருவாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி, சக்தி குருவெனக் காட்சி தரும் ஸ்ரீசௌந்தர்ய நாயகி ஆகியோர் அனைவரும் ஒரே இடத்தில், ஒரே தலத்தில், ஒரே கோயிலில் அமைந்து அருள்பாலிக்கிறார்கள்.

குரு பகவானின் அதிதேவதை ஸ்ரீபிரம்மா என்பது குறிப்பிடத்தக்கது. சப்த குருவும் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு வந்து, அவர்களைக் கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். குறிப்பாக, மாணவர்கள், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், மந்த புத்தி விலகும். காரியத் தடைகள் அனைத்தும் அகலும். ஞாபக சக்தி அதிகரிக்கும். குரு தோஷம் நீங்கும். குருவின் பரிபூரண அருள் கிடைக்கப் பெற்று, தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றிபெறலாம் என்பது நம்பிக்கை.

இங்கு வியாழக்கிழமைகளில், குருவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குருப்பெயர்ச்சியின் போது, சிறப்பு ஹோமங்களும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அதேபோல், துவாதசியிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு வந்து சப்தகுருவையும் மனதாரப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in