கார்த்திகை மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா?

- கார்த்திகையின் ஒவ்வொரு நாளும் மகத்துவம்தான்!
கார்த்திகை மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா?

ஐப்பசி முடிந்து இன்று கார்த்திகை மாதம் பிறந்திருக்கிறது. புரட்டாசி, ஐப்பசி மாதங்களைப் போலவே, கார்த்திகை மாதத்துக்கும் தனித்துவமான மகத்துவங்கள் ஏராளம் உள்ளன.

பொதுவாகவே கார்த்திகை மாதத்தை கல்யாண மாதம் என்றே போற்றுகின்றன ஞானநூல்கள். பன்னிரெண்டு மாதங்களில், இந்த மாதத்தையே திருமண மாதம் என்கிறார்கள். ஆடி, புரட்டாசி, மார்கழி தவிர மற்ற மாதங்களிலும் திருமண விழாக்களை நடத்துகிறோம் என்றாலும் கார்த்திகையை திருமண மாதம் என்று வர்ணிக்கின்றன ஞானநூல்கள். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்த மாதம் திருமணம் முதலான சுபகாரியங்களைச் செய்வதற்கு உகந்த மாதம் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

சிவபெருமானின், அடியும் முடியும் தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் எவ்வளவு பிரயத்தனப்பட்டார்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறோம். பிரம்மதேவனுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் ஜோதி சொரூபனாக, ஜோதிப் பிழம்பென சிவபெருமான் திருக்காட்சி தந்தது கார்த்திகை மாதத்தில்தான்.

மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வரும். கார்த்திகை நட்சத்திர நன்னாளில், முருகப்பெருமானை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். கார்த்திகை மாதத்தில் வருகிற கார்த்திகை நட்சத்திரம் ரொம்பவே விசேஷமானது.

Ramji V

பெரும்பாலான முருக பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் மேற்கொண்டு, பிறகு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதமிருப்பார்கள். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் விசேஷம் என்பது போல், கார்த்திகை மாதத்தின் திதிகளில் பஞ்சமி திதி கூடுதல் விசேஷம். பஞ்சமி திதிகளில், நாக தோஷ நிவர்த்தி மேற்கொள்ள மிகவும் உகந்த நாள் இது.

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஆலயங்களில் விமரிசையாக நடைபெறும். நினைத்தாலே முக்திதரும் திருத்தலமான திருவண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா பிரசித்தம். அதேபோல், இந்தத் திருநாளில், நம் வீடுகளில் இல்லத்தில் ஏராளமான அகல்விளக்குகளை ஏற்றி, இறைவனை வழிபடுவோம்.

முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், பாலமுருகக் கடவுளை வளர்த்த கார்த்திகைப் பெண்களைக் கொண்டாடுகிற விதமாகவும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும்.

திருக்கார்த்திகை தீபத்திருநாளில் எல்லா திசைகளை நோக்கியும் நம் வீட்டில் விளக்கேற்றிவைத்திருப்போம். கிழக்கு நோக்கி தீபமேற்றி வழிபட்டால், நம் கஷ்டங்கள் அனைத்தும் விலகப் பெறலாம். மேற்கு திசை நோக்கி தீபமேற்றி வழிபட்டால் நம் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திர நன்னாளில், முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதுடன், நம்மால் முடிந்த உணவுப் பொட்டலங்களை அன்றைய நாளில் வழங்கினால் நம் நோய்களையெல்லாம் தீர்த்து நமக்கு அருள்பாலிப்பார் முருகப்பெருமான்.

மகத்துவம் மிக்க கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை ரொம்பவே விசேஷம். இந்த நாளில், காலையும் மாலையும் வீட்டின் பூஜையறையிலும் நம் வீட்டு வாசலிலும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

ஒவ்வொரு அமாவாசையும் முன்னோருக்கானது. பெளர்ணமி என்பது பூஜைகளிலும் தியானங்களிலும் ஈடுபடுவதற்கானது. இந்த நாளில், சிவபெருமானையும் பெருமாளையும் வழிபட்டு வந்தால், முற்பிறவியில் செய்த பாவங்கள் விலகும் என்றும் ஐஸ்வர்ய கடாட்சம் கிடைக்கப் பெறலாம் என்றும் ஆச்சார்யர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்வது ரொம்பவே சுபிட்சத்தைக் கொடுக்கும். கார்த்திகை மாதத்தின் வளர்பிறை விசேஷம். வளர்பிறையில் வரக்கூடிய துவாதசி திதி, மகத்துவம் வாய்ந்தது. இந்த திதியின் போது துளசி மாடத்தை வலம் வந்து பிரார்த்திப்பதும் துளசியைக் கொண்டு பெருமாளையும் மகாலட்சுமியையும் அர்ச்சித்து வணங்குவதும் விசேஷமானது. பெரும்பாலான பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு துளசி சார்த்தி பிரார்த்தித்து, துளசி தீர்த்தம் பருகி வேண்டிக்கொள்வார்கள்.

கார்த்திகை மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகளும் பூஜைகளும் மும்மடங்கு பலன்களைத் தரக்கூடியவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த மாதத்தில் நாம் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கு உரிய, நட்சத்திரத்துக்கு உரிய, திதிக்கு உரிய தெய்வங்களை வணங்கி வழிபட்டு பிரார்த்தனைகள் செய்து வந்தால், எந்த ஜென்மத்திலோ நமக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்!

அற்புதம் மிக்க கார்த்திகை மாதம் இன்று (நவம்பர் 17-ம் தேதி) வியாழக்கிழமை தொடங்குகிறது. கார்த்திகை முதல் நாளில் இருந்தே தொடர்ந்து வழிபாடுகளையும் பூஜைகளையும் மேற்கொள்வோம். மேன்மேலுமான பலன்களைப் பெறுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in