பாபாவை சரணடைந்தால்... பாபாவே நம்மைத் தேடி வருவார்!

பாபாவை சரணடைந்தால்... பாபாவே நம்மைத் தேடி வருவார்!

கவலையும் கர்வமும் நமக்குள்ளேதான். விருப்பு வெறுப்பு என்பதெல்லாம் மனிதர்களுக்குதான். பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நம்மிடையேதான்! ஆனால் பாரபட்ச, பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவராக எல்லா மனிதர்களையும் பார்க்கிறவர் சாயிபாபா. தன்னை நாடி வருபவர்களிடம் எந்த வித்தியாசங்களும் பார்க்கமாட்டார். ஏற்ற இறக்கங்களெல்லாம் பாபாவுக்கு இல்லை. பாபாவின் சந்நிதிக்கு வந்துநின்று, கண்கள் மூடி கைகூப்பி நிற்பவர்களை, மனமுருகி பிரார்த்தனை செய்பவர்களை, ஒருபோதும் கைவிடுவதில்லை பாபா என்கிறார்கள் பக்தர்கள்.

பாபாவின் பேரருள், நம்மை வழிநடத்துவதை மெல்ல மெல்ல உணர்ந்து, புரிந்துகொள்வோம். பாபாவின் சந்நிதி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு சென்று வழிபடுவதைத் தொடருவோம். பாபாவும் அற்புதம்; அவரின் அருளாடல்களும் அதிசயம்.

’’உன்னை எல்லோரும் வெறுக்கிறார்களே என்று வருந்தாதே. அதேபோல, உன்னை நிறைய பேர் விரும்புகிறார்களே என்று கர்வமும் கொள்ளாதே! இந்த இரண்டுமே ஒன்று என்றும், அதுவே மாயை என்றும் என்னைப் பார்க்க வரும் தருணத்தில், ஒருநாள் நீங்கள் எல்லோரும் உணர்ந்து கொள்வீர்கள். உங்களுக்காக கவலைப்பட நான் இருக்கிறேன். வேறு எந்த சிந்தனையிலும் லயிக்காதீர்கள். குழப்பமாகி விடாதிருங்கள். கோபமாகிற தருணங்களில் அமைதியாக இருங்கள். வருந்துகிற தருணங்களில் துக்கித்துப் போய் சுருண்டு கொள்ளாதீர்கள். என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.. என்னையே நினைத்துக் கொண்டிருங்கள். நல்லதே நடக்கும்’’ என விவரிக்கிறது ‘ஸ்ரீசாயி சத்சரிதம்’.

மனதில் கலக்கமோ துக்கமோ, பயமோ சோகமோ அழுத்துகிற வேளையில், பாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். ‘எனக்கு மட்டும் ஏனிப்படி?’ என்று புலம்பாதவர்களே இல்லை. ‘நான் ஒரு தப்பும் செய்யலையே’ என்று கண்ணீர் விடாதவர்களே இல்லை. ‘எவ்வளவு சம்பாதித்தும் நாலுகாசு சேர்க்கமுடியலையே’ என்று கலங்காதவர்கள் என்று எவருமில்லை. இப்படியான தருணங்களில், பாபாவை நினையுங்கள். ‘சாயிராம்’ என்று மனதில் சொல்லிக்கொண்டிருங்கள் என்கிறார்கள் பாபாவின் பக்தர்கள்.

’’தினமும் காலையிலும் மாலையிலும் ஷீர்டி பாபாவின் காயத்ரீயைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். மனக்கலக்கத்தில் இருந்து எங்களை விடுவித்து அருளுகிறார் பாபா. எங்கள் துக்கத்தையெல்லாம் போக்கி அருளுகிறார் சாயிநாதன். எங்கள் மீது விழுந்த அபாண்டங்களையெல்லாம் மாற்றி, அப்பழுக்கில்லாதவர் என்பதை உலகுக்கு உணர்த்துகிறார் சாய் மகராஜ்’’ என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் பாபாவின் லட்சக்கணக்கான பக்தர்கள்.

ஷீர்டி பாபா காயத்ரீ

ஓம் ஷீர்டி ஸாயி நிவாஸாய வித்மஹே

ஸர்வ தேவாய தீமஹி

தந்நோ ஸர்வ ப்ரசோதயாத்

**************

அப்படியே, பாபாவின் தியான ஸ்லோகத்தையும் சொல்வது நல்லது. பத்து நிமிடமாவது அமர்ந்து, கண்கள் மூடி, பாபாவை பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் சம்பாத்தியத்தை இரட்டிப்பாக்குவார். இல்லறத் தேவைகளை நிவர்த்தி செய்து அருளுவார் என்கிறது சாயி சத்சரிதம்.

ஷீர்டி பாபா தியான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்

த்வாரகா மாயீ வாசினம்

பக்தா பீஷ்டம் இதம் தேவம்

ஸாயி நாதம் நமாமி;

ஷீர்டி பாபாவின் காயத்ரீயையும் தியான ஸ்லோகத்தையும் தினமும் சொல்லுவோம். முடிந்த போதெல்லாம் சொல்லுவோம். பாபாவின் மந்திரங்களை ஜபிக்க ஜபிக்க, பாபாவை நினைக்க நினைக்க நம்முடைய கஷ்டங்களையும் துக்கங்களையும் போக்கி அருளுவார் ஷீர்டி நாதன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in