ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது ஏன் தெரியுமா?

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்

அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி பிரார்த்தனை செய்துகொண்டால், எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் வெற்றி அடைந்தே தீரும் என்கிறார்கள் அனுமன் பக்தர்கள்!

எந்த வழிபாடாக இருந்தாலும், சடங்கு சாங்கியங்களாக இருந்தாலும் அங்கே வெற்றிலைக்கு மிக மிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஸ்ரீராமபிரானின் பக்தர்களில் முதன்மையான பக்தராகவும் , முழுமையான பக்தராகவும் திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான். என்றாலும் தன்னை மாபெரும் சக்தி கொண்டவராகவோ, தெய்வ வடிவம் என்றோ ஒருபோதும் நினைத்துக் கொண்டதே இல்லை அனுமன். மாறாக, ‘’நான் ராமபக்தன். ராமபிரானின் தூதன்’ என்றே சொல்லிப் பெருமிதம் கொண்டார்.

அதனால்தான், பெரும்பாலான ஆலயங்களில், ஆஞ்சநேயரின் திருமேனியானது, கைகூப்பிய நிலையிலேயே காட்சி தருவதைத் தரிசிக்கலாம். இப்படி, தெய்வமானது, கைக்கூப்பிய நிலையில் காட்சி தருவது என்பது அரிதான ஒன்று என்கின்றனர் ஆச்சார்யர்கள்.

அனுமன் என்றாலே அவரின் மகா பராக்கிரமங்கள் நினைவுக்கு வரும். அதேபோல், அனுமன் என்றாலே வெற்றியே நினைவுக்கு வரும். அதனால்தான் ஜெய் அனுமன் என்று கொண்டாடப்படுகிறார். ஜெயிக்க வைக்கும் அனுமன் என்று போற்றப்படுகிறார். அனுமனுக்கு வெண்ணெய்க்காப்பு சார்த்தி வேண்டிக்கொண்டாலோ வெற்றிலை மாலை அணிவித்து பிரார்த்தனை செய்துகொண்டாலோ நாம் எடுத்த காரியங்கள் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் என்கிறார் கிருஷ்ண பட்டாச்சார்யர்.

அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதாதேவியைக் கண்டார். ஸ்ரீராமர் நலமாக உள்ள விவரங்களையெல்லாம் சீதாபிராட்டியிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு சீதாதேவி அகம் மகிழ்ந்தாள். இன்னும் தைரியம் கூடியது அவளுக்கு!

ராமபிரானின் பக்தனான அனுமன், சீதையின் பக்தனும் அல்லவா. ராமபிரானையே துதித்து வணங்கிக் கொண்டிருக்கும் அனுமன், சீதாதேவியை வணங்கினார். பணிவுடன் வணங்கிய நிலையில் இருக்கும் அனுமருக்கு, அட்சதையிட்டு ஆசி வழங்க எண்ணினாள் சீதாதேவி. ஆனால், அப்போது சீதைக்கு அருகில் அட்சதையாக்குவதற்கான மஞ்சளோ அரிசியோ இல்லை!

இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவினார் சீதாதேவி. ஆசீர்வதித்து அருளினாள். சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியையும் ஆசீர்வாதத்தையும் ஆஞ்சநேயர் பெருமிதம் பொங்க ஏற்றுக்கொண்டார்! இதையொட்டித்தான், அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிந்து வணங்குகிற வழக்கம் வந்தது.

நாம் செய்கிற எந்த பூஜையாக இருந்தாலும் சரி, எந்த தெய்வ வழிபாடாக இருந்தாலும் வெற்றிலை பாக்கு, பூ பழங்கள் என்று வைப்பது வழக்கம்தான். என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை கூடுதல் சிறப்பு மிக்கதாகிறது. இன்னும் பலன்களைத் தரக்கூடியதாகிறது. வெற்றிலையை மாலையாக்கி சார்த்தி வேண்டிக்கொள்வது அனுமனுக்கு மட்டுமே உரித்தான ஒன்று!

அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதேபோல், வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வோம். நம் அல்லல்களையெல்லாம் போக்கி அருளுவார் ஜெய் அனுமன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in