நம் பிரச்சினைகளைத் தீர்ப்பாள் பிரத்தியங்கிரா தேவி!

நம் பிரச்சினைகளைத் தீர்ப்பாள் பிரத்தியங்கிரா தேவி!

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமாவாசையிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபட்டு வந்தால், நம் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்தருளுவாள் பிரத்தியங்கிரா தேவி!

மனித வாழ்வில் சக்தி வழிபாடு என்பது மகத்துவமும் மகோன்னதமும் நிறைந்தது. தேவியை வழிபட்டு வந்தால், சர்வ பலத்துடன் மனோபலமும் கிடைக்கப் பெறலாம் என்றும் இல்லத்தின் அனைத்து வளமான நன்மைகளும் பெறலாம் என்றும் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சக்தி வழிபாட்டில், மிக முக்கியமானது துர்கை வழிபாடு. அதேபோல், பிரத்தியங்கிரா தேவியை வழிபாடு செய்வதும் விசேஷமானது என்கிறார் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலின் சங்கர குருக்கள்.

பிரத்தியங்கிரா தேவியை அவளை நம்பி, அவளே ஆதாரம் எனப் பற்றிக்கொண்டு வேண்டினால், எதிரிகள் பலம் இழப்பார்கள். மனோபலம் பெருக்கி அருளுவாள் பிரத்தியங்கிரா தேவி.

பிரத்தியங்கிரா தேவியின் மூலமந்திரம் :

ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா

ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே

ப்ரத்யங்கரே க்ஷம்

ஹ்ரீம் ஹும் பட்.

எனும் மந்திரத்தை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்லி வருவது அவளின் அருளை நமக்கு அள்ளித்தந்தருளும். அதேபோல் அமாவாசை தினங்களிலும் பிரத்தியங்கிரா தேவி வழிபாட்டைச் செய்வது, வளமும் நலமும் சேர்க்கும்.

கருணை கொண்ட தேவியின் மூல மந்திரத்தை தினமும் பயபக்தியுடன் பாராயணம் செய்து வந்தாலும் நல்லன எல்லாம் தந்தருளுவாள் தேவி. தொடர்ந்து வழிபட்டு வந்தால், துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் நமக்கு விடுதலையைத் தந்தருள்வாள். நம் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளை ஒழித்துக்காப்பாள். நம் மனதில் இருக்கிற தேவையில்லாத பயங்களைப் போக்கி, மனோபலத்தைத் தந்தருளுவாள் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை ராகுகாலம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.

ஓம் அபராஜிதாய வித்மஹே

பிரத்யங்கிராய தீமஹி

தந்நோ உக்ர ப்ரசோதயாத்

என்பது ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் காயத்ரி மந்திரம். இந்த காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப்பாள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளுவாள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in