பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன் ஏகாதசி!

பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதன் ஏகாதசி!

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமை பொன்னான நன்னாள். பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த அற்புத நாள். இந்த நாளில் ஏகாதசியும் இணைந்திருப்பது மிகுந்த விசேஷம். இந்த நாளில் ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் தவறாமல் விரதமிருங்கள். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று திருமாலை திவ்வியமாகத் தரிசனம் செய்யுங்கள்.

பெருமாளை வழிபடுவதற்கு உகந்தநாளாக புதன்கிழமையையும் சனிக்கிழமையையும் சொல்லுவார்கள். அதேபோல் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு விரதம் மேற்கொள்வதற்கான நாள். மாதாமாதம் விரதம் மேற்கொண்டு பெருமாளை ஸேவிக்கிற பக்தர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில், புதன்கிழமையும் ஏகாதசியும் ஒன்றாக இணைந்திருப்பது மிகுந்த விசேஷமானதாக வைணவர்களால் போற்றப்படுகிறது. மேலும், மார்கழி மாதத்தில் வருகிற ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடப்படுகிறது. அதேபோல், மார்கழி மாதத்துக்கு முந்தைய மாதமான கார்த்திகையில் வரும் ஏகாதசியையும் மார்கழிக்குப் பிறகு தை மாதத்தில் வருகிற ஏகாதசியையும் நல்ல அதிர்வுகள் கொண்ட நாளாக அறிவுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தை மாத ஏகாதசியும் புதன்கிழமையும் இணைந்த நாளில், பெருமாளின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாலே புண்ணியம். ‘ஓம் நமோ நாராயணா’ என்கிற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தாலே, உங்கள் பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம்.

விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். விரதம் இருந்து பெருமாளை ஸேவிப்பவர்களுக்கு என்ன பலன்கள் உண்டோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வேண்டிக்கொள்பவர்களுக்கு அதே பலன்கள் உண்டு என்கின்றன ஞானநூல்கள்.

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்துங்கள். அங்கே வழங்கும் துளசி தீர்த்தம் பருகுங்கள். ஏகாதசி திருநாளில், துளசித் தீர்த்தம் பருகினால், நம் உடலாலும் மனதாலும் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விமோசனம் பெறலாம் என்பது நம்பிக்கை. அப்படியே மகாலட்சுமித் தாயாரையும் ஸ்ரீஆண்டாள் நாச்சியாரையும் ஸேவித்து, மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்திக் கொடுப்பார்கள் நாச்சியார்கள்!

ஏகாதசிக்கு நிகரான திதியேது என்றொரு சொல் உண்டு. எனவே இந்த நன்னாளில், ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியையும் ஒருசேர தரிசித்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்களின் மறைமுக எதிரிகள் பலமிழந்து போவார்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் காணாமல் போகும். காரியங்களில் இருந்த தடைகளைக் காத்து, இல்லத்தில் ஐஸ்வர்ய கடாட்சத்தை அருளச் செய்வார் சக்கரத்தாழ்வார்.

ஏகாதசி புதன்கிழமையில் பெருமாளைச் ஸேவித்து பிரார்த்திப்போம். நமக்கு எல்லா சத்விஷயங்களையும் அருளிச்செய்வார் மகாவிஷ்ணு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in