குருவார சஷ்டியில் ஞானகுரு முருக வழிபாடு!

குருவார சஷ்டியில் ஞானகுரு முருக வழிபாடு!
MAHI

குரு வார நன்னாளில், சஷ்டி திதியில் ஞானகுருவாகத் திகழும் முருக வழிபாடு செய்வோம். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், கேட்டதெல்லாம் தந்தருளுவான் வள்ளி மணாளன்.

சஷ்டி திதி என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்கான அற்புதமான நாள். இந்தநாளில், சஷ்டி விரதம் மேற்கொண்டு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவார்கள் பக்தர்கள்.

முருகு என்றால் அழகு என்று அர்த்தம். அழகன் முருகனை விரதமிருந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், செவ்வாய் முதலான தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல, திருமண வரங்களையும் பிள்ளை வரத்தையும் தந்து அருளுவான் வெற்றி வடிவேலவன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஞானகுரு என்றே முருகக் கடவுளைப் போற்றுகிறது ஸ்கந்த புராணம். பிரணவ மந்திரத்தை எடுத்துரைத்தவன் என்பதால் குருவுக்கு நிகரானவன் எனும் பெயரும் பெருமையும் பெற்றான் கந்தகுமாரன். அதனால்தான் ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன்’ என்று போற்றப்படுகிறான்.

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் கந்தன் சுவாமிநாத சுவாமியாக, சுவாமிக்கெல்லாம் சுவாமியாகவே, குருவுக்கெல்லாம் குருவாகவே காட்சி தருகிறான் என்கிறார்கள் முருக பக்தர்கள். வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். பொதுவாகவே வியாழக்கிழமைகளில், குருவை வணங்குவது ரொம்பவே விசேஷம். குருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கலாம். அதேபோல், நவக்கிரகங்களில் குருவாகத் திகழும் குரு பகவானை, குரு பிரகஸ்பதியை வணங்கி ஆராதிக்கலாம். குரு பிரம்மா, குரு விஷ்ணு என்கிறோம். ஆகவே பிரம்மா வழிபாடும் விஷ்ணு வழிபாடும் வியாழக்கிழமையில் மிக மிக முக்கியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஞானகுரு எனப் போற்றப்படும் முருகப்பெருமானை வியாழக்கிழமையில் வணங்குவது வளமும் நலமும் தரும். கூடவே, சஷ்டி திதியும் இணைந்திருக்க, விரதம் மேற்கொண்டு, அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வணங்கி பிரார்த்தனை செய்துகொள்ளலாம். முருகப்பெருமானுக்கு உகந்த செந்நிற மலர்களைச் சார்த்தி மனதார வேண்டுவோம். மங்கல காரியங்களை உடனே நடத்தித் தருவான் மகேசன் மைந்தன். சிக்கல்களில் இருந்தும் குழப்பங்களில் இருந்தும் விடுவித்து ஞானமும் யோகமும் தந்தருளுவான் வெற்றிவேலன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in