கண்ணங்குடி கிருஷ்ணருக்கு வெண்ணெய் தந்தால் பிள்ளை வரம்!


கண்ணங்குடி கிருஷ்ணருக்கு வெண்ணெய் தந்தால் பிள்ளை வரம்!

திருக்கண்ணங்குடி கண்ணனை வணங்கினால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் கண்ணபிரான். நவநீதகிருஷ்ணனுக்கு வெண்ணெய் சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் வேதனைகளையெல்லாம் தீர்த்து வைப்பான் வெண்ணெய்ப்பிரியன்!

ஸ்ரீகிருஷ்ணர் அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க தலங்களாக ஐந்து தலங்களைச் சொல்லுவார்கள். ஐந்து கோயில்களை ‘பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கபிஸ்தலம் ஆகியவையே அந்த ஐந்து கிருஷ்ணத் தலங்கள் என்பார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆழியூர் பள்ளிவாசல். இங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் பயணித்தால், திருக்கண்ணங்குடியை அடையலாம்.

இங்கு லோகநாதப் பெருமாள் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் பெருமாள். ஸ்ரீதேவி-பூதேவி உடனாய லோகநாதர், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் லோகநாயகி என்ற பெயரில் தனிச் சந்நிதியில் இருந்தபடி தரிசனம் தருகிறார்.

உற்சவர்கள் தாமோதர நாராயணப் பெருமாள் என்றும் ஸ்ரீஅரவிந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வந்த வசிஷ்ட முனிவர், வெண்ணெயில் கிருஷ்ணரை செய்து கிருஷ்ணரை நவநீதக் கிருஷ்ணராக வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம். நவநீதம் என்றால் வெண்ணெய் என்று அர்த்தம்.

வசிஷ்ட பக்தியில் மயங்கிய கண்ணன், வெண்ணெயில் இருந்து சிறுவனாக. பாலகனாக வெளிப்பட்டார். பின்னர் வசிஷ்டருக்கும், மற்ற முனிவர்களுக்கும் காட்சி தந்து அருளினார். இங்கேயே நிரந்தரமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்ற முனிவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால்தான் கண்ணபிரான் குடிகொண்டிருக்கும் இந்த ஊர், திருக்கண்ணங்குடி என்றானது. கண்ணன்குடி என்றும் போற்றப்படுகிறது.

புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் மாதந்தோறும் ரோகிணி நட்சத்திர நாளிலும் திருக்கண்ணங்குடிக்கு வந்து கண்ணபிரானை கண்ணாரத் தரிசித்து வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் தந்தருளுவார் கிருஷ்ணர்.

வாழ்க்கையில் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள், வீடு மனை சொந்தமாக இல்லையே என்று ஏங்குபவர்கள் திருக்கண்ணங்குடி கண்ணபிரானை வந்து வேண்டிக் கொண்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் திருக்கண்ணங்குடி நாயகன். தாமோதரப் பெருமாளுக்கு வெண்ணெய் சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தித் தருவார் கிருஷ்ணபரமாத்மா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in