கொம்பு முளைத்திருக்கிறதா?

கொம்பு முளைத்திருக்கிறதா?

”அவனுக்கென்ன கொம்பு முளைத்திருக்கிறதா?”, “அவனுடைய பொருள்ன்னு அதுல எழுதி வெச்சுருக்கா?” – இது போன்ற வார்த்தைகளை யாரும் தங்கள் வாழ்க்கையில் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

குழந்தைகள் சர்வ சாதாரணமாக கேட்பார்கள். மிகவும் களைப்பில் இருக்கும் இல்லத்தரசி ”என் உடம்பு மட்டும் இரும்பால் செய்யப்பட்டிருக்கிறதா?” அன்று அலுத்துக் கொள்வதுண்டு.

சரி… இப்ப கொம்பு முளைத்த கதையைப் பார்ப்போம்.

ஒரு கிராமத்துக்காரர் தன் தோட்டத்தில் நிறைய தென்னங்கன்றுகளை நட்டார். பல நாட்கள் பாடுபட்டதால், நல்ல பலன் கிடைத்தது. தென்னங்கன்றுகள் மரமாக வளர்ந்து நிறைய தேங்காய்கள் கிடைத்தன. அவர் குருவாயூரப்பன் பக்தர் என்பதால், தன் வாழ்வில் எந்த செயலைச் செய்தாலும் குருவாயூரப்பன் பெயரை சொல்லிவிட்டுத் தான் தொடங்குவார்.

இப்போது நிறைய தேங்காய்கள் கிடைத்ததால், முதல் தேங்காய் குருவாயூரப்பனுக்கு என்று சொல்லிவிட்டு, ஒவ்வொரு மரத்தில் இருந்து எடுத்த முதல் தேங்காய்களை ஒரு சாக்குப் பையில் கட்டினார்.

அனைத்தையும் எடுத்துக் கொண்டு குருவாயூர் கிளம்பினார். நடை பயணம் தான். ஒரு காட்டு வழியே செல்லும்போது, கொள்ளைக்காரன் ஒருவனிடம் சிக்கினார்.

அவன் இவரது சாக்குப் பையைப் பார்த்துவிட்டு, “ஒன்றுமே தேறாது போல இருக்கே. சரி கிடைத்த வரைத்த லாபம். இதுல என்ன இருக்கு? ஒரே முண்டும் முடிச்சுமாக இருக்கிறதே” என்று சாக்குப் பையை தன் பக்கம் இழுத்தான்.

கிராமத்துக்காரரும், “இவை குருவாயூரப்பன் தேங்காய். இவற்றை நீ கேட்டாலும் நான் தரமாட்டேன்” என்றார். உடனே அந்த கொள்ளைக் காரன், “என்ன குருவாயூரப்பன் தேங்காயா? எல்லா தேங்காயும் ஒரே மாதிரிதான் இருக்கும்? இதுக்கு மட்டும் என்ன தனியா கொம்பு முளைத்திருக்கிறதா?” என்றான்.

சாக்குப் பையைப் பிரித்துப் பார்த்தால், ஒவ்வொரு தேங்காய்க்கும் கொம்பு முளைத்திருந்தது…

இந்த சம்பவத்தால் அந்த கொள்ளைக் காரன் மனம் திருந்தி, மன்னிப்பு கேட்டு கிராமத்துக்காரர் செல்ல வழிவிட்டான்.

இன்றும் குருவாயூர் கோயிலின் முன் மண்டபத்தில், கொம்பு முளைத்த தேங்காய்கள் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

அவன் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதிருஷ்டக் காற்று வீசும்.

ஸ்ரீ குருவாயூரப்பா சரணம்.

Related Stories

No stories found.