அறநிலையத் துறையினருக்கு அனுமதி மறுத்த தீட்சிதர்கள்: சிதம்பரத்தில் நடந்தது என்ன?

அறநிலையத் துறையினருக்கு அனுமதி மறுத்த தீட்சிதர்கள்: சிதம்பரத்தில் நடந்தது என்ன?
கோயிலில் அறநிலையத்துறை குழுவுடன் பேச்சு நடத்தும் தீட்சிதர்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழு, இரண்டு நாள் ஆய்வுக்காக இன்று கோயிலுக்கு வந்த நிலையில், ஆய்வுக்கு தீட்சிதர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஆய்வு நடைபெறவில்லை.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் அங்குள்ள பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழிபாட்டு முறைகளிலும், நிர்வாகத்திலும் தீட்சிதர்கள் நிர்ணயிப்பதே முடிவாக இருக்கிறது. அதனால் அடிக்கடி பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுவது வழக்கம். தேவாரம் பாடுவது, கனகசபையில் மேலே ஏறி தரிசிப்பது என்று அவ்வபோது பிரச்சினைகளில் இருந்து வந்திருக்கின்றன.

தீட்சிதர்கள் விதிக்கும் பல்வேறு நிபந்தனைகள் பக்தர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அதனால் கோயிலை அரசு நிர்வாகத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. கடந்த முறை திமுக ஆட்சியின்போது கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

அறநிலையத்துறை குழுவினர்
அறநிலையத்துறை குழுவினர்

ஆனால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தீட்சிதர்கள் கோயிலைக் கொண்டு வந்தனர். அதிலிருந்து பெரிதாக பிரச்சனைகள் எதுவும் இல்லாத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க மறுக்கும் விவகாரம் மீண்டும் பூதாகாரமானது.

கனகசபை மீது ஏறி நடராஜரைத் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் சிதம்பரத்தில் திரண்டுவந்து தினந்தோறும் போராட்டங்களை நடத்தினர். ஒரு கட்டத்தில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் அளவுக்கு அது சென்றது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் கனகசபையில் ஏறி பக்தர்கள வழிபடலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையை தீட்சிதர்களின் எதிர்ப்புக்கிடையே காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிறைவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் கோயில் வரவு, செலவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு நடத்த அறநிலையத்துறை சார்பில் குழு அனுப்பப்படும், அதற்கு தீட்சிதர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சபைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதற்கு தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி ஆய்வு நடத்துவதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பினர். குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களுக்கும் இதுகுறித்த கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்கள்.

இந்த நிலையில் வடலூருக்கு நேற்று வருகை தந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திடீரென சிதம்பரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டதுடன், தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எதையும் மறுப்பதால் தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே மறுக்காமல் ஆய்வு நடத்த தகுந்த ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பேச்சு வார்த்தை
பேச்சு வார்த்தை

அதன்படி இன்று முன்பு அறிவித்தபடி அறநிலைத்துறை சார்பிலான குழு, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தது. ஐந்துபேர் கொண்ட இக்குழுவில் இணை ஆணையர்கள் லட்சுமணன், நடராஜன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், அறநிலைத்துறை கோயில் நிர்வாக வருவாய் அலுவலர் சுகுமார், துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

கோயிலுக்கு வந்த குழுவினரை வரவேற்ற தீட்சிதர்கள், குழுவினருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் மற்றும் பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலையும், அத்துடன் கடிதம் ஒன்றையும் கொடுத்தனர். அவற்றைச் சுட்டிக்காட்டி கோயிலில் ஆய்வு நடத்த அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடம் பேச்சு நடத்திய நிலையில் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள முடியாமல் கோயிலை விட்டு வெளியேறினர். இதனால் சிதம்பரத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in