2023ன் முதல் பிரதோஷம்... சிலிர்க்க வைக்கும் சிவ தரிசனம்!

பிரதோஷத்தில் திருவெம்பாவை பாடினால் மகா புண்ணியம்!
2023ன் முதல் பிரதோஷம்... சிலிர்க்க வைக்கும் சிவ தரிசனம்!

புத்தாண்டான 2023 தொடங்கி, மூன்று நாட்கள் நிறைவடைந்த வேளையில், 4-ம் நாளான இன்று புதன்கிழமையில் பிரதோஷம் வருகிறது. இந்த வருடத்தின் முதல் பிரதோஷ நாளில், மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம்.

மார்கழி மாதத்தில், திதிகளில் ஏகாதசி திதி சிறப்புக்கு உரியது. வைணவர்களும் பெருமாளின் பக்தர்களும் கொண்டாடுகிற நன்னாள் இது.

2023ம் வருடம், தொடங்கிய மறுநாளே... 2ம் தேதியே... வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடந்தேறியது. வைஷ்ணவம் மட்டுமின்றி, பெருமாளுக்கு மட்டுமின்றி, மார்கழி மாதம் முழுவதுமே வைபவங்களுக்கும் சிறப்பு பூஜைகளுக்கும் குறைவே இல்லை. அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் அமர்க்களப்படும்.

மார்கழி மாதத்தில் குலதெய்வ வழிபாடும் செய்வார்கள் பக்தர்கள். குலசாமிக்கு படையலிடும் வைபவமும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் மார்கழி மாதத்தில் நடந்தேறும்.

திதியில் ஏகாதசி திதி போல் நட்சத்திரத்தில் திருவாதிரை நட்சத்திரமும் மார்கழி மாதத்தில் முக்கியமானது. மார்கழி திருவாதிரை சிவபெருமானுக்கு உரிய அற்புதமான திருநாள். ஆடல்வல்லான் எனப் போற்றப்படும் நடராஜப் பெருமானுக்கு அற்புதமான அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடந்தேறும் நன்னாள்.

வைகுண்ட ஏகாதசிக்கும் திருவாதிரைப் பண்டிகைக்கும் நடுவே, 2023ம் ஆண்டின் முதல் பிரதோஷம் அமைந்திருக்கிறது. இந்த நன் னாளில், முதல் பிரதோஷ நாளில், தென்னாடுடைய சிவனாரை ஆலயம் சென்று தரிசிப்போம். சிவலிங்கத் திருமேனிக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்கள் வழங்கி, ஆராதனையை கண்ணாரத் தரிசிப்போம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றொரு சொலவடை உண்டு. 2023ம் ஆண்டின் முதல் புதன்கிழமையில், முதல் பிரதோஷ நன்னாளில், எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவபெருமானைத் தொழுவோம். மெய்சிலிர்க்க தரிசித்து, நம் பாவங்களைப் போக்கி அருளும் ஈசனடியை வணங்குவோம்! மார்கழியில் திருவெம்பாவை பாராயணம் செய்து, பிரதோஷ வழிபாடு செய்வது இன்னும் புண்ணியத்தையும் நற்பலன்களையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in