தேர்வில் வெற்றி தருவார் ஹயக்ரீவர்!

தேர்வில் வெற்றி தருவார் ஹயக்ரீவர்!

தேர்வில் வெற்றி பெற ஹயக்ரீவரை வழிபடுவோம். மனதில் தெளிவு பிறக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். படித்த பாடங்கள் புத்தியில் மனப்பாடமாக இருந்து, தேர்வில் மாணவ மாணவிகளை வெற்றி பெறச் செய்யும்.

பிரம்மமாவும் ஞானமாகவும் திகழ்பவர் ஸ்ரீஹயக்ரீவர். குதிரை வேகத்தின் குறியீடு மட்டும் அல்ல... அறிவுக்கு உதாரணமாகத் திகழ்பவரும் கூட! அதனால்தான் ஞானத்தையும் யோகத்தையும் பறைசாற்றுகிற விதமாக, குதிரை முகத்துடன் காட்சி தருகிறார் ஹயக்ரீவர்!

மது-கைடபர் எனும் அசுரர்கள் இருவர், பிரம்மதேவனிடம் இருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றனர். ஸ்ரீமந் நாராயணர் பரிமுகனாய், அதாவது குதிரை முகத்துடன் அவதாரம் செய்து அசுரர்களை வென்று, வேதங்களை மீட்டு வந்தார் என்கிறது புராணம். பரி என்றால் குதிரை என்று அர்த்தம்.

இதோ... கலியுகத்திலும் கண்கண்ட தெய்வமாக, கல்விக் கடவுளாக இருந்து அனைவருக்கும் கல்வியும் ஞானமும் தந்தருள்கிறார் ஸ்ரீஹயக்ரீவர்.

தமிழகத்தில், ஸ்ரீஹயக்ரீவருக்கு உள்ள முக்கியமான திருத்தலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திரபுரம். கடலூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்!

இங்கே, ஒருகாலத்தில்... ஔஷதாத்ரி மலைக்கு மேல், ஸ்ரீநரசிம்மர் சந்நிதிக்கு எதிரே இருந்த அரச மரத்தடியில், கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் இருந்தார் அந்த மகான்.

கருட மந்ந்திரம் தன் சக்தியை வெளிக்காட்டியது. பெரிய திருவடியாம் ஸ்ரீகருடாழ்வாரின் தரிசனம் அந்த மகானுக்கு கிடைத்தது. அப்போது, ஸ்ரீகருடாழ்வார் அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந்தார்.

கருட பகவான் உபதேசித்த ஹயக்ரீவ மந்திரம், மகானின் உள்ளத்தில் பதிந்தது. அந்த மந்திரத்தை உச்சரித்து, ஸ்ரீஹயக்ரீவரை தியானித்து வழிபட்டு வந்தார். ஸ்ரீஹயக்ரீவரின் திவ்விய தரிசனத்தைப் பெறும் பாக்கியமும் அந்த மகான் அடைந்தார். ஞானமும், உண்மையான தெய்வ தத்துவங்களை மக்களிடையே எடுத்துச் சொல்லும் ஆற்றலும் பெருகும்படி அந்த மகானை அனுக்கிரஹித்தார் ஹயக்ரீவ பெருமாள். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அந்த மகான்... ஸ்ரீதேசிகர்.

தனக்குத் திருவருள் கிடைத்த திருவஹீந்திரபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தார். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாசத், தேவ நாயக பஞ்சாசத், அச்யுத சதகம் முதலான ஸ்தோத்திரங்களையும் மும்மணிக் கோவை, நவமணிமாலை போன்ற தமிழ்ப் பிரபந்தங்களையும் அருளினார் ஸ்ரீதேசிகர்!

