'இது ஆன்மிக விழா, அரசியல் நுழையக் கூடாது!' - வீடியோ வெளியிட்டார் தருமபுரம் ஆதீனம்

'இது ஆன்மிக விழா, அரசியல் நுழையக் கூடாது!' - வீடியோ வெளியிட்டார் தருமபுரம் ஆதீனம்
கடந்தாண்டு பல்லக்கில் உலா வந்த தருமபுரம் ஆதீனகர்த்தர்

தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டினப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், இதில் அரசியல் நுழையக் கூடாது, இது ஆன்மிக விழா என்று காணொலி மூலம் தெரிவித்திருக்கிறார் தருமபுரம் ஆதீனம்.

நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீன கர்த்தர்
நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீன கர்த்தர்

மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்தில் குருமுதல்வர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக ‘பட்டினப்பிரவேசம்’ நிகழ்வு இன்று இரவு 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தருமபுரம் ஆதீனகர்த்தரை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பல்லக்குத் தூக்கிகள் தூக்கிச் செல்லும் நிகழ்வு நடைபெறும்.

மனிதனை மனிதன் சுமக்கக் கூடாது என்று இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் இந்த நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடைக்கு இந்து அமைப்புகள், ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை ஆதீனம் உள்ளிட்டவர்கள் தாங்களே முன்னின்று பல்லக்கில் ஆதீனகர்த்தரை அமர வைத்து தூக்கிச் செல்லத் தயார் என்று கூறியிருந்தனர். பல்வேறு மடாதிபதிகளும் தமிழக அரசிடம் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு முதல்வர் குருபூஜை விழா திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தேரோட்டமும், நேற்று நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதினகர்த்தர் அமர, அவரை பல்லக்குத் தூக்கிகள் குருமுதல்வர் குரு மூர்த்தத்திற்கு சுமந்து செல்லும் நிகழ்வும் வழக்கம்போல் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுமான பட்டினப்பிரவேசம் நிகழ்வு இன்று இரவு 10.30 அளவில் நடைபெற உள்ளது. இதில் திட்டமிட்டவாறு இந்துக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் தருமபுரம் ஆதீனகர்த்தர் இதுகுறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பட்டினப்பிரவேசம் நிகழ்வு ஒரு ஆன்மிக விழா. இதில் அரசியல் நுழையாமல் பார்த்துக்கொள்வது மடத்தின் வழக்கம். அப்படி அரசியல் நுழையாமல் பாதை வகுக்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரை அப்படித்தான் இந்த விழா நடந்து வந்திருக்கிறது. இந்த வருடமும் அதன்படியே அரசியல் நுழையாதவாறு விழா நடக்க வேண்டும்" என்று ஆதீனகர்த்தர் கூறியுள்ளார்.

பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஆதீனத்துக்குச் சொந்தமான கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 10 ஆயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்படுகிறது. 27 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்குத் தையல் எந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆதினம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, வாழை மரங்களும் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன.

தடை, தடை விலக்கம், அதன் தொடர்ச்சியான அரசியல் சர்ச்சைகள் என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனையொட்டி மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in