இன்று சனிப்பிரதோஷம்: கிழமைவாரியாக பிரதோஷ பலன்கள்...

பிரதோஷ நாயகன் ‘நந்தீஸ்வரர்’
பிரதோஷ நாயகன் ‘நந்தீஸ்வரர்’

சிவ வழிபாடுகளில் மிக மிக உன்னதமானது என்று பிரதோஷ வழிபாட்டைச் சொல்லுவார்கள் சிவபக்தர்கள். சிவபுராணம் முதலான ஞானநூல்களும் பிரதோஷ மகிமையை விரிவாக எடுத்துரைக்கின்றன. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன. சனிக்கிழமை வரும் பிரதோஷத்துக்கு மகிமைகள் அதிகம் என்று சிவாகம நூல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷம் வருகின்றன. திரயோதசி திதி மாலையில் எப்போது இருக்கிறதோ, அதுவே பிரதோஷ பூஜை செய்ய உகந்த நாளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம்.

பொதுவாகவே சிவ வழிபாடு மேற்கொள்பவர்கள், ஒவ்வொரு பிரதோஷத்தையும் பிரதோஷ அபிஷேக ஆராதனைகளையும் தவறவிடமாட்டார்கள். அப்போது, மாலை வேளையில், சிவன் கோயிலுக்குச் செல்வதும், சிவ தரிசனம் செய்வதும் நந்தியம்பெருமானை வணங்குவதும் புண்ணியம் தரும்.

தெரிந்தவர்கள் வீட்டுக்கோ, உறவுக்காரர்களின் வீட்டுக்கோ நாம் வெறுங்கையை வீசிக்கொண்டு செல்வதில்லை. பழங்களும் பூக்களுமாக வாங்கிக் கொண்டு செல்கிறோம். அதேபோல், இறைவனை ஆலயத்துக்குச் சென்று தரிசிக்கும் போது, நாம் பூக்களுடன் சென்றுதான் வணங்கவேண்டும். இறைவனுக்கு உரிய பூக்களை சமர்ப்பித்துதான் பிரார்த்தனை செய்யவேண்டும்.

சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தவேண்டும். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சார்த்தவேண்டும். நந்திதேவருக்கு அருகம்புல் சமர்ப்பிக்கவேண்டும். முக்கியமாக, பிரதோஷத்தின் போது இவற்றை சுவாமிக்கு சார்த்துவதற்கு சமர்ப்பிக்கவேண்டும். அதேபோல, பிரதோஷத்தின் போது சுவாமிக்கும் நந்திதேவருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கவேண்டும்.

வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, சனிக்கிழமை வரையிலான கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷத்தையும் பிரதோஷ தரிசனத்தையும் கொண்டு பலன்களைச் சொல்லியிருக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம்:

ஜாதகத்தில், சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு மறக்காமல் சென்று சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவானின் அருளும் சிவனாரின் பேரருளும் நமக்குக் கிடைக்கும். சூரிய திசையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில், பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். தம்பதியிடையேயான ஒற்றுமை மேலோங்கும்.

திங்கட்கிழமையில் பிரதோஷம்:

திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சோமநாதன், சோமநாதேஸ்வரர், சந்திரசேகரர் என்று திங்களை முடியில் அணிந்த சிவனாருக்கு பல திருநாமங்கள் உள்ளன. பிரதோஷத்தில் சோம வார பிரதோஷம் என்பது மிக மிகச் சிறப்புகள் கொண்டவை. ஜாதகத்தில் சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், திங்கட்கிழமையில் வருகிற பிரதோஷத்தின்போது, மறக்காமல் சிவாலயத்துக்குச் செல்வதும் சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருட்களும் வில்வமும் வழங்கி வேண்டிக்கொள்வதும் புத்தியைத் தெளிவாக்கும். மனதில் இருந்த குழப்பமெல்லாம் நீங்கும். காரியங்களில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். மன நிம்மதியும் மன வலிமையும் பெருகும்.

செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம்:

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் திசை நடக்கிறது என்றால், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் என்றால், செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு அவர்கள் வெகு நிச்சயமாக சென்று சிவதரிசனம் மேற்கொள்ளவேண்டும். இதை மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்கிறது சிவ புராணம்! செவ்வாய்க்கிழமையின் போது, பிரதோஷ வேளையில், சிவ வழிபாடு செய்வதால், மாலையில் சூரிய அஸ்தமனம் முடிந்து சந்திரன் எட்டிப்பார்க்கிற வேளையில் ஆலயத்தில் இருப்பதால், நல்லதிர்வுகள் நம்மை வந்தடையும். செவ்வாயால் வரும் கெடுபலன்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு முதலான சகல தோஷங்களும் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கச் செய்து அருளுவார் தென்னாடுடைய சிவனார்!

புதன்கிழமையில் பிரதோஷம்:

ஜாதகத்தில், புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் புதன்கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அவசியம் சிவனாரே கதி என்று அவரைச் சரணடைய வேண்டும். இதனால், புத பகவானால் வரும் தீய பலன்களில் இருந்து விடுபடலாம். புத்தியை தெளிவாக்குவார் ஈசன். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். குழந்தைகள் படிப்பில் கெட்டி என்று பேரெடுப்பார்கள். புதன் கிழமை நாளில் வரும் பிரதோஷத்தின் போது, நாம் செல்வதுடன், நம் குழந்தைகளை தவறாமல் ஆலயத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். இதுவரை கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

வியாழக்கிழமையில் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை என்கிறோம். ஜாதகத்தில் குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழக்கிழமை நாளில் வரும் பிரதோஷத்தின் போது அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கவேண்டும். அந்த ஸ்தலம், பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம். சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்குவதுடன், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானையும் வணங்கி பிரார்த்தித்துக் கொண்டால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமைகள் குறையும். குரு பலம் ஏற்படும். தடைபட்ட திருமணம் கைகூடும். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்!

வெள்ளிக்கிழமையில் பிரதோஷம்:

ஜாதகத்தில் சுக்கிர திசை நடப்பவர்கள், சுக்கிர பகவானை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷ நாளில், சிவாலயம் செல்வதும் கோபுரத்தை வணங்குவதும் பலிபீடத்துக்கு முன்னே அமர்ந்து பிரார்த்தனைகள் மேற்கொள்வதும் எண்ணிலடங்காத பலன்களைத் தரும். இதனால், உறவுகளுக்குள் இருந்த பிணக்குகள் சரியாகும். வம்சம் தழைக்கும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறும். சுக்கிர யோக பலத்துடன் செல்வக் குறைபாடு இல்லாமல் நாமும் வாழலாம். நம் தலைமுறையும் வாழும்!

சனிக்கிழமையில் பிரதோஷம்:

சனிக்கிழமை அன்று பிரதோஷத்தை வெறுமனே சனிக்கிழமை பிரதோஷம் என்று சொல்லமாட்டார்கள் ஆச்சார்யர்கள். மற்ற கிழமைகளில் வந்தால் அவை பிரதோஷம். சனிக்கிழமை அன்று வந்தால், அது மகா பிரதோஷம்! சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.

ஜாதகத்தில் சனி திசை நடந்தாலும் சரி, வேறு கிரகங்களின் திசை இருந்தாலும் சரி... எந்த திசையோ லக்னமோ இருந்தாலும் அனைவரும் சனி பிரதோஷத்தின் போது, தென்னாடுடைய சிவலிங்கத் திருமேனியைக் கண்ணாரத் தரிசிக்கவேண்டும். சகல பாவங்களும் போக்கி அருளுவார் ஈசன். அதனால்தான் சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.

’’ஏழரைச் சனி, அஸ்டமச் சனி நடப்பவர்கள் சனியினால் ஏற்படக்கூடிய துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்காக, சனி பிரதோஷ தரிசனத்தை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். ஒரேயொரு சனிப் பிரதோஷத்தில் சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், 24 சனிப்பிரதோஷ தரிசனம் செய்த புண்ணியங்கள் கிடைக்கப் பெறலாம். கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் அனைத்தும் குறையும். பஞ்சமாபாதகம் என்று சொல்லக்கூடிய பாவங்களுக்கு விமோசனத்தைத் தந்து நம்மையும் நம் வம்சத்தையும் காத்தருளுவார் சிவனார்’’ என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

இன்று 4.3.2023 சனிப் பிரதோஷம். சனி மகா பிரதோஷம். மாலையில் சிவாலய தரிசனத்தை மறந்துவிடாதீர்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in