அரசியல்வாதிகள் புடைசூழ நடைபெற்றது பட்டினப் பிரவேசம்!

அரசியல்வாதிகள் புடைசூழ நடைபெற்றது பட்டினப் பிரவேசம்!
சிவிகை பல்லக்கில் ஆதீனகர்த்தர்

இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாகவும், அதிக அளவிலான மக்கள் கூட்டத்தோடும், அரசியல் வாதிகளின் ஆரவாரத்தோடும் நடைபெற்று முடிந்தது தருமபுரம் ஆதீனகர்த்தரின் பட்டினப் பிரவேசம் நிகழ்வு.

மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுரம் ஆதீனத்தில் குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா மற்றும் ஞானபுரீசுவரர் கோயில் பெருவிழா ஆண்டுதோறும் 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் 10-ம் நாளில் குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்தியான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழாவும், 11-ம் திருநாள் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவும் நடைபெறும்.

அன்றைய தினம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறும். அந்த பட்டினப்vபிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிசென்று ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளை சுற்றி வருவார்கள். இந்த ஆண்டு குருபூஜை விழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனையடுத்து தமிழக அரசு இந்நிகழ்வுக்கு தடை விதித்தது. அதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளும் மதுரை ஆதீனம் உள்ளிட்ட மடாதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தார். இதனை அடுத்து தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெகு விமரிசையாக பட்டினப் பிரவேசம் நடந்தது. நேற்று காலை குருஞானசம்பந்தர் குருபூஜை திருநாளையொட்டி திருமடத்தில் சொக்கநாதர்பூஜை, குருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்து தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் வழிபாடு செய்தார்.

அதனைத்தொடர்ந்து ஞானபுரீசுவரர், தருமபுரீசுவரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதனையடுத்து மாலை மேலகுருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். அதன்பின்னர் ஆபரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள், சிவனடியார்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.

கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், கிராமிய இசை நிகழ்ச்சிகளும் நடந்தேறின. வழக்கமாக பல்லக்கு தூக்குபவர்கள் பல்லக்கைத் தூக்கி கொண்டு ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் வலம் வந்தனர். ஊர் பொதுமக்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு ஆதீனகர்த்தர் ஆசி வழங்கினார். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அவரிடம் ஆசி பெறுவதற்காக அரசியல்வாதிகளும், ஆயிரக்கணக்கான மக்களும் வரிசையில் நின்று இன்று அதிகாலை வரையிலும் காத்திருந்து ஆசி பெற்றனர்.

இதில், மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனகர்த்தர்கள் மற்றும் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் முன்பே அறிவித்தபடி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவினரை ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். வழக்கமாக 500 முதல் 1000 பேர் வரை கலந்து கொள்ளும் இந்த விழாவில் நேற்றைய தினம் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆதினகர்த்தர், " பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி என்பது எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் ஆன்மிக நிகழ்வாக மட்டுமே நடைபெறுகிறது. நாங்கள் அரசியல் பேசுவது கிடையாது. அரசியல்வாதிகள் ஆன்மிகத்தில் உள்ளார்கள். தற்போது அவர்கள் ஆன்மிகவாதிகளாக மட்டுமே வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் யாருக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை.

தருமையாதீனம் சுற்றியுள்ள திருவீதிகளில் நான்கு வீதிகளிலும் அரசியல் கட்சி கொடியோ, போஸ்டர்களுக்கோ நாங்கள் இடமளிக்கவில்லை. இந்த நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிக விழா. இந்த விழா தொடர்ந்து நடைபெற வேண்டும். பட்டினப்பிரவேச விழாவில் யாரையும் வற்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் , அழைக்கவில்லை.

தொன்றுதொட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் காங்கிரஸ் ஆட்சி காலம், திமுக, அதிமுக, ஆட்சிக் காலத்திலும் இந்த விழா நடந்து வந்துள்ளது. இது தொடர்ந்து ஆண்டுதோறும் சிறப்பாக நடத்த வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. அதனை தொடர்ந்து நடத்த வேண்டும்" என்று கூறினார்

இந்த நிகழ்வுக்காக 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in