`ரயில் பயணம் எனக்குப் பிடிக்கும்’: கமல் வெளியிட்ட `விக்ரம்’ வீடியோ

`ரயில் பயணம் எனக்குப் பிடிக்கும்’: கமல் வெளியிட்ட `விக்ரம்’ வீடியோ

``ரயில் பயணம் எனக்குப் பிடிக்கும்'' என்று நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ’விக்ரம்’ பட புரமோஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ’விக்ரம்’. இவர்களுடன் நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன், ஆன்டனி வர்கிஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை ஜூன் 3-ம் தேதி வெளியிடுகிறது.

படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாகத் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக இந்தியாவின் முக்கியப் பாதைகளில் செல்லும் ரயில்களில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வரையப்பட்டுள்ளன. விரைவில் பாடல் வெளியீடும் இருக்கிறது.

இதன் டிரெய்லர் மே மாதம் 18-ம் தேதி பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’விக்ரம்’ தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ``ரயில் பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம் பிறை, மகாநதி, தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது'' என்று கூறியுள்ளார்.

கூடவே ’விக்ரம்’ பட போஸ்டர்களை தாங்கிய ரயில் செல்லும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.