ஒருமுறை, துறவி ஒருவர் தேசிகனிடம் வாதம் புரிய வந்தார். அவர் ஒரு மந்திரவாதி. ஆனாலும் ஸ்ரீதேசிகனின் முன்னால் துறவியின் வாதம் எடுபடவில்லை. பெருத்த தோல்வியை அடைந்தார். எனினும், தேசிகனை மந்திர சக்தியால் பழிவாங்கத் துடித்தார். தடக்கென்று ஒரு குளத்துக்குள் இறங்கியவர், குளத்து நீர் முழுவதையும் குடித்தார். அதன் விளைவாக ஸ்ரீதேசிகனின் வயிறு பருமனாகத் தொடங்கியது. இந்தச் சூழ்ச்சியை அறிந்த ஸ்ரீதேசிகன், துளியும் கவலைப்படவில்லை. பதறவில்லை. அருகில் இருந்த தூண் ஒன்றை நகத்தால் கீறினார். அவ்வளவுதான்... தூணில் இருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியது. படிப்படியாக ஸ்ரீதேசிகனின் வயிறும் பழைய நிலைக்குத் திரும்பியது. அதைக் கண்ட மந்திரவாதி, நெடுஞ்சாண்கிடையாக ஸ்ரீதேசிகனை விழுந்து நமஸ்கரித்தார்.

திருவஹீந்திரபுரத்தில், அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஔஷதகிரியில் (மலையில்) ஸ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார். ஔஷதகிரி சிறிய குன்று என்றபோதிலும், மேலே பிரம்மாண்டமான ஆலயத்தில், அற்புதமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர்!

மூலவர் லட்சுமி ஹயக்ரீவர். அருகே ஸ்ரீவேணுகோபாலன், கருடன் மற்றும் ஸ்ரீநரசிம்மரும் இருக்கிறார்கள். ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி மேலிரு கரங்களில் சங்கு- சக்கரம் தாங்கி, கீழ் வலதுகரம் அபய ஹஸ்தமும், கீழ் இடதுகரமும் ஸ்ரீகோசத்துடனும் திகழ்கிறது. திவ்விய தேசங்களுள் இங்கு மட்டும் ஹயக்ரீவருக்கு பிரதானமான தனிச் சந்நிதி உள்ளது. மலையடிவாரத்தில் தேவநாதன் சந்நிதியில், ஸ்ரீதேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவரும் அருள்பாலிக்கிறார்!

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாளில் இங்கு வந்து ஸ்ரீஹயக்ரீவரை மனதார பிரார்த்தித்தால், ஞானமும் யோகமும் கைகூடும்! ஏலக்காய் மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், கல்வியில் தேர்ச்சி பெறலாம்.

ஸ்ரீவாதிராஜர், ஸ்ரீபாதராஜர் முதலான மகான்களும் ஸ்ரீஹயக்ரீவரின் பரிபூரண அருளைப் பெற்ற அற்புதமான தலம் இது!

சென்னை சிங்கப்பெருமாள் கோயிலைக் கடந்ததும் மகேந்திரா சிட்டி எனும் பகுதி வரும். இந்தப் பகுதியில் இருந்து ரயில்வே கேட் கடந்து சுமார் 2 கிமீ பயணிட்த்தால், செட்டிபுண்ணியம் எனும் திருத்தலம் வரும். இங்கு அற்புதமான கோலத்தில், அழகும் ஞானமும் பொங்கக் காட்சி தருகிறார் ஸ்ரீஹயக்ரீவ பெருமாள். தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து ஹயக்ரீவரை கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டிக் கொள்கிறார்கள். அவர்களெல்லாம் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது ஐதீகம்.

சென்னை நங்கநல்லூரில் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். அதேபோல், தமிழகத்தின் பல ஆலயங்களிலும் சந்நிதி கொண்டிருக்கிற ஸ்ரீஹயக்ரீவரை முடிந்தபோதெல்லாம் வழிபடுங்கள். கல்வியில் சிறந்து விளங்கலாம். புத்தியில் தெளிவு ஏற்படும். மனக்குழப்பங்கள் அகலும். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். மங்காத செல்வங்கள் தந்தருளுவார் ஹயக்ரீவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in