தொடங்கியது துலா உற்சவம்; புனித நீராடினர் பக்தர்கள்!

தொடங்கியது துலா உற்சவம்;
புனித நீராடினர் பக்தர்கள்!

ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்றின் துலா கட்டத்தில் புராணப் பெருமை வாய்ந்த  துலா உற்சவம்  இன்று தொடங்கியது. முதல் நாளில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

பாவங்களைப் போக்கும் நதியாக போற்றப்படுவது கங்கை நதி. அப்படி தங்களின் பாவங்களைப் போக்க கங்கையில் பக்தர்கள் புனித நீராடியதால் நதி  முழுவதும் ஒரு காலத்தில்  கருப்பு நிறமாக மாறிப்போனதாம்.  அதனால் தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் சென்று கங்கை நதி வேண்டிக் கொண்டதாம். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் கங்கைக்கு வரம் அளித்தாராம். 

அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாளும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக  ஐதீகம். இதனை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் துலா உற்சவமாக கொண்டாடி வருகின்றனர்.  அந்த நாட்களில் மக்கள் துலா கட்டத்தில் உள்ள காவிரியில் மூழ்கி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர்.

இந்த ஆண்டு ஐப்பசி மாதம் இன்று  பிறந்ததையொட்டி  இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக் கட்டத்திற்கு வந்து புனித நீராடி வருகின்றனர்.  மதியம் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த மாதம் முழுவதுமே மயிலாடுதுறையில் உள்ள ஒவ்வொரு கோயில்களில் இருந்தும் தீர்த்தவாரிக்காக உற்சவர்கள் துலா கட்டத்திற்கு  எடுத்து வரப்பட்டு  தீர்த்தவாரி நடைபெறும். அதனால் இந்த மாதம் முழுவதும் துலா கட்ட காவிரியில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in