’செவ்வாய் தோஷ’ பயம் வேண்டாம்!

- செவ்வாய் ஹோரையில் வேண்டினால் தோஷங்கள் விலகும்!
’செவ்வாய் தோஷ’ பயம் வேண்டாம்!

செவ்வாய் தோஷம் என்று பொதுவாகச் சொல்லிவிடக் கூடாது. செவ்வாய் தோஷத்தில் பல விலக்குகள் உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய் பகவானுக்கு செந்நிற ஆடைகள் சார்த்தி, செவ்வாய்க்கு அதிபதியாக முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வேண்டிக்கொண்டால் தோஷங்கள் விலகும். செவ்வாய் ஹோரையில் பிரார்த்தனைகள் செய்வதால் தோஷங்களின் தாக்கம் குறையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான தருணம். இதை வாழ்க்கையின் இரண்டாம்பாகம் என்றுகூட சொல்லுவார்கள். திருமணம் என்பது ஒருவருக்கு நடந்தேறுவதற்கு, செவ்வாய் பகவான் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார். திருமண வரன் பார்க்கும்போது, முதலில் பார்க்கப்படுவது ஜாதகம்தான். அதன் பிறகுதான், பெண்ணை மாப்பிள்ளையோ, மாப்பிள்ளையை பெண்ணோ பார்ப்பது நடந்தேறும். ஒருவரின் திருமண வாழ்வில், செவ்வாய் என்பதும் செவ்வாய் பகவான் என்பவரும் செவ்வாய் தோஷம் என்பதும் முக்கியாகப் பார்க்கப்படுகிறது.

ஜனன ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரன் முதலானோருக்கும் செவ்வாய் இருக்கின்ற இடத்துக்கும் உள்ள தொடர்பை வைத்துத்தான், செவ்வாய் தோஷம் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த அளவுக்கு வலிமைமிக்கதாக இருக்கிறது, வலிமை இழந்து இருக்கிறது என்பதைக் கணிக்கிறார்கள் ஜோதிடர்கள்.

லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் முதலான கிரகங்கள் இருக்கும் இடத்துக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம் மற்றும் 12-ம் இடம் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் செவ்வாய் இருந்தால், அதையே செவ்வாய் தோஷம் என்று சொல்லுகிறார்கள். ஆனால், இந்த இடங்களில் செவ்வாய் இருந்து, குரு பகவான், சனி பகவான், சூரிய பகவான் ஆகியோரின் சேர்க்கை பெற்றிருந்தால் அல்லது பார்வை பெற்றிருந்தால் அதை தோஷமாகக் கருதவேண்டிய அவசியமில்லை என்கிறார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

மேலும் அவர், செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம் முதலான ராசிகளில் இருந்தாலும் தோஷம் கணக்கிலெடுக்கத் தேவையில்லை. கடகம், சிம்மம் லக்னத்துக்கு செவ்வாய் தோஷமே இல்லை. செவ்வாய் பகவான் இருக்கின்ற இடம் 2-ம் வீடாக இருந்து, அந்த வீடு மிதுனம் அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமாகப் பார்க்கத் தேவையில்லை என்கிறார்.

இதுபோல், ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த பிறகே செவ்வாய் தோஷம் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். பொதுவாகப் பார்த்துவிட்டு, செவ்வாய் தோஷம் இருக்கிறது, இல்லை என்று சொல்வது ஜோதிட ரீதியாகவே தவறானது. அதைப் பலரும் செய்கிறார்கள். அதேபோல், மக்களும் இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறு என்கிறார் ஜோஸ்யர்.

செவ்வாய் தோஷம் என்பது திருமணத் தடையைக் கொடுக்கும். ஜாதகங்கள் எல்லாம் தட்டிக்கொண்டே போகும். உரிய வயது வந்தும் கூட திருமணம் நடைபெறாத துக்கம், மொத்தக் குடும்பத்தையும் ஒரு சாபம் போல் ஆட்டுவிக்கும். திருமணம் மட்டுமின்றி வாழ்க்கையில் பல சிக்கல்களையும் இடையூறுகளையும் தரக்கூடியது செவ்வாய் தோஷம்!

செவ்வாய்க்கு உரிய அதிபதி முருகக் கடவுள். அதனால்தான் செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

அதேபோல் நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானை பிரார்த்தனை செய்வதும், நவக்கிரகத் திருத்தலங்களில் செவ்வாய் பகவானுக்கு உரிய திருத்தலமாகத் திகழும் வைத்தீஸ்வரன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் அங்காரக வழிபாடும் பிரார்த்தனையும் செவ்வாய் தோஷத்தின் மொத்தத் தடைகளையும் நீக்கி அருளச் செய்யும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

ஆண், பெண் இருவருக்குமே செவ்வாய் தோஷம் என்றால் இருவரும் தாராளமாகத் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவருக்கு மட்டும் தோஷம், மற்றொருவருக்கு இல்லை என்றால், திருமணம் செய்து கொள்ளக்கூடாது. இதனால் திருமணத்துக்குப் பிறகு சோகங்களும் பிரச்சினைகளும் தலைதூக்கும் என்கிறார்கள்.

வைத்தீஸ்வரன் கோயிலில், அங்காரகனை வழிபடவேண்டும். செவ்வாய் ஹோரை நேரத்தில் வீட்டில் இருந்தபடியும் முருகப்பெருமானையும் நவக்கிரங்களில் உள்ள செவ்வாய் பகவானையும் மனதார வழிபடலாம். அங்காரகனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சார்த்தி அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டு, ஆதி வைத்தியநாதரை தரிசித்து அங்கே உள்ள அரசமரத்தடி விநாயகப் பெருமானையும் ஆலமரத்தையும் வலம் வந்து வேண்டிக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் தாக்கமானது குறையும். செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய் ஹோரைகளில் சுமங்கலிகளுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு சிவப்பு நிறப் புடவைகள் ஜாக்கெட்டுகள், சிவப்பு நிற வளையல்களை வழங்கி நமஸ்கரித்து வந்தால், செவ்வாய் தோஷம் முழுவதுமாக நீங்கப் பெறலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in