‘கட்டுக்கடங்காத கூட்டம்... வருகையை மறுபரிசீலனை செய்க!'

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை
‘கட்டுக்கடங்காத கூட்டம்...  வருகையை மறுபரிசீலனை செய்க!'

கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுவதால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வார விடுமுறை தினங்கள் என்பதாலும் திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நேற்று காலையிலேயே கோயிலுக்கு வெளியே நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் கூட்டம் வரிசையில் நின்றது. சுமார் 15 மணி நேரம் காத்திருந்து அவர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.

நேற்று மதியத்துக்கு மேல் கூட்டம் மேலும் அதிகரித்ததால் தரிசனத்துக்கு 20 மணி நேரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக அதிக அளவில் வருகின்றனர். இதனால் பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 மண்டபங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று இரவு முதல் 40 மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்தே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிகிறது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 48 மணி நேரத்திற்கு மேலாக ஏழுமலையானை தரிசிப்பதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தங்கள் வருகையை பக்தர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in