கோயில்களைவிட்டு அறநிலையத்துறை வெளியேறுவது சாத்தியமா?

கோயில்களைவிட்டு அறநிலையத்துறை வெளியேறுவது சாத்தியமா?

சர்ச்சையும், பள்ளிவாசலையும் அந்தந்த மதத்தினரே நிர்வகிக்கிறபோது, இந்துக்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா? என்ற ஆர்எஸ்எஸ்சின் பிரச்சாரம், இப்போது தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்திருக்கிறது.

சென்னை மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய பிரச்சினையை பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுப்ப, இடைமறித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "முதல்வர் ஸ்டாலினை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரானவராக சித்தரிப்பதா?" என்று கொதித்ததுடன், "இதைவைத்து யாராவது சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயன்றால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்" என்று கோபத்துடன் சொன்னார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

முதல்வர் ஸ்டாலினோ, "பாஜக உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு, மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியைத் பெற்றுத்தருவது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல், இதிலே அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

எச்.ராஜா போட்ட விதை

இந்த வார்த்தைப் போரின் பின்னணி வெறுமனே அயோத்தியா மண்டபம் மட்டுமல்ல. இந்து கோயில்களைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற பாஜகவின் நீண்டநாள் கோரிக்கையின் வெளிப்பாடே. பாஜக தலைவர்கள், குறிப்பாக, எச்.ராஜா இதுபற்றித் தொடர்ந்து பேசிவந்தார்.

"அரசாங்கம் கோயிலை எடுத்துக்கொண்டால், எடுத்துக்கொண்டபோது இருந்த நிலையிலாவது அதைப் பராமரிக்க வேண்டுமா வேண்டாமா? அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இன்று செயல்பாட்டிலேயே இல்லை. இடிந்து, புதர் வளர்ந்து கிடக்கின்றன. அறநிலையத்துறை அதிகாரியாக இருக்கும் ஒருவனாவது இந்து உணர்வு உள்ளவனாக இருக்கிறானா?" என்றெல்லாம் காட்டமாகப் பேசினார் ராஜா. அதற்கு ஆதாரமாக, தமிழகத்தில் ஏதாவது ஓர் ஊரில் எடுக்கப்பட்ட, இடிந்த கோயிலின் புகைப்படத்தையும் அவர் சமூகவலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

"அறநிலையத்துறையின் வரலாற்றையோ, அது உருவாக்கப்பட்ட பின்னணியையோ அறியாத பாமர இந்துக்கள் அந்த படத்தையும், செய்தியையும் பார்த்தவுடனேயே அதிர்ச்சியடைவதும், ஆத்திரம் கொள்வதும் இயல்பான ஒன்று. அதேபோன்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் பேச முயன்றார்" என்கிறார்கள் திமுகவினர்.

அறநிலையத்துறை வரலாறு

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்த 1817-ம் ஆண்டில் இந்துக் கோயில்களின் நிர்வாகமானது வருவாய் வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த முறையே 1839 வரையில் நீடித்திருக்கிறது. 1858-ல் கிறிஸ்தவ மதம் சாராத பிற விஷயங்களில் அவர்கள் தலையிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்ட பிறகே, கோயில்களின் நிர்வாகம் அந்தந்த ஊர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பாஜகவினரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்துக் கோயில்கள் இந்துக்கள் வசமே ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மேலாக கோயில்களின் நிறைய முறைகேடுகள் நடந்ததுடன், சாதி ரீதியான பாகுபாடும் காட்டப்பட்டது. கோயில் நிலங்களும் சொத்துகளும் அபகரிக்கப்பட்டன. பெரிய கோயில்களை மட்டும் பராமரித்தவர்கள், வருமானமில்லாத கோயில்களை அம்போவென விட்ட கதையும் உண்டு. இந்த நிலையில்தான் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் இந்து அறநிலைய மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போதே அதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. 1954-ல் அதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1959-ல் புதிய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு, கோயில் நிர்வாகங்கள் அறநிலையத்துறையின் கீழ்கொண்டுவரப்பட்டன.

பராமரிப்பு எப்படி?

"இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் 43 ஆயிரத்து 585 திருக்கோயில்கள் இருக்கின்றன. அதில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் வருமானம் வருகிற கோயில்கள் வெறும் 300 தான். ஆண்டுக்கு 2 முதல் 10 லட்சம் வருமானம் வரும் கோயில்கள் 650. இதில் 35ஆயிரம் கோயில்களுக்கு வருட வருமானமே 10 ஆயிரத்துக்குள்தான் வருகிறது. அந்தந்த கோயில் வருமானம் அந்தந்த கோயிலுக்கு மட்டும்தான் என்றால், இங்கே பல கோயில்களில் அர்ச்சகர்களுக்கு ஊதியம்கூட கொடுக்க முடியாது. ஒரு காலபூஜைக்கு கூட வழியில்லாமல் போய்விடும்" என்பது அறநிலையத்துறையின் விளக்கம்.

பாஜகவினரோ, "கோயில் வருமானத்தை கோயில்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டியதுதானே... ஏன் கல்லூரி நடத்துவதற்கும், வணிக வளாகங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்த வேண்டும்? அப்படி கல்லூரி நடத்தினால் அதில் இந்து மதம் குறித்த பாடங்களை மட்டுமே நடத்த வேண்டுமே தவிர, பொதுவான பாடங்களை நடத்தக்கூடாது" என்கிறார்கள். தமிழகத்தில் வஃக்பு வாரியக் கல்லூரிகளும் சரி, கிறிஸ்தவ கல்லூரிகளும் சரி கலை, அறிவியல் பாடங்களை நடத்துகின்றன என்ற புரிதல் இல்லாத குற்றச்சாட்டு இது.

இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள்

இந்து கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோர் தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் அந்தந்த மதத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதேபோல அவற்றின் வருமானமானது அந்தந்த மதத்தினருக்கு மட்டுமே செலவிடப்படுவதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

ஆனால், அந்த மதங்களுக்கும், இந்து மதத்துக்கும் அடிப்படையிலேயே பல வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த மதங்கள் எல்லாம் சபைகளாகவும், ஜமாத்களாகவும் இயங்குகின்றன. இன்னும் சொல்லப்போனால் மதத்தலைவர்கள், குருமார்களின் கட்டுபாட்டிலேயே அவை இருக்கின்றன. இந்து மதத்தின் சிறப்பே அது நிறுவனமயமாக்கப்பட்ட மதம் அல்ல என்பதும், அது எல்லோரையும் அரவணைத்துச் செல்கிற மதமாக இருப்பதும்தான்.

அறநிலையத்துறையானது இந்து மதத்தின் பரந்துவிரிந்த கொள்கைகளுக்கேற்ப, பரந்த எண்ணத்துடன் நடத்தப்படுகிறது. கோயில்கள் அனைத்தும் மீண்டும் உள்ளூர் மக்களிடமே ஒப்படைக்கப்பட்டால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு சாதியின் ஆதிக்கம் ஏற்படக்கூடும். கூடவே, 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுபோல, சில சாதியினருக்கு கோயிலுக்குள் சமமான மரியாதை கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. இந்தக் கோளாறு இஸ்லாமிய, கிறித்தவ வழிபாட்டுத் தலங்களில் கிடையாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் அறநிலையத்துறை?

மன்னர்களும், செல்வந்தர்களும், சாதாரண குடிமக்களும் கோயிலுக்கென தானமாகக் கொடுத்த சொத்துகள் மட்டும் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தவிர, 22,600 கட்டிடங்களும் 33,660 மனைகளும் அறநிலையத்துறையின் பொறுப்பில் இருக்கின்றன. இவற்றில் இந்து மக்கள் பயன்படுகிற எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும். ஆனால், அப்படியொரு கனவோ, தொலைநோக்குத் திட்டமோ நம்முடைய அறநிலையத் துறையிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்னும் பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கின்றன. இவற்றை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அறநிலையத்துறை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, சேகர் பாபு அமைச்சரான பிறகு, இந்த நடவடிக்கைகளில் வேகம் காட்டுகிறார். ஆனால், சேகர் பாபுவை செயல்படாத பாபு என்று விமர்சிக்கிறார் எச்.ராஜா.

