புரட்டாசி ஏகாதசியில் பெருமாளுக்கு துளசி!

குரு விஷ்ணுவை குருநாளில் வணங்குவோம்!
புரட்டாசி ஏகாதசியில் பெருமாளுக்கு துளசி!

புரட்டாசி மாத ஏகாதசி திதியில் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துவதும் நாம் துளசி தீர்த்தம் பருகுவதும் விசேஷமானது. குரு விஷ்ணு என்று சொல்லுவதற்கேற்ப, குருவார வியாழக்கிழமையில் அவரை வணங்கி வழிபடுவோம்.

புரட்டாசி மாதம் என்பதே மிகவும் விசேஷமான, சிறப்புக்கு உரிய மாதம். புரட்டாசி மாதத்தில்தான் மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் வருகின்றன. புரட்டாசி மாத அமாவாசை என்பது ரொம்பவே விசேஷம். நம் முன்னோர்களை வணங்குவதற்கான நாள்.

அதேபோல், புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகுதான் நவராத்திரி கொலு வைபவத் திருவிழா தொடங்கி, விஜயதசமி நன்னாளுடன் நிறைவடைகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளை, ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடுகிறோம்.

இதேபோல் புரட்டாசி என்பதே மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். இந்த மாதத்தின் எல்லா நாட்களுமே திருமால் வழிபாடு செய்ய உகந்த நாள் என்றாலும் புதன்கிழமையும் சனிக்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு இன்னும் மகத்துவம் மிக்கதான நாட்களாகப் போற்றப்படுகிறது.

மாதந்தோறும் ஏகாதசி சிறப்பு பூஜைக்கும் தரிசனத்துக்கும் உரிய நாள் என்பது போல், புரட்டாசி ஏகாதசியும் மார்கழி ஏகாதசியும் ரொம்பவே சிறப்புக்கு உரிய நன்னாளாகச் சொல்வார்கள் வைஷ்ணவ ஆச்சார்யர்கள்.

’குரு பிரம்மா குருவிஷ்ணு’ என்று ஸ்லோகம் விவரிக்கிறது. குருவுக்கு நிகரானவர்தான் மகாவிஷ்ணு. குருவாரம் என்று வியாழக்கிழமையைச் சொல்லுகிறோம். இன்று அக்டோபர் 6-ம் தேதி வியாழக்கிழமையில், சர்வ ஏகாதசி நன்னாளில், மாலையில் பெருமாளை நினைத்துக்கொண்டு, நெய் தீபமேற்றி வழிபடுவதும், துளசி மாலையை பெருமாளுக்குச் சார்த்துவதும் விசேஷம்.

அருகில் உள்ள பெருமாள் க்ஷேத்திரத்துக்கு மாலையில் சென்று, பெருமாளுக்கு அர்ச்சனை செய்தும், துளசி மாலை சார்த்தியும் துளசி தீர்த்தம் பருகியும் வேண்டிக்கொண்டால், நம் வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களை செவ்வனே நடத்தியருளுவார் வேங்கடேசப் பெருமாள்.

அப்படியே ஏகாதசி நன்னாளில், மகாலட்சுமித் தாயாருக்கும் ஆண்டாளுக்கும் மலர்கள் சூட்டி திருப்பாவை பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். சந்திரன் முதலான கிரக தோஷங்கள் அனைத்தும் விலகப் பெறலாம். இதுவரை காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் அகலும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in