கார்த்திகை முதல்நாள்: ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் காவிரி நீராடல்!

- ‘முடவனுக்கு முழுக்கு’ : புராணம் தரும் விளக்கம்
கார்த்திகை முதல்நாள்: ஏழு ஜென்ம பாவம் தீர்க்கும் காவிரி நீராடல்!

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள். துலா மாதம் என்று சொல்லக்கூடிய காவிரியில் நீராடுவது நம் பாவங்களையெல்லாம் போக்கித் தரும் என்றும் புண்ணியங்களைப் பெருக்கித் தரும் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதத்தில் நீராட முடியாமல் தவறவிட்டவர்கள், கார்த்திகை மாத முதல் தேதியில் அதாவது கார்த்திகை மாதப் பிறப்பிலும் நீராடலாம். அப்படி நீராடினால், ஐப்பசி என்கிற துலா மாதம் என்கிற மாதத்தில் என்ன புண்ணியம் கிடைக்குமோ அதனைப் பெறலாம் என்கிறது புராணம்.

ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் பிறக்கும் போது நீராடுவதை, கடை முழுக்கு என்றும் கடைமுகம் என்றும் முடவனுக்கு முழுக்கு என்றும் சொல்கிறது புராணம்.

இதற்கு ஒரு கதையும் உண்டு. கால் ஊனமுற்ற ஒருவர், ஐப்பசி துலா ஸ்நானம் செய்வதற்காக அவருடைய ஊரில் இருந்து நடக்கமுடியாமல், தவழ்ந்தே வந்துகொண்டிருந்தார்.

அவரால் வேகமாக வரமுடியவில்லை. அப்படித் தவழ்ந்தே வந்ததால், உடலில் அசதி ஏற்பட்டது. இதனால் அவர் பல இடங்களில் தங்கித்தங்கி வந்துகொண்டிருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து வந்தவர், துலா கட்டம் என்று சொல்லப்படும் மாயூரக் காவிரியை வந்தடையும் போது ஐப்பசி மாதம் முடிந்து, கார்த்திகை மாதமே பிறந்திருந்தது. “என் ஊனத்தின் காரணமாக, என்னால், ஐப்பசியில் துலா ஸ்நானம் செய்யமுடியவில்லையே...” என வருந்தினார். “கடவுளே... எனக்கு ஏன் இந்த கதி?” என்று அரற்றினார். அப்போது மயூரநாதர் எனும் திருநாமத்துடன் திகழும் சிவபெருமான், அவருக்கு திருக்காட்சி தந்து அருளினார்.

“கார்த்திகை பிறந்துவிட்டதே என எண்ணவேண்டாம். ஐப்பசி முடிந்துவிட்டதே என பதற வேண்டாம். கார்த்திகை முதல் தேதியில் நீராடினாலும் ஐப்பசி துலா மாதத்தில் நீராடிய புண்ணியமும் பலனும் உனக்குக் கிடைக்கும். உனக்கு மட்டுமின்றி, எவர் ஐப்பசியில் நீராட முடியாமல், கார்த்திகைப் பிறப்பில் வந்து நீராடினாலும் அவர்களுக்கு அந்த பலன்கள் கிடைக்கும்” என அருளினார் சிவன்.

அன்று முதல், ஐப்பசி துலா மாதத்தில், காவிரியில் ஸ்நானம் செய்ய இயலாதவர்கள், கடைமுழுக்கு என்றும் கடைமுகம் என்றும் முடவனுக்கு முழுக்கு என்று சொல்லப்படும் கார்த்திகை மாத முதல் நாளில், காவிரியில் நீராடினாலும் பாவங்கள் தொலையும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்!

அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும் காவிரியில் இணைந்திருக்கிறது என விவரிக்கிறது புராணம்.

எனவே, காவிரியில் நீராடும் போது,

மருத் வ்ருதே! மஹாதேவி மஹாபாகே மநோஹரே

ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய

- என்று சொல்லி நீராடுவது மகா புண்ணியம்!

அதாவது, பரமேஸ்வரனின் சிரசில் இருர்ந்து பூமிக்கு வந்த மகா பாக்கியம் உடையவளே! பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத உருவம் கொண்டவளே! ஹே காவேரி... உன்னை நமஸ்கரிக்கிறேன். என்னுடைய பாபங்களைப் போக்கியருள்வாய் என்று விளக்குகிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

ஐப்பசி மாதம் என்றில்லாமல், கடை முழுக்கு என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் நாள் என்றில்லாமல், காவிரியில் எப்போது நீராடினாலும் இந்த மந்திரத்தைச் சொல்லி நீராடுவது நம் ஏழு ஜென்ம பாவங்களையும் போக்கியருளும். நம் புண்ணியங்களைப் பெருக்கித் தரும் என்கிறது தர்ம சாஸ்திரம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in