சேகர் பாபு
சேகர் பாபு

"கோயிலுக்குச் சொந்தமாக 4,28,000 ஏக்கர் நிலம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்களே, அதில் எந்தெந்த சொத்துகள் எல்லாம் கோயில்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, எந்தெந்த சொத்துகள் வாடகை அல்லது குத்தகைதாரரிடம் இருக்கிறது, எந்தெந்த சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன என்று கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புச் சொத்துகளை 6 வாரத்துக்குள் மீட்கச் சொல்லி 8 மாதங்களுக்கு முன்பு உத்தரவு போட்டது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தேவைக்கு அதிகமாகவே அதிகாரம் இருக்கிறது. சிவில் நீதிமன்றங்களில் வழக்கு தாமதமாகும் என்பதால், கோயில் சொத்துகளில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களையோ, வாடகை பாக்கிவைத்துள்ளவர்களையோ ஒரு நீதிமன்றம் போல வெளியேறச் சொல்லி உத்தரவிட அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், சேகர்பாபு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கிறார்" என்பது எச்.ராஜாவின் குற்றச்சாட்டு.

"அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையைச் செய்யாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. உண்மையில் அறநிலையத்துறைக்கும் கோயிலின் அன்றாட நிகழ்வுகளுக்கும் சட்டரீதியாக எந்தத் தொடர்பும் கிடையாது. அது வெறும் மேற்பார்வையிடும் அமைப்பு மட்டும்தான். அறங்காவலர் குழு தான் கோயிலை நிர்வகிக்க வேண்டும். அதில் உள்ளூர்க்காரர்களுக்கும், பரம்பரை அறங்காவலர்களுக்கும் பிரதிநிதித்துவம் தர வேண்டும். இதைச் செய்தால் தாங்கள் இஷ்டப்படி கொள்ளையடிக்க முடியாது என்பதால்தான் அதிமுக ஆட்சியிலும் சரி, இப்போதும் சரி அறங்காவலர்களை நியமிக்காமல் இழுத்தடிக்கிறார்கள். எனவே, உடனடியாக அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும். இல்லையென்றால், கோயில் கொடியவர்களின் கூடாரமாகவே தொடரும்" என்கிறார் பாஜகவின் நாராயணன் திருப்பதி.

"கோயில்களைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறீர்களே, அப்படி வெளியேறியபிறகு எந்த மாநிலத்தைப் பின்பற்றி அல்லது எந்தக் கோயிலைப் பின்பற்றி நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லலாமா?" என்று பாஜகவினரைக் கேட்டால் பதில் சொல்லத் திணறுகிறார்கள். மொட்டையாக, "நல்லவர்களை, நேர்மையான, உண்மையான இந்து உணர்வாளர்களைக் கொண்டு நிர்வகிக்கலாம்" என்கிறார்கள்.

"இன்று அனைத்து துறைகளிலுமே ஊழல் மலிந்துவிட்டது. அதைப்போலவே அறநிலையத்துறையிலும் ஊழல், முறைகேடு இருப்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களைப் பறித்து இந்துக்களிடம் கொடுக்கிறோம் என்று சொன்னால், அதனை அந்தந்த பகுதியில் வாழும் பெரும்பான்மை சாதியினரும், உயர் சாதியினரும்தான் கைப்பற்றுவார்கள். அவர்களும் ஊழல் செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, அறநிலையத்துறையில் உள்ள குறைகளை நீக்குவதுதான் சரியான முடிவாக இருக்கும்" என்கிறார்கள் திமுகவினர்.

கோயில் சொத்து என்பது, இறைவனின் சொத்து. அவற்றைப் பயன்படுத்துவதில் இந்துக்களுக்கு குறிப்பாக, ஏழைகளுக்கும், இறைவனின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிற வாய்ப்பற்றவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதே சரியாக இருக்கும். அதை தனியாரைவிட இந்து சமய அறநிலையத் துறையால்தான் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். ஆனால், அதற்கு ஊழல் ஒரு தடையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மேலும் அறநிலையத்துறை பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை தட்டிக்கழிக்க முடியாது. உண்மையான அக்கறையுடன் அது செயல்பட்டே ஆகவேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in