குரு வார பிரதோஷம்: சனி தோஷம் போக்கும் சிவ தரிசனம்!


குரு வார பிரதோஷம்: சனி தோஷம் போக்கும் சிவ தரிசனம்!

இன்று குரு வார பிரதோஷம். இந்த நாளில் அருகில் உள்ள சிவாலயத்தின் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்யுங்கள். சனி கிரக தோஷத்தைப் போக்கி அருளுவார்கள் சிவனாரும் பார்வதியும்!

வியாழக்கிழமையை குரு வாரம் என்பார்கள். நவக்கிரகங்களில், வியாழ பகவான் என்பவர் குரு பகவானாகத் திகழ்ந்து அருள்பாலிக்கிறார். இந்த குருவை பிரகஸ்பதி என்பார்கள். தேவர்களின் குரு பிரகஸ்பதி என்றும் அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யர் என்றும் தெரிவிக்கிறது புராணம். சிவபெருமானே, பிரகஸ்பதிக்கு, நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக இருந்து, அருள்பாலிக்கப் பணித்தார் என்கிறது புராணம்.

திருமணம் எனும் மங்கலகாரியத்தை, வியாழ நோக்கம் என்று சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். குருவருள் இருந்தால்தான் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடைபெறும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.

சிவபெருமானை மணந்து கொள்ளும் ஆவல் கொண்ட உமையவளுக்கு, அது தடைபட்டுக்கொண்டே இருந்தது. என்ன காரணம் என புரியாமல் தவித்த தேவி, குருவின் அருள் வேண்டும்; குருவின் பார்வை பட்டால்தான் கோடி நன்மைகள் நடக்கும். குரு கடாட்சம் இருந்தால்தான் திருமணம் முதலான மங்கல காரியங்கள் நடந்தேறும்’’ என்பதை உணர்ந்தாள். குருவருள் பெற்றார்.

அதன் பிறகு, குருவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள் பார்வதிதேவி. அந்தத் தவத்தின் பலனாக குருவருளைப் பெற்றாள் என்றும் அதன் பிறகு சொக்கேசனை மணந்தாள் என்றும் புராணங்கள் விவரிக்கின்றன. அதனால்தான், வியாழக்கிழமை என்பதை குருவாரம் என்று போற்றுகிறோம். குருவாகத் திகழும் குரு பிரகஸ்பதியையும் குருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் குரு பிரம்மாவையும் குரு விஷ்ணுவையும் குருவாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற மகான்களையும் இந்தநாளில், வணங்க வலியுறுத்துகிறார்கள் ஆன்றோர்கள்.

பிரதோஷங்களில், சோமவாரப் பிரதோஷம், சனிப்பிரதோஷம் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேபோல், குருவாரப் பிரதோஷம் ஞானமும் யோகமும் தருபவை. தோஷங்களால் உண்டான தடைகளை நீக்கித் தருபவை. குரு வார பிரதோஷ வேளையில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் நடைபெறுகிற 16 வகை அபிஷேக ஆராதனைகளை தரிசிப்போம்.

அத்துடன் குரு தட்சிணாமூர்த்தியையும் நவக்கிரத்தில் இருக்கிற குரு பிரகஸ்பதியையும் வணங்கி வழிபட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டால், சனி பகவானால் உண்டான தோஷங்களும் மற்ற கிரகங்களால் உண்டான தோஷங்களும் விலகப் பெறலாம். திருமணம் முதலான மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும்.

தை மாதத்தில் இருந்து தொடங்குகிறது உத்தராயன புண்ய காலம். உத்தராயன புண்ய காலத்தின், தை மாதத்தின் முதல் பிரதோஷம் இன்று (19-ம் தேதி, வியாழக்கிழமை). சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த இந்த நன்னாளில், சிவாலயத்துக்குச் சென்று, சிவத்திருமேனிக்கு வில்வம் சார்த்தி, நந்திதேவருக்கு வெள்ளெருக்கு மாலையும் அருகம்புல் மாலையும் சார்த்தி மனதார வேண்டிக்கொள்வோம். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார்கள், சிவனாரும் உமையவளும்! சனி பகவானால் உண்டான தோஷங்களைத் தீர்த்தருளுவார் ஈசன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in