அருளும் பொருளும் தரும் குரு பகவான் மந்திரங்கள்!

அருளும் பொருளும் தரும் குரு பகவான் மந்திரங்கள்!

திருவருளைப் பெற வேண்டுமானால், குருவருள் நிச்சயம் வேண்டும் என்பார்கள். அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்வது குருவருள்தான். குருவே சகலம்; குருவே பரிபூரணமானவர் என புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

ஆலயங்களில் உள்ள தெய்வ சந்நிதிகளுக்குச் சென்று வணங்கும்போது, பக்கவாட்டாக நின்றபடி அனைத்து தெய்வங்களையும் வணங்குவோம். ஆனால் குரு பகவானை மட்டும் அவருக்கு நேராக நின்று தரிசிப்போம்; பிரார்த்திப்போம். ஏனெனில், குரு பார்க்க கோடி நன்மை என்கிறது சாஸ்திரம்.

நவக்கிரகங்களில் சாந்தமும் கருணையும் கொண்ட கிரகமாகத் திகழ்பவர் குரு பகவான். தேவ குருவான பிரகஸ்பதி, சிவனாரிடமிருந்து பெற்ற வரத்தால், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகவும் முக்கிய கிரகமாகவும் திகழ்கிறார். வாழ்க்கையில் திருமணம் முதலான முக்கிய தருணங்களுக்கு குரு பகவானும் அவரின் பார்வையும் அருளுமே காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

திருமணம் தள்ளிப்போகிறதே என கலங்குபவர்கள், இன்னும் குழந்தை பாக்கியம் அமையவில்லையே என ஏங்குபவர்கள், படித்த படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கலையே என்று கண்ணீர் விடுபவர்கள், இத்தனை வருடம் சம்பாதித்தும் சொந்தமாக ஒரு வீடு வாசல் அமையலையே என வருந்துபவர்கள்... வியாழக்கிழமைகளில், நவக்கிரகத்தை வலம் வந்து, குரு பகவானை மனதாரப் பிரார்த்தித்து குரு பகவான் மூலமந்திரத்தைப் பாராயணம் செய்வது மகத்தான பலன்களைத் தரும்.

ஓம் ரிஷப த்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குரு ப்ரசோதயாத்

எனும் குரு வியாழ பகவானின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி பாராயணம் செய்து வாருங்கள். வீட்டில் தடைபட்ட மங்கல காரியங்கள் நடந்தேறும். கல்யாண மாலை தோள் சேரும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். குரு பலம் பெருகி, வாழ்வில் பட்ட கஷ்டமெல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், குருவுக்கும் குருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் தரிசித்து வாருங்கள். சிவாலயங்களில், கோஷ்டத்தில் தென்முகம் பார்த்தபடி, கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி காட்சி தந்தருளுவார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

அப்போது,

ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே

த்யா ஹஸ்தாய தீமஹி

தந்நோ தீஷப் ப்ரசோதயாத்

எனும் தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தைப் பாராயணம் செய்து வாருங்கள். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். அருளும்பொருளும் கிடைத்து ஆனந்தமாக வாழலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in