தீமையை பின்பற்றினால் என்னவாகும்?

தம்மத்தின் பதம் - 10
தீமையை பின்பற்றினால் என்னவாகும்?

உலகின் உயிர்கள் எல்லாமே நன்மை, தீமைகளை அறியும் அறிவைப் பெற்றிருக்கின்றன. பூகம்பமோ, சுனாமியோ வருவதை முன்கூட்டியே உணரும் அறிவு சில நிலம்வாழ் உயிரினங்களுக்கு இருக்கின்றன.

அந்த அறிவு மனித சமூகத்திற்கும் உண்டு. ஒரு வித்தியாசம் மட்டும்தான். நன்மை எது, தீமை எது என ஆய்ந்து அதில் நன்மையை மட்டும் பின்பற்றுவது பிற உயிர்களின் வாழ்வியல். தீமையையும் பின்பற்றுவது மனித வாழ்வியல்.

‘காரண காரியம்’ கோட்பாடு

கி.மு. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞர் பிதாகரஸ், "இந்த உலகம் மனிதர்கள் என்னும் அளவுகோலால் மட்டும்தான் அளக்கப்படுகிறது" என்றார். உலகமே மனிதர்களை வைத்துத்தான் பார்க்கப்படுகிறது. அமேசான் காடுகள் அழிக்கப்படுவது மனிதர்கள் வாழ்வதற்கான நகரங்களை உருவாக்கத்தானே!

அதனால் பௌத்தம் மிகச் சரியாக தீமைகளை வரையறுக்கிறது. தீமைகளை விட்டொழித்தலைக் குறித்து மிகத்தீவிரமாக அது விளக்குகிறது. தீமை செய்தவர்கள் கண்டிப்பாக துன்பத்தை அனுபவித்தே தீருவார்கள் என்கிறது ‘காரண காரியம்’ என்னும் பௌத்த கோட்பாடு.

மனிதர்களின் எல்லாவிதமான மகிழ்வுகளையும் நலன்களையும் அழித்துவிடுவது தீமை. ஒருவர் கொள்ளும் தீமையான பார்வை அல்லது சிந்தனை அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மானுடத்திற்கே துன்பத்தை தரவல்லது என்று போதிக்கிறார் புத்தர். நன்மையிலிருந்து வெளியேறி தீமையோடு ஒருவர் இருக்கும்போது அவர் எல்லா தீமைகளையும் ஆற்றுபவராக மாறிவிடுகிறார்.

செய்க நல்லதை விரைவாய்

தீமையிலிருந்து விலக்குவாய் மனத்தை

மதிப்புறு செயலை

தாமதமாய்ச் செய்பவர்

தீமையில் ஆசை வளர்ப்பர் (தம்மபதம் 116)

நல்லதே இல்லை என்று எண்ணாதே!

தீயதைச் செய்ய நேர்கையில் அதைச் செய்ய வேண்டாம். செய்துதான் ஆகவேண்டும் என்னும் நிர்பந்தம் நேர்கையில் அதைத் தொடரக் கூடாது. தீயதைச் செய்வதில் இன்பத்தைக் காண்பது தவறு. கூடாது. அது சேரசேர கூடவே துன்பம் வந்து சேரும்.

ஒருமுறை கோசலத்தில் புத்தர் இருக்கும்போது, அவர் வந்திருப்பதை அறிந்த சிலர் சென்று புத்தரை சந்திக்கின்றனர். அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் புத்தர்.

“உடல் தொடர்பான தீமைகள் மூன்று, பேசுவதினால் உண்டாகும் தீமைகள் நான்கு, எண்ணங்களால் ஏற்படும் தீமைகள் மூன்று.

உடல் தொடர்பான தீமைகள்: கொலை செய்தல், களவு செய்தல், பிறழ்காமம் கொள்ளுதல்

பேசுதல் தொடர்பான தீமைகள்: பொய் கூறுதல், பூசல்களை உண்டாக்கும் வகையில் புறம் கூறுதல்,கடுஞ்சொல் கூறுதல், பயனற்றவைகளைப் பேசுதல்

எண்ணங்களுடன் தொடர்புடைய தீமைகள்: பிறர்பொருளைக் கவர நினைத்தல், தீங்கிழைக்க எண்ணுதல், உலகில் நல்லதே இல்லை என்று எண்ணுதல்” என்று தீமைகளுக்கான ஒரு விளக்கத்தை புத்தர் தந்தார்.

மதிப்புறு நற்செயல்

செய்திட நேர்ந்தால்

தொடர்தல் வேண்டும் அதை

அதன் பயனே இணையற்ற இன்பம்

நற்செயல் கூடகூட

இன்பம் அதிகரிக்கும் (தம்மபதம் 118)

தீய செயல்களைச் செய்பவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். எதுவரை அப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால் அது துன்பம் தரும் வரை. அறிவற்றவர் தீமையினால் துளித்துளியாய் துன்பங்களை நிரப்பிக்கொள்கிறார். அறிவுடையவர் நன்மைகளால் தம்மை நிரப்பிக்கொள்கிறார்.

காயமற்ற கைகளில்

எடுத்தால்

நஞ்சுகூட உடலில் ஏறாது

தீமையற்ற மனதி

தீச்செயல் இருக்காது (தம்மபதம் 124)

தப்பவே முடியாது!

காற்றுக்கு எதிர் திசையில் நின்று தூற்றினால், தூற்றுபவர் மீதே அனைத்துப் பதர்களும் வந்து படியும். அப்படித்தான் நல்லவர்களைத் துன்புறுத்தும் மக்களுக்குத் தீமைகள் வந்து சேரும்.

எல்லைகளற்று விரிந்து கிடக்கும் வானம், இதோ அலைகளால் சதா சூழப்பட்டு இருக்கும் இந்தப் பெருங்கடல், யாராலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் மலைச்சிகர குகை, பரந்து விரிந்திருக்கும் பாரின் ஏதாவது ஒரு மூலை முடுக்கு என்று எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் தீமை செய்யும் ஒருவர் அது தரும் துன்பத்திலிருந்து தப்பவே முடியாது. அவரை அது அடைந்தே தீரும்.

அதற்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றில்லை. இப்பிறப்பிலேயே அவர் அதற்கான துன்பத்தை அடைவார். முற்பகல் செய்யும் இன்னா பிற்பகல் தாமே வரும் என்னும் வள்ளுவம் இதைத்தான் கூறியிருக்கலாம்.

தீமைகளை அறிந்து அவற்றிடமிருந்து விலகி அவற்றைச் செய்யாமல், எந்தப் பலன் அதனால் கிடைத்தாலும் அறவே தீமைகளைச் செய்யாமல் இருந்தால் நன்மை இவ்வுலகைச் சூழும். இல்லை என்றால் இவ்வாழ்வே துன்பம் நிறைந்ததாய் மாறிவிடும்.

துன்பமற்ற பெருவாழ்வு நாம் செய்யும் நன்மைகளால் மட்டுமே விளையும்.

பெருஞ்செல்வம் கொண்ட

வணிகனொருவன்

பாதுகாப்பற்ற ஆபத்தான

வழிதனில் செல்வதில்லை

வாழ்தல் விரும்புபவர்

நஞ்சை உண்ண மாட்டார்

தீமையையும் ஒருவர்

அப்படியே விலக்க வேண்டும் (தம்மபதம் 123)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
தீமையை பின்பற்றினால் என்னவாகும்?
தன்னை வென்றவரே மாவீரர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in