`தருமபுர ஆதீனத்திற்கு நானே சென்று பல்லக்கை சுமப்பேன்; உயிரே போனாலும் பரவாயில்லை'

மதுரை ஆதீனம் ஆவேசம்
`தருமபுர ஆதீனத்திற்கு நானே சென்று பல்லக்கை சுமப்பேன்; உயிரே போனாலும் பரவாயில்லை'

தருமபுர ஆதீனத்திற்கு நானே சென்று பல்லக்கை சுமப்பேன் என்றும் உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் மதுரை ஆதீனம் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டன‌ப்பிரவேசம் என்ற நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட சில தினங்களுக்கு முன்னர் கேட்டுகொண்டிருந்தார்.

அதன்பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன்படி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலும் பட்டனப்பிரவேச நிகழ்வில் ஆதின கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு பல்வேறு ஆன்மிக பேரவைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கோட்டாட்சியரின் உத்தரவை திரும்பபெற்று பட்டனப்பிரவேசம் நிகழ்ச்சியை தடையின்றி நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் ஆன்மிக சமய பாதுகாப்பு பேரவையினர் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், "தருமபுர ஆதீன மடத்துக்கு ஆளுநர் வந்து சென்ற விவகாரத்தில்தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். உயிரே போனாலும் பரவாயில்லை. எனது குருவான தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்.

சைவத்தையும், தமிழையும் பாதுகாத்து வருகிறார் தருமபுரம் ஆதீனம். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் சொல்வேன். முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை, எடுக்கக்கூடாது என சொல்லக்கூடாது. அதுபோலத்தான் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியும். தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும். 500 ஆண்டாக நடக்கும் பாரம்பரியத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. வெள்ளைக்காரர் இருக்கும்போதும், காங்கிரஸ் இருக்கும்போதும், கலைஞர் இருக்கும்போதும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக நடந்த இந்த நிகழ்ச்சியை நிறுத்துவது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.