அனுமன் ஜெயந்தி : அல்லல் தீர்ப்பார் அனுமன்!

அனுமன் ஜெயந்தி : அல்லல் தீர்ப்பார் அனுமன்!

மார்கழி மாதம் மூல நட்சத்திர நன்னாள், அனுமன் ஜெயந்தித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அனுமனை வணங்குவோம். வீட்டில் அனுமனை வணங்கியபடி,அனுமன் சாலீசா பாராயணம் செய்வோம். அல்லல்களையெல்லாம் போக்கி அருளுவார் அனுமன்!

நாமக்கல்லில் அற்புதமாக அமைந்திருக்கிறார் ஆஞ்சநேயர். பிரமாண்டமான ஆஞ்சநேயர் திருக்கோலத்தில் பிரமிக்க வைக்கும் உயரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இந்தக் கோயிலுக்கு கோபுரம் இல்லை. மலைக்கோட்டையின் கீழ் நரசிம்மர் கோயில் தனியே அமைந்துள்ளதும் நாமகிரித் தாயார் அருள்பாலிப்பதும் சிறப்புக்கு உரிய அமைப்பு என்கிறார்கள் பக்தர்கள்.

நரசிம்மரையும் நாமகிரித் தாயாரையும் வணங்குகிற திருக்கோலத்தில் தனிக்கோயிலில் இருந்தபடி ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். அனுமனுக்கும் லட்சுமிதேவிக்கும் காட்சியளித்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தம் திருக்காட்சி தந்த தலம் என்று ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடி கொண்ட பிரமாண்டம். இத்தனை பிரமாண்ட ஆஞ்சநேயர், நம் பிரச்சினைகள் அனைத்தையும் களைந்து கவலைகளைப் போக்கியருளுகிறார். தமிழகத்தில் ஏராளமான அனுமன் ஆலயங்கள் உண்டு என்றாலும் பழைமை மிக்க இந்த ஆலயமும் இங்கே உள்ள ஆஞ்சநேயர் சிலையும்தான் பிரமாண்டம் மிக்கது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

ராமாயண காலத்தில், சஞ்ஜீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துவந்தார் ஆஞ்சநேயர். பிறகு, மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒருபெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்துவந்தார் அனுமன். சாளக்கிராமம் எனப்படும் கல்லானது திருமாலின் அம்சம் என்று போற்றுகின்றன புராண நூல்கள்.

அந்த நேரத்தில் சூரியன் உதயமானது. வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தன் திருக்கரத்தில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார். பிறகு சாளக்கிராமத்தைத் தூக்க முனைந்தார். ஆனால் அப்பேர்ப்பட்ட அனுமனால், சாளக்கிராமத்தை நகர்த்தக் கூட முடியவில்லை.

’’ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்” என்றொரு அசரீரி அப்போது கேட்டது. ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார். ராமபிரான் போரில் வென்று சீதையை மீட்டார். அதற்கான அத்தனை உதவிகளையும் அனுமன் மேற்கொண்டு செய்து முடித்தார்.

இதையடுத்து, ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக திருமுகம் காட்டியபடி வளர்ந்து நின்றிருந்தது. அப்ப்போது அனுமனுக்கு திருக்காட்சி தந்தருளினார் நரசிங்கப் பெருமாள்! அப்படியே வணங்கிச் சிலிர்த்தார் அனுமர். அதனால்தான், இங்கே உள்ள ஆஞ்சநேயப் பெருமான், ஸ்ரீநரசிம்மரை வணங்கியவாறு நின்ற திருக்கோலத்தில் இன்றைக்கும் அருள்பாலித்து வருகிறார்.

பொதுவாக சனியால் பீடிக்கப்பட்டோர் சனிதோஷம் , ஏழரை சனி, ஜென்மச்சனி, கண்டகச்சனி என அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடலாம். வெற்றிலை மாலை, வடை மாலை சார்த்தி வழிபடலாம்.

மார்கழி மாதம் மூல நட்சத்திர நன்னாள், அனுமன் ஜெயந்தித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அனுமனை வணங்குவோம். வீட்டில் அனுமனை வணங்கியபடி,அனுமன் சாலீசா பாராயணம் செய்வோம். அல்லல்களையெல்லாம் போக்கி அருளுவார் அனுமன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in