திருமண வரம் தருவார் திருவிடந்தை பெருமாள்!

திருமண வரம் தருவார் திருவிடந்தை பெருமாள்!

திருவிடந்தை திருமாலின் திருவருளால், விரைவில் திருமண வரம் கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களை இங்கே தினந்தோறும் பார்க்கலாம்! ராகு கேது முதலான சர்ப்ப தோஷங்களை நீக்கி, கல்யாண மாலையைத் தந்தருளும் திருவிடந்தை பெருமாளைத் தரிசிப்போம்!

சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிடந்தை. கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியே உள்ள அற்புதமான ஆலயம். 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இது கல்யாண வரம் தரும் தலமாகப் போற்றப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் எனும் பெருமையும் திருவிடந்தை திருத்தலத்துக்கு உண்டு.

இந்தத் தலம் குறித்து ஸ்தல புராணம் சொல்லும் சரிதம் இது.

அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன், சிறப்பான முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்குவதற்காகவும் தோஷம் களைவதற்காகவும் இந்தத் தலத்துக்கு வந்து, வராக தீர்த்தக்கரையில் தவமிருந்தான். இதன் பலனாக, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்!

இங்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட திருமால், பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒரு பெண் எனும் விகிதத்தில் திருமணம் புரிந்து அருளினார் என விவரிக்கிறது புராணம்! கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடது பக்கத் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இந்த உலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளினார் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம்.

தினம் ஒரு திருமணம் என பெருமாள் நிகழ்த்திய திருத்தலம் என்பதால் பெருமாளுக்கு (உற்சவர்) நித்ய கல்யாணப் பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அவரின் இடது பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு ஸ்ரீஅகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் அமைந்தது.

கோயிலில் தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் கோமளவல்லித் தாயார். ‘திரு’ வை அதாவது லட்சுமியை தன் இடபாகத்தில், பெருமாள் கொண்டுள்ளதால் திருஇடஎந்தை என்று பெயர் பெற்று, அதுவே மருவி திருவிடந்தை என்றானது.

இங்கே உள்ள தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

இங்கு ஆதிசேஷன், தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இந்தப் பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கும்; கல்யாண வரம் கைகூடும். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும் என்றும் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

திருமணத் தடையால் வருந்துவோர், இந்தத் தலத்துக்கு வந்து கல்யாண தீர்த்தத்தில் குளித்துவிட்டு, தேங்காய், பழம், மாலைகள் இரண்டு மற்றும் வெற்றிலைப் பாக்குடன் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

பின்னர், சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு பிராகாரத்தை ஒன்பது முறை வலம் வரவேண்டும். அதையடுத்து, கொடிமரம் அருகில் வடக்கு நோக்கி நமஸ்கரித்துவிட்டு, மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, திருமாலின் திருவருளால், விரைவில் திருமண வரம் கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களை இங்கே தினந்தோறும் பார்க்கலாம்!

சனிக்கிழமையான் இன்று ராகு கேது முதலான சர்ப்ப தோஷங்களை நீக்கி, கல்யாண வரம் தந்தருளும் திருவிடந்தை பெருமாளைத் தரிசிப்போம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in