நாற்காலி பல்லக்கில் பவனி வந்த தருமபுரம் ஆதீனம்!- சுமந்து சென்ற சீடர்களே

நாற்காலி பல்லக்கில் பவனி வரும் ஆதீனம்
நாற்காலி பல்லக்கில் பவனி வரும் ஆதீனம்

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்று வரும் குருபூஜை விழாவில் இன்று தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் பவனிவந்து குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞான சம்பந்தரின் கமலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதில் ஒரு பகுதியாக பட்டனப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டின் குருபூஜை விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா இன்று காலை தொடங்கியது. ஆதின மரபுப்படி தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நாற்காலி பல்லக்கில் பவனி வந்தார்.

இன்று காலை திருமணத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் அமர்ந்து சென்று மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். குருவாக இருந்து மறைந்தவர்களின் குரு மூர்த்தத்தை தரிசிப்பதற்கு தற்போதைய குருவாக உள்ளவர் இப்படி நாற்காலி பல்லக்கில் அமர்ந்து செல்வது வழக்கம்.

அதனடிப்படையில் தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் இன்று நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார். அதனை எப்போதும்போல் ஆதீனத்தின் சீடர்களே தூக்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in