இன்று வாஸ்துபுருஷனை வணங்கினால் சொந்தவீடு வாங்கலாம்!

- பூமியில் நாம் வாழ சொந்த இடம் தரும் வாஸ்து புருஷ வழிபாடு!
வாஸ்து புருஷன்
வாஸ்து புருஷன்

குடும்பத்தில் நல்லது நடந்தால், ‘இறையருள்’ என்றும் ‘அதிர்ஷ்டம்’ ‘உழைப்புக்குக் கிடைத்த பலன்’ என்றும் ஏதேதோ சொல்லுவார்கள். ஆனால் கெட்டது ஏதும் நடந்துவிட்டால், ‘வாஸ்துப் பிரகாரம் வீடு கட்டலையோ என்னவோ’ என்றும் சிலர் காரணம் எழுப்புவார்கள்.

ஐந்தும் இரண்டும் ஏழு என்கிற கணக்கு போல, ஜோதிட சாஸ்திரத்தில் இந்த நட்சத்திரம், இத்தனாம் பாதம், இந்த லக்னம் என்றெல்லாம் பார்த்து கணக்குச் சொல்வது போல, வாஸ்து என்பதும் சாஸ்திர அடிப்படையில் ஒரு கணக்கைக் கொண்டு போடப்பட்டு வரையறுத்து, சொல்லப்பட்டிருக்கிறது. இதை மனையடி சாஸ்திரம் என்றே சொல்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.

ஒரு மனையை வாங்கும்போது, நன்றாக கவனித்து வாங்காமல் நம்முடைய பொருளையும் பணத்தையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே, வாஸ்து குறித்த தகவல்களை மனையடி சாஸ்திரத்தில் தந்திருக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

மனையடி சாஸ்திரத்தின் நாயகனாகத் திகழ்பவர்தான் வாஸ்து. வாஸ்து என்பது ஆண் தெய்வத்தின் பெயர். மனை, பூமி சம்பந்தப்பட்டது. புருஷன் என்றால் ஆள்பவன் என்று அர்த்தம். மனையையும் பூமியையும் ஆட்சி செய்பவன் என்பதால்தான், வாஸ்து புருஷன் என்ற பெயர் அமைந்ததாகச் சொல்கிறது மத்ஸய புராணம்.

சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி அடைந்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியில் உள்ள வியர்வைத் துளிகளில் ஒன்று பூமியில் விழுந்தது. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வந்தது. அந்த பூதத்துக்கு அகோரப்பசி. போரில் கீழே விழுந்து இறந்தவர்களையெல்லாம் சாப்பிட்டது. அப்போதும் பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால், அந்த பூதம் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தது. தவத்தில் மகிழ்ந்த சிவனார், ’’உனக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டார். ’’இந்த பூமி முழுவதும் என்னுடைய கண்காணிப்பில், என் ஆளுமையில் இருக்கவேண்டும். அழிக்கும் சக்தியானது எனக்கு வேண்டும்’’ என நமஸ்கரித்துக் கேட்டது பூதம்!

இதை பிரம்மதேவன் அறிந்துகொண்டார். பிரம்மாவுடன் தேவர்களும் சேர்ந்துகொள்ள, அந்த பூதத்தை குப்புறத் தள்ளினார்கள். அனைவரும் பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் செய்தார்கள். பூதம் அந்தநிலையிலும் ‘’எனக்கு பசிக்கிறது, எனக்குப் பசிக்கிறது’’ என்றது. அதற்கு பிரம்மா, ’’பூமியில் அந்தணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை நீ சாப்பிட்டுக்கொள். மேலும், பூமியில் குடியிருக்க கட்டிடம் எழுப்புவோர், உன்னை வணங்கி, உனக்காக ஹோமம் வளர்ப்பார்கள். அந்த ஹோமத்தில் இடுகின்ற பொரி முதலான உணவுகளை சாப்பிட்டு பசியாற்றிக்கொள்’’ என அருளினார்.

அன்றுமுதல், இந்த உலகில் எவர் ஹோமம் செய்தாலும் அதில் வாஸ்து புருஷன் என்கிற வாஸ்து பகவானுக்கு ஒரு பகுதி உணவு, ஹோமத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது என்றும் அந்த உணவைச் சாப்பிட்டு பசியாற்றிக் கொள்ளும் வாஸ்து பகவான், எந்த இடத்தில் ஹோமம் நடக்கிறதோ, யார் புதிதாக கட்டிடம் கட்டுகிறார்களோ அந்த இடத்தையும் அதில் வசிப்பவர்களையும் செழுமையாக்கி வாழச் செய்கிறார் என்று மனையடி சாஸ்திரம் விவரித்துள்ளது.

அதனால்தான், வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், உரிய நேரத்தில், பூமியில் கிணறு தோண்டுவது, மனையில் அஸ்திவாரம் தோண்டுவது, வாசற்கால் வைப்பது, கிரகப்பிரவேசம் வைப்பது முதலான விஷயங்களைச் செய்யச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வாஸ்து பகவான்
வாஸ்து பகவான்

இன்று மாசி மகம். அற்புதமான நாள். இன்று வாஸ்து நாளும்கூட ‘மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம்’ என்பது ஜோதிட வாக்கியம். அப்பேர்ப்பட்ட உயரிய மாசி மகமும் வாஸ்து நாளும் இணைந்து வருவது இன்னும் நல்லதிர்வுகளைக் கொடுக்கவல்லது என்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

அமாவாசைக்குப் பிறகு பெளர்ணமியை நோக்கிச் செல்லும் நாட்களை சுக்லபட்ச நாட்கள் அதாவது வளர்பிறை நாட்கள் என்கிறோம். பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ணபட்ச நாட்கள் அதாவது தேய்பிறை நாட்கள் என்கிறோம். வளர்பிறை சதுர்த்தசி திதியில், மாசி மக நட்சத்திர நன்னாளில், வாஸ்து நாளும் இணைந்திருக்கிறது.

இன்று காலை 10.32 முதல் 11.08 மணி வரை வாஸ்து புருஷனுக்கு உரிய வாஸ்து பகவானுக்கு உரிய நேரம். வழக்கம்போல் காலையில் எழுந்து விளக்கேற்றி, தீபதூப ஆராதனைகளைச் செலுத்தி பூஜைகளை மேற்கொண்டிருந்தாலும் வாஸ்து புருஷனுக்கு உரிய இந்த நேரத்தில், தானியங்கள் வைக்கும் சமையலறை தொடங்கி தனம், பணம் வைக்கிற பீரோ அறை வரைக்கும் சாம்பிராணி தூபமிட்டு, ஊதுபத்தி நறுமணம் கமழ, மணியடித்து, தீபாராதனை செலுத்தி, மனதார வாஸ்து புருஷனை வணங்குவோம்.

பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள வீடு, முழுமையான கட்டிடமாக தடையின்றி வேலைகள் நடக்க அருளுவார் வாஸ்து பகவான். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் கூட, வாஸ்து நாளில், பூஜைகளை மேற்கொள்ளலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in