அனுமன் ஜெயந்தி : வாழ்வை அர்த்தமாக்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர்!

அனுமன் ஜெயந்தி : வாழ்வை அர்த்தமாக்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர்!

அர்த்தகிரி அனுமனை வழிபட்டால்... இதுவரை சந்தித்த தோல்விகளில் இருந்து நமக்கு அபயம் அளித்துக் காத்தருளுவார் ஆஞ்சநேயர் என்கின்றனர் பக்தர்கள். அருளும் பொருளும் அள்ளித் தருவார் ஸ்ரீராமபக்தன் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டையை அடுத்து, ஆந்திர எல்லையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ளது அர்த்தகிரி ஆஞ்சநேயர் ஆலயம். சித்தூரில் இருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும், சுயம்பு விநாயகர் எழுந்தருளியுள்ள காணிப்பாக்கத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது அர்த்தகிரி!

அந்தப் பகுதியில் பனைவெல்லம் பிரசித்தம். அரகோண்டா எனும் பகுதியில்தான் பனை வெல்ல உற்பத்தி அதிகம். அரகோண்டா என்றால், மலையின் ஒரு பாகம் என்று பொருள். மலை என்றாலே நமக்கு சஞ்ஜீவி மலை நினைவுக்கு வரும். சஞ்ஜீவி மலை என்றதும் நமக்கு ஆஞ்சநேயப் பெருமான் தான் நினைவுக்கு வருவார்.

திரேதாயுகத்தின்போது ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் யுத்தம் நடந்தது அல்லவா.போர்த் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது, ராவணனின் மகன் இந்திரஜித், லட்சுமணன் மீது பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான் லட்சுமணன். அவனைக் காப்பாற்றும் வழி தெரியாமல் அனைவரும் தவித்தனர்.

அப்போது அங்கு இருந்த ஜாம்பவான், சஞ்ஜீவி மலை குறித்து ஆஞ்சநேயரிடம் தெரிவித்தார். அந்த மலையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் பற்றியும் விவரித்தார். ஆஞ்சநேயரிடம் மூலிகையைக் கொண்டு வருமாறு தெரிவித்தார்.

உடனே, சஞ்ஜீவி மலைக்கு விரைந்தார் ஆஞ்சநேயர். தான் சேகரிக்க வேண்டிய மூலிகையின் தன்மை மறந்து போனதால் மலையையே பெயர்த்தெடுத்து வந்தார் அனுமன் என்கிறது புராணம். அப்படி வந்தபோது, மலையின் சில துண்டுகள் அங்கங்கே சிதறிக் கீழே விழுந்தன. அப்படி விழுந்த சஞ்ஜீவி மலையின் ஒரு துண்டுதான், அரகோண்டா என்கிறது ஸ்தல புராணம்.

அழகிய மலை. அற்புதமான கோயில். உள்ளே கருணை ததும்பக் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர். மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை வணங்கினால், ஆனந்தம் நிச்சயம்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

கோயிலின் உள்ளே அழகுற அமைந்திருக்கிறது தடாகம். சஞ்ஜீவி மலைத் துண்டு விழுந்ததால், மலை விழுந்த பூமியானது பிளந்து தடாகம் உருவானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

இந்த தடாகத்தில் உள்ள நீர் புனிதமானது; ஆரோக்கியம் தரவல்லது. அதேபோல அர்த்தகிரி என்று சொல்லப்படுகிற தலத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அனுமன் ஜெயந்தித் திருநாளில், சிறப்பு அபிஷேகங்களுடன் வடைமாலைகளும் சார்த்தி வணங்குகின்றனர் பக்தர்கள்.

அர்த்தகிரி அனுமனை மனதார நினைத்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், நம் வாழ்க்கையையே அர்த்தமுள்ளதாக்கி அருளிச் செய்வார் அனுமன